Close
மே 25, 2025 3:28 காலை

நாமக்கல் வழிப்பறி வழக்கில் தலைமறைவான கேரள லாரி டிரைவர் 17 ஆண்டுக்கு பிறகு கைது..!

நாமக்கல் அருகே நடைபெற்ற வழிப்பறி வழக்கில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு போலீசாரால் கைது செய்யப்பட்ட, கேரள லாரி டிரைவர் உதயகுமார்.

நாமக்கல்:

நாமக்கல் அருகே நடைபெற்ற ரூ. 6.60 லட்சம் வழிப்பறி வழக்கில் தலைமறைவான, கேரளா மாநிலத்தைச் சேர்ந்த லாரி டிரைவரை, 17 ஆண்டுகளுக்குப் பிறகு, நாமக்கல் போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், சுங்கக்காரம்பட்டியை சேர்ந்தவர் ரவிக்குமார் (46). அவர், நாமக்கல் கருப்பட்டிபாளையத்தில் உள்ள தனியார் கம்பெனியில் கேஷியராக பணியாற்றி வந்தார். கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி, காலை 11:20 மணிக்கு, ரவிக்குமார் பேங்கில் செலுத்துவதற்காக கம்பெனி பணம் ரூ. 6.60 லட்சம் எடுத்துக்கொண்டு, ஒரு டூ வீலரில் நாமக்கல் நோக்கி சென்றார். அவருக்கு பின்னால் மற்றொரு டூ வீலரில் வந்த 2 மர்ம நபர்கள், அவரை வழிமறித்து, இரும்பு கம்பியால் தாக்கி கீழே தள்ளிவிட்டு பணத்தை பறித்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டனர்.

இது குறித்து, நாமக்கல் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பேரையூர் பிரபு (எ) பிரபாகரன் (39), திருச்சி, சிந்தாமணி போலீஸ் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த குரு (எ) ரங்கநாதன் (37), திண்டுக்கல் நாவல்நகரைச் சேர்ந்த பிரகாஷ் (37), திருச்செங்கோடு எரையம்பட்டி சுரேஷ் (49), நாமக்கல் காதப்பள்ளி மூர்த்தி (40), கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த கணேஷ் (எ) கணேஷ்குமார் (44), லாரி டிரைவர் உதயா (எ) உதயகுமார் (42) உட்பட 10 பேர் இந்த திருட்டு வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

அவர்களில், கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்த உதயா (எ) உதயகுமார், கணேஷ் (எ) கணேஷ்குமார் ஆகியோர் அண்ணன், தம்பி. இவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டனர். இந்த நிலையில், கேரளாவில் பதுங்கி இருந்த உதயா (எ) உதயகுமாரை, நாமக்கல் போலீசார் கைது செய்தனர். வழிப்பறி வழக்கில், தலைமறைவான குற்றவாளி, 17 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top