Close
ஜூன் 8, 2025 10:40 மணி

மதுக்கூர் வட்டாரத்தில் 450 ஏக்கரில் குறுவை சாகுபடி இலக்கு : விவசாயிகளுக்கு மானிய உதவிகள்..!

மதுக்கூர் வட்டாரம் நெம்மேலி கிராமத்தில் நெல் இயந்திர நடவு மேற்கொண்டுள்ள விவசாயி..சேதுராமன்

மதுக்கூர் வட்டாரத்தில் 450 ஏக்கரில் குறுவை சாகுபடி 2025ம் ஆண்டுக்கான சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :-

மதுக்கூர் வட்டாரத்தில் இதுவரை 850 எக்டர் வரை குறுவை சாகுபடி விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுக்கூர் வட்டாரத்தில் 1540 எக்டர் குறுவை சாகுபடி பரப்பு இலக்காக வழங்கப்பட்டுள்ளதில் மீதம் 750 எக்டர் நடப்பு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

நெல் சாகுபடி விவசாயிகளுடன் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி

நெல் சாகுபடி காலங்களில் குறுவைப் பருவத்திலேயே வேளாண் உற்பத்தியைப் பெருக்கி விவசாயிகளின் வாழ்வில் வளமை ஏற்படுத்திட தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் 21 டன் சான்று பெற்ற நெல் விதைகளுக்கு மானியம், திரவ உயிர் உரங்களுக்கு 87 எக்டருக்கு 50% மானியம் எக்டருக்கு 12.5 கிலோ வீதம் நெல் நுண்ணூட்டத்திற்கு 50 சத மானியம் மற்றும் நெல் இயந்திர நடவு பின்னேற்பு மானியமாக ஏக்கர் ஒன்று ரூபாய் 4000 வீதம் 450 ஏக்கருக்கு ரூபாய் 18 லட்சம் மானியம் மதுக்கூர் வட்டார குறுவை சாகுபடி மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

இயந்திரம் மூலம் நெல் நடவு செய்துள்ள விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு அடங்கல், மிஷின் நடவு மேற்கொண்டதற்கான பட்டியல், கணினி சிட்டா, ஆதார் மற்றும் பாஸ்புக், லேட்லாங்குடன் கூடிய புகைப்படம் ஆகியவற்றை தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவலர் பரிந்துரையுடன் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்வதற்கு 400 ஏக்கரும், எள் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க 25 ஏக்கரில் சிறப்பு திட்டம் மதுக்கூர் வட்டாரத்துக்கு இலக்கு வழங்கப்பட்டுள்ளது. பயறு மற்றும் என் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 50% மானியத்தில் சான்று பெற்ற விதைகள், சூடோமோனஸ் ,திரவ உயிர் உரங்கள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. விவசாயிகள் உடன் வேளாண் உதவி அலுவலரை அணுகி பயன்பெற மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top