Close
செப்டம்பர் 20, 2024 1:28 காலை

புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதீனத்தில் உலக மகளிர் தின விழா

புதுக்கோட்டை

புதுக்கோட்டை திலவதியார் திருவரூள் ஆதீனத்தில் நடந்த உலக மகளிர் தின விழாவில் விருது வழங்கிய தமிழ்பல்கலைக்கழக துணை வேந்தர் திருவள்ளுவன்

புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் நடைபெற்ற உலக மகளிர் தினவிழாவை முன்னிட்டு சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விழாவுக்கு  திலகவதியார் திருவருள் ஆதீனகர்த்தர் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள் தலைமை வகித்து பேசியதாவது: இந்திய நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகளை புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் பெற்றுள்ள நிலையில் 7 -ஆவது நபராக விராலிமலையைச் சேர்ந்த சதிராட்டக் கலைஞர் இரா.முத்துக்கண்ணம்மாள் பெற்றிருப்பது மாவட்டத்துக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.

மற்றவர்களில் முதலாவதாக பத்மபூஷண் விருது பெற்ற டாக்டர் முத்துலட்சுமிஅம்மையார், பத்மஸ்ரீ விருது பெற்ற நடிகர் ஜெமினிகணேசன், பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் எஸ். கிருஷ்ணமூர்த்தி(டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரின் மகன்) பத்மஸ்ரீ விருதுபெற்ற பேராசிரியர் பாலா என்ற பாலசந்திரன், பத்மஸ்ரீ விருது பெற்ற தவில் கலைஞர் வலையப்பட்டி ஏ.ஆர். சுப்பிரமணியன் ஆகியோர் ஆவர்.  இவர்களுடன் திருமயத்தை பூர்வீகமாகக் கொண்ட அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவியாக டாக்டர் முத்துலட்சுமி அம்மையாருக்கு பின்னர் இருந்து வந்த டாக்டர் சாந்தா பத்மஸ்ரீ , பத்மவிபூஷண் ஆகிய விருதுகளை பெற்றவர் ஆவார். இவர் பிறந்து வளர்ந்தது அனைத்தும் சென்னை மாநகரம் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டையில் அழிந்து வருகின்ற கலைகளில் ஒன்றான சதிராட்டக் கலையில் 70 ஆண்டுகளுக்கு மேலாக நடனம் ஆடியும் வளர்த்தும் வந்துள்ள இரா.முத்துக்கண்ணமளை தேர்வு செய்தது மிகவும் பொருத்தமாகும். அவருக்கு ஆதீனத்தின் சார்பில் சதிராட்டக்கலை வித்தகி எனும் பட்டத்தை தமிழ் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் கரங்களால் வழங்குவது சிறப்புக்குரியதாகும்.

அதே போல் மயானத்தில் சடலங்களை எரியூட்டும் பணியில் கடந்த 16 ஆண்டுகளாக புதுக்கோட்டையில் மனித நேயத்தோடு செய்து வருகின்ற பெண்மணியான அ. வசந்தி அவர்களுக்கு மனித நேய திலகம் எனும் பட்டத்தையும், பல்லண்டுகயாக நமது சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டும் பழித்தும் கூறப்பட்டு வந்த திருநங்கையரின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருந்து வருகின்ற, புதுக்கோட்டை மாவட்ட திருநங்கைகள் சங்கத் தலைவர் திருநங்கை அசினா அவர்களுக்கு திருநங்கையர் சமுதாயக் காவலர் எனும் பட்டத்தையும் துணைவேந்தர் வழங்குவது எத்தனை பொருத்தாக உள்ளது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். .இது போன்ற விழாவினை திலகவதியார் திருவருள் ஆதீனம் தொடர்ந்து  நடத்தும் என்றார்.

விழாவில் தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் பங்கேற்று, மூவருக்கு விருதளித்து பேசியதாவது: துணைவேந்தராக பொறுப்பேற்று கலந்து கொள்கின்ற புதுக்கோட்டையின் முதல் விழாவான இவ்விழாவில் மற்றவர்களுக்கு வழிகாட்டும் வண்ணம் உயர்ந்த பெண்களுக்கும், ஒதுக்கப்பட்ட பாலினமாக இருந்து வந்த திருநங்கையருக்கும் விருது வழங்குவதில் தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் என்ற வகையில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன்.

சங்க காலத்தில் ஒளவையார் முதல் பக்தி இலக்கியத்தில் காரைக்கால் அம்மையார் வரை பெண்ணினமும் திறமையையும், அறிவாற்றலையும் பெற்றிருந்தார்கள் என்பதை உணரமுடிகிறது. இடைப்பட்ட காலத்தில் சமூக சூழ்நிலை காரணமாக சில மாற்றங்கள் ஏற்பட்டு மகளிருக்கு தொய்வு ஏற்பட்டது. மீண்டும் எழுந்து நின்று எழுச்சியை பெறுகின்றதை நாம் கண்டு வருகிறோம். இருப்பினும் இன்னும் சோதனைகளை அவர்கள் கடந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.
பேய்களை பார்த்ததில்லை… ஆனால் திருமணமாகி விட்டது என்று ஹைக்கூ கவிதை என்ற பெயரில் ஒரு கவிஞர் ஆணாதிக்க சிந்தனையில் இப்படி எழுதுகிறார். இந்நிலையினை உடைத்தெறிய வேண்டிய சூழலில்தான் மகளிர் வாழ்ந்து வருகின்றனர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த போது கடந்த 2013-ஆம் ஆண்டு மாணவ விள்ணப்பப் படிவத்தில் இருபாலினத்தவருடன் மூன்றாம் பாலினத்தவரான திருநங்கையரையும் இணைந்தோம். தற்போது நான் பணியாற்றி வருகின்ற தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் திருநங்கை முது நிலை பட்டம் படித்து வருகிறார்.

இவ்விழாவின் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ள இரா, முத்துக்கண்ணம்மாளின் கலைப்பணியினை நாம் அணைவரும் பாராட்ட வேண்டும், அதேபோல், சடலங்களை எரியூட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்ற அ. வசந்தியை எத்தனை பாரட்டினாலும் தகும். அவருக்கு மனித நேய திலகம் எனும் பட்டம் அளிப்பதும், திருநங்கையர்களுக்கு வழிகாட்டியாக தாயாக இருந்து வருகின்ற புதுக்கோட்டை மாவட்ட திருநங்கைகள் சங்கத்தலைவர் திருநங்கை அசினா ஆகியோருக்கு விருதளித்து விழா எடுத்து திலகவதியார் ஆதீனத்துக்கு பாராட்டுகள் என்றார் துணை வேந்தர் திருவள்ளுவன்.
விழாவில், மூத்த மருத்துவர் எஸ். ராமதாஸ், கவிஞர் நா. முத்துநிலவன், நகர காவல்துணை கண்காணிப்பாளர் லில்லிகிரேஸ்,டாக்டர் எஸ். ராமமூர்த்தி, ராமையா, சவரிமுத்து, பேராசிரியர்கள் பொ. அண்ணாமலை. சா. விஸ்வநாதன் உள்ளிட்ட சான்றோர் பலர் கலந்து கொண்டனர். நகர்மன்றத் தலைவர் திலகவதிசெந்தில் அனைவருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.
முன்னதாக கவிஞர் மகாசுந்தர் வரவேற்றார். முனைவர் சேதுராமன் நிகழ்ச்சியை தொகுத்தளித்தார். நிறைவாக சத்யராம் ராமுக்கண்ணு நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top