Close
செப்டம்பர் 20, 2024 1:39 காலை

ஒட்டுமொத்த டீசல் கொள்முதலுக்கு லிட்டருக்கு ரூ. 25 உயர்த்திய ஒன்றிய அரசுக்கு  ஏஐடியுசி கண்டனம்

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்ட ஏஐடியூசி நிர்வாகிகள் கூட்டம் சங்கத்தின் கூட்ட அரங்கில்  மாவட்ட தலைவர் வெ. சேவையா தலைமையில் நடைபெற்றது.

ஒட்டுமொத்த டீசல் கொள்முதலுக்கு லிட்டருக்கு ரூ. 25 உயர்த்திய ஒன்றிய அரசுக்கு  ஏஐடியுசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்ட ஏஐடியூசி நிர்வாகிகள் கூட்டம் சங்கத்தின் கூட்ட அரங்கில்  21.3.2022 மாலை மாவட்ட தலைவர் வெ. சேவையா தலைமையில் நடைபெற்றது.

மாநில செயலாளர் சி.சந்திரகுமார், மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம், மாவட்ட துணைச் செயலாளர் துரை.மதிவாணன், மாவட்ட பொருளாளர் தி.கோவிந்தராஜன் மற்றும் நிர்வாகிகள் பி.செல்வம், எஸ்.தியாகராஜன், எஸ். தாமரைச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஒன்றிய அரசு ஒட்டுமொத்த டீசல் விற்பனை விலையை லிட்டருக்கு ரூபாய் 25 வீதம் உயர்த்தியதால் அரசு போக்குவரத்துக் கழகம் மிகப் பெரிய நெருக்கடியை சந்திப்பதோடு, பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .இதில் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றுணர்ந்த மாநில அரசு மத்திய அரசின் எண்ணை நிறுவனங்களில் ஒட்டுமொத்த டீசல் கொள்முதல் செய்வதை நிறுத்தி, நேரடியாக சில்லரை விற்பனையில் டீசல் வாங்கிக் கொள்வது என்று துரித முடிவெடுத்து இருப்பது வரவேற்கத்தக்கது.

ஒன்றிய அரசு தனது எண்ணெய் நிறுவனங்களின் மேற்கண்ட விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும், ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை மக்கள் நலனுக்கு எதிரானது கண்டனத்துக்குரியது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதத்தை 40 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு வட்டிக்கு குறைத்திருப்பது சாதாரண ஏழை எளிய தொழிலாளர்களில் நலனுக்கு எதிரானது, இதனை உடனடியாக கடந்த ஆண்டு, இதற்கு முந்தைய ஆண்டுகளில் நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்தில் வட்டி நிர்ணயிக்க வேண்டும்என்று ஒன்றிய அரசை இக் கூட்டம் வலியுறுத்துகிறது.

மேக்கேதாட்டு அணை கட்டுவதை ஒன்றிய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் திங்கள்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை மனதார  வரவேற்பது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் உணர்வுகளை பிரதிபலிக்கும் தீர்மானத்தை ஒன்றிய அரசு ஏற்று கர்நாடக அரசு மேக்கேதாட்டுவில்  அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, பொதுத்துறை பங்குகளை விற்கின்ற, மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்கம் சார்பில் 28, 29  தேதிகளில் பொது வேலை நிறுத்தம் நடத்தப்படுகிறது.

அதில், 28 -ஆம் தேதி நடைபெறும் மறியல் போராட்டத்திலும், 29-ம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்திலும் திரளாக பங்கேற்பது. இந்த நியாயமான போராட்டத்திற்கு பொதுமக்களும், வியாபாரிகளும் பேராதரவு தர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top