Close
மே 21, 2025 3:25 காலை

சிறுவாபுரி முருகன் கோயிலில் அன்னதான விரிவாக்க திட்டம் : எம்எல்ஏ தொடங்கிவைத்தார்..!

அன்னதான திட்டத்தை தொடங்கிவைத்த பொன்னேரி எம்.எல்.ஏ., துரை.சந்திரசேகர்

பெரியபாளையம்:

சிறுவாபுரி முருகன் கோவிலில் அன்னதான விரிவாக்க திட்டத்தை பொன்னேரி எம்எல்ஏ தொடங்கி வைத்தார். சட்டமன்ற அறிவிப்பின் படி திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 6வாரங்கள் இங்கு வந்து கோவில் பின்புறம் உள்ள வேப்ப மரத்தடியில் நெய்தீபம் ஏற்றி வைத்து பாலசுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்து வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோவிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். கோவிலுக்கு சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம் மட்டுமல்லாது அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

அண்மையில் சட்டமன்ற அறிவிப்பில் பக்தர்கள் அதிகளவு வந்து செல்லும் கோவில்களில் அன்னதான திட்ட பயனாளிகள் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனையடுத்து சிறுவாபுரி முருகன் கோவிலில் அன்னதான விரிவாக்க திட்டத்தை பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர் தொடங்கி வைத்தார். செவ்வாய் கிழமைகளில் அன்னதான திட்ட பயனாளிகள் 500 பக்தர்களில் இருந்து 2000 பக்தர்களாகவும், ஞாயிற்றுக்கிழமைகளில் 100 பக்தர்களில் இருந்து 500 பக்தர்களாகவும் அதிகரிக்கப்பட்டு அன்னதான விரிவாக்க திட்டத்தை பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பக்தர்களுடன் அமர்ந்து பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர் அன்னதானத்தை பெற்று கொண்டு உணவருந்தினார். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலை துறையின் வேலூர் மண்டல இணை ஆணையர் கருணாநிதி, திருவள்ளூர் மாவட்ட உதவி ஆணையர் சிவஞானம், கோயில் செயல் அலுவலர் மாதவன், தலைமை குருக்கள் ஆனந்தன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் சந்துரு மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top