கோவை கணபதியில் சாலையோரம் தள்ளுவண்டியில் பானிபூரி கடை நடத்தும் தபசுராஜ் – கொண்டம்மாள் தம்பதியினரின் மூத்த மகள் ஹர்ஷினி. இவர்கோவை ராம்நகர் சபர்பன் மேல்நிலைப் பள்ளியில் 9 -ஆம் வகுப்பு படித்து வருகிறார் .
5 -ஆம் வகுப்புவரை படிப்பில் முதல் மாணவியாகத் திகழ்ந்து வந்தார். உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்தபின்பள்ளியில் நடைபெறும் விளையாட்டில் ஆர்வம் மிகுந்து கராத்தே , கபடி, மாரத்தான் போன்றப் போட்டிகளில் கலந்து கொண்டார். மேலும் கட்டுரை, போட்டி பேச்சுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பல பரிசுகளும் குவித்தார் . விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் மிகுந்ததால் படிப்பில் நாட்டம் சற்றே குறைந்துபோனது. எனினும் இவர் மீது இவருடைய பெற்றோர் நம்பிக்கை குறையாமல் இருந்தனர். .
இந்நிலையில் 2020 ஆம் ஆண்டில் உருவான கொரோனா அடுத்த இரண்டு வருடங்களுக்கு மக்களின் வாழ்க்கையை முழுமையாக புரட்டி போட்டது.
பள்ளிகள் மூடப்பட்டன இணையவழிக் கல்வி மட்டுமே இருந்தது. இணையவழிக் கல்வியில் போதிய புரிதல் இல்லாததால் ஹர்ஷினி விளையாட்டிலும் படிப்பிலும் முழுமையாக தன்னை அர்ப்பணித்துக் கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்..
ஊரடங்கு உத்தரவு காரணமாக ஹர்ஷினியின் தந்தையின் பானிப்பூரி தொழிலும் முடங்கிப்போனது. ஏற்கெனவே வரவுக்கும் செலவுக்கும் பற்றாக்குறை இருந்து வந்த குடும்பச்சூழல் மேலும் மோசமான நிலைக்குச்சென்றது வறுமையின் உச்சநிலைக்கு தள்ளப்பட்டு நிலைகுலைந்தது இவரது குடும்ப வாழ்வாதாரம் .
தனது குடும்பத்தின் அவலநிலையை கவனித்து வந்த ஹர்ஷினி சோர்ந்து இருந்த தனது தந்தையிடம் பேசியபோது குடும்பத்தின் இக்கட்டான சூழ்நிலையையும், தினசரி வருவாய் இழந்து தவித்துவரும் பல்லாயிரக்கணக் கானவர்களில் நம் குடும்பமும் ஒன்று. வீட்டிலேயே முடங்கிப் போனதால் சேமிப்பு கரைந்து விட்டது. எப்படி மீளப் போகிறோம் என்று தன் மனக்குமுறலை மகளிடம் கொட்டியிருக்கிறார் .
பள்ளிக்கு விடுமுறை என்ற சந்தோஷத்தில் இருந்து வந்த ஹர்ஷினி , தந்தையின் மனக்கவலை அவர் மனதை சுட்டது. தன் தாய் தந்தையரின் கையறு நிலைமையை கூர்ந்து கவனிக்க தொடங்கிய போதுதான், ஹர்ஷினி தனது அறியாமையை உணர்ந்தார். மனதிலும் மாற்றம் வந்தது. தனக்கும் , தனது குடும்பத்தின் உயர்வுக்கும் தன்னால் என்ன செய்யலாம் என்ற முயற்சியில் இறங்கினார் .
மீதம் இருந்த விடுமுறை நாட்களில் கண்ணில் படும் பழைய தினசரி நாளிதழ்களை எல்லாம் வாசித்தார் அந்த. வாசிப்பை நேசிக்கவும் தொடங்கினார் வாசிப்புப் பழக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். தினசரி ஆங்கிலம் , தமிழ் ஏடுகள் தொடங்கி மாத வார இதழ்கள் வரை எதையும் விடவில்லை. வாசித்தார், அந்த வாசிப்பில் குறிப்பு எடுத்து செய்தியாக வாசிக்கக் கற்றுக் கொண்டார்.
இந்த வருடம் 2021- 2022 கொரோனா தொற்று சற்று குறையவே பள்ளிகள் திறந்ததும் புத்துணர்வுடன் தெளிவான மனநிலையோடு மீண்டும் தனது பள்ளிக்குள் நுழைந்தார். . படிப்பில் ஆர்வம் குறைந்து இருந்த ஹர்ஷினி தற்போது தனது வகுப்பில் முதல் மாணவியாக எல்லாப் பாடங்களில் 80 சதவிகித மதிப்பெண் பெறும் நிலையை எட்டினார்.
ஒருமுறை தன் ஆசிரியரிடம் தினமும் நான், சகமாணவர் களுக்கு நான் படித்த அன்றாடச் செய்திகளைப் பகிர ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார். தினமும் காலை பிரேயர் நேரத்தில் செய்திகளை வாசிக்கும்படி ஆசிரியர் அனுமதித்தார்.
ஹர்ஷினி செய்திகளைத் தெள்ளத் தெளிவான உச்சரிப்புடன் வாசிப்பதைக் கண்டு ஆசிரியர்கள் , மாணவர்கள் மிகுந்த ஆச்சரியமும் வியப்பும் பெருமையும் கொண்டு , நமது பள்ளிக்கு இது பெருமை சேர்ப்பதாக உள்ளது என்று பாராட்டி வருகின்றனர்.
அது மட்டும் இல்லாமல் தற்போது பள்ளியில் நடத்தப்படும் பேச்சு போட்டி, கதை கட்டுரைப் போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து பரிசுகளையும் பெற்று வருகிறார். படிப்புடன் பன்முகத்தன்மையை வளர்த்துக் கொண்டு மெருகேற்றி தன் திறமைகளை மிளிரச் செய்து கொண்டு வருகிறார் ஹர்ஷினி.
தமிழ்நாட்டின் மூத்த முக்கிய நாளிதழான தினமணி நாளிதழில் பாரதியார் பாடல்கள் போட்டியில் “இரண்டாம் பரிசு” வென்றார். தினத்தந்தி நாளிதழில் கொரோனா பற்றிய இவரது கவிதை வெளியானது. அவளின் எழுத்துத்திறமைக்கு வலுசேர்த்துள்ளது . தானும் வளர்ந்து தன் சுற்றுச்சூழலையும் சரி செய்ய நினைத்த ஹர்ஷினி, தான் சந்திக்கும் பிரச்னைகளை தினமலர் நாளிதழுக்கு எழுதிச் சம்மந்தப் பட்டவர்கள் கவனத்திற்குக் கொண்டு சென்று சமூகப்பணியிலும் ஈடுபட்டு வருகிறார்..
தற்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இந்த இளம் வயதில் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் செய்து தனது பேச்சுத் திறமையை வெளிப்படுத்தியது, அந்த பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுத் தந்தது மட்டும் இல்லாமல் சம்பந்தப் பட்ட வேட்பாளருக்கு கூடுதல் வாக்குகளும் கிடைத்தது .
இதெல்லாம் போக விடியற்காலை எழுந்து தனது தந்தையின் தொழிலுக்கு உதவியாக இருந்து தனது குடும்பத்தினரை மிகக் குறுகிய காலத்தில் தன்மீது பெரும் நம்பிக்கை ஏற்படச் செய்து உள்ளார்.
இந்தக் கொரோனா நம்மிடையே எவ்வளவோ அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது என்றாலும், மாணவி ஹர்ஷினியின் குடும்பத்திலும் ஹர்ஷினியின் மனதிலும் எதிர்காலத்துக்கான நம்பிக்கை விளக்கை ஏற்றி வைத்துள்ளது என்றால் அது மிகை இல்லை.
~ ஈரநெஞ்சம் மகேந்திரன்