Close
ஜூன் 15, 2025 3:43 காலை

ராசிபுரம் பகுதியில் 2 தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையங்கள் : அமைச்சர் திறப்பு..!

ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் மலையாம்பட்டி கிராமத்தில், புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையத்தை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார். அருகில் ராஜேஷ்குமார், எம்.பி.,

நாமக்கல் :

ராசிபுரம் அருகே 2 கிராமங்களில் ரூ. 37.55 லட்சம் மதிப்பில், 2 புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையங்களை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.

ராசிபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், அ.மின்னக்கல் ஊராட்சி மற்றும் ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் மலையாம்பட்டி ஊராட்சி ஆகிய இடங்களில், ரூ. 37.55 லட்சம் மதிப்பில் 2 புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார், எம்.பி., தலைமையில் நடைபெற்றது.

தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் விழாவில் கலந்துகொண்டு பால் குளிரூட்டும் நிலையங்களை திறந்து வைத்து, சிறந்த பால் உற்பத்தியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறிதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு கடந்த 4 ஆண்டுகளில், விவசாயிகள் பயன்பெறும் வகையில் பால் உற்பத்தியாளர்களின் நலன் காத்திட லிட்டருக்கு ரூ.3 வரை ஊக்கத்தொகை, கொழுப்பு நிறைந்த பாலுக்கு ரூ.1 கூடுதல் தொகை மற்றும் போனஸ் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

ஆவின் கால்நடைத் தீவனம் விற்பனை செய்யும் சங்க பணியாளர்களுக்கு 50 கிலோ மூட்டை ஒன்றுக்கு ரூ.30 ஊக்கத்தொகையாகவும், சங்கங்களுக்கு ஊக்கத்தொகையாகவும் வழங்கப்பட்டு வருகிறது. வருடந்தோறும் சங்கம் ஈட்டிய லாபத்தில் பால் வழங்கும் உறுப்பினர்களுக்கு 50 சதவீதம் போனஸ், பங்கு ஈவு மற்றும் ஆதரவு தள்ளுபடி தொகை வழங்கப்படுகிறது.

மேலும் பால் உற்பத்தியாளர்களுக்கு கடன் உதவி உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் ராசிபுரம், நாமக்கல் மற்றும் சேந்தமங்கலம் சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ. 1.82 கோடி மதிப்பீட்டில் 8 புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையங்களை திறந்து வைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், அட்மா குழுத்தலைவர்கள் வெண்ணந்தூர் துரைசாமி, ராசிபுரம் ஜெகன்நாதன், ஆவின் பொது மேலாளர் சண்முகம், துணைப்பதிவாளர் (பால்வளம்) சண்முகநதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top