Close
செப்டம்பர் 20, 2024 2:56 காலை

இணையவழியில் 1 லட்சம் மின் இணைப்புகள்: புதுக்கோட்டையில் முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி மூலம் தொடக்கம்

புதுக்கோட்டை

முதலமைச்சர் அவர்கள் இணையவழியில் ஓராண்டில் 1,00,000 விவசாய மின்இணைப்பு வழங்கும் திட்டத்தின்கீழ், பயன்பெற்ற விவசாயிகளிடம் கலந்துரையாடிய நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் ரகுபதி, ஆட்சியர் கவிதாராமு உள்ளிட்டோர்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா சாலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் , 1 வருடத்தில் 1 லட்சம் விவசாய மின் இணைப்பு பெற்றவர்களுடன் கலந்துரையாடி பின்னர் . விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு ஆணைகளை வழங்கி  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய நிகழ்வு, புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில் சனிக்கிழமை (16.4.2022) நடந்தது. இதில் ,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி  கலந்துகொண்டு பார்வையிட்டார்.

இதில் அமைச்சர் ரகுபதி பேசியதாவது: தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில், ஓராண்டில் 1,00,000 விவசாய மின்இணைப்பு பெற்றவர்களிடம், சென்னையி லிருந்து காணொலிக்காட்சி வாயிலாக, தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு மாவட்டங்களில் இணையவழியில் இன்றைதினம் கலந்துரையாடினார்கள்.

 இதன்மூலம் விவசாய மின்இணைப்பு பெற்றவர்கள் இதனை தங்களின் வாழ்வின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர் ரகுபதி.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மின்சார வாரிய கண்காணிப்பு பொறியாளர் (பொ) அசோக்குமார், மின்சார வாரிய செயற்பொறியாளர் எம்.ஆனந்தாயி, ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு (எ) சிதம்பரம், ஆர்.எம்.கருப்பையா, மின் இணைப்பு பெற்ற விவசாயிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

புதுக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில்.. 

புதுக்கோட்டை
புதுக்கோட்டை மின் வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற முதல்வரின் காணொலி நிகழ்வு

புதுக்கோட்டை மின் அலுவலகத்தில் காணொளி மூலம்  புதுக்கோட்டை சட்டமன்ற  உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா மற்றும்   செயற்பொறியாளர் {பொது}   டி.மயில்வாகனன்,       உதவிசெயற் பொறியாளர் (கிராமியம்) எஸ்.  கண்ணன்,        உதவி செயற் பொறியாளர்(கட்டுமானம்)  நாகராஜன் மற்றும் பணியாளர்கள்           விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

நிகழ்வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
உங்களை எல்லாம் பார்க்கும்போது எனக்கு சாதாரண மகிழ்ச்சி அல்ல, ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சி ஏற்படுகிறது.
ஏதோ ஒரு திட்டத்தை அறிவித்தோம் அப்படி அறிவித்த திட்டத்தால் சிலர் பயனடைந்து இருப்பார்கள் என்று நானோ நமது அரசோ இருப்பது இல்லை. அறிவிக்கிற திட்டத்தால் எத்தனை லட்சம் பேர் பயனடைந்தார்கள்.

நாம் அறிவிக்கிற திட்டத்தின் உண்மையான பலனை அனை வரும் அடைந்தார்களா என்பதைக் கவனிப்பதில் நான் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருப்பவன். அதேபோலத் தான் அமைச்சர்களும், அதிகாரிகளும் இருக்க வேண்டும் என்றும் நினைப்பவன் நான்.
புதிய மின் இணைப்பைப் பெற்ற வேளாண் பெருங்குடி மக்களாகிய நீங்கள் இத்திட்டத்தால் எந்த வகையில், எந்தெந்த அடிப்படையில் பயனடைந்திருக்கிறோம் என்று சொல்வது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டுப் பத்திரம்.
ஒரு லட்சம் உழவர்களுக்கு இலவச மின் இணைப்பு கொடுக் கலாம் அதுவும் சில மாதங்களில் கொடுத்து நம்முடைய இலக்கை அடைந்துவிடலாம் என்று மின்துறை அமைச்சர் சொன்னார். இந்த ஓராண்டு காலத்துக்குள் ஒரு லட்சம் பேருக்கு மின் இணைப்பு கொடுத்துவிட முடியுமா என்ற சந்தேகம் பலருக்கு இருந்தது, ஏன் எனக்கே இருந்தது.

ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜியை பொருத்தவரையில், எதிலும் ஒரு டார்கெட் வைத்து பணியாற்றக் கூடியவர். அந்த டார்கெட்டை எப்படியும் முடித்துக் காட்டக் கூடியவர் என்ப தற்கு இந்த நிகழ்ச்சியே ஒரு சாட்சியாக அமைந்திருக்கிறது.

இந்த வேகத்துக்கு, இந்த சாதனைக்கு காரணமாக இருக்கக் கூடிய அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும், மின்சார வாரியத் தலைவர், உயர் அதிகாரிகள், அலுவலர்கள் அனைவருக்கும், விவசாய பெருங்குடி மக்களின் சார்பில் என்னுடைய நன்றியை, வாழ்த்துகளை, பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு லட்சம் இணைப்பு என்கிற காரணத்தினால், 1 லட்சம் குடும்பம் அடையும் பயன் மட்டுமல்ல அவர்களது வேளாண் உற்பத்தியால் இந்த மாநிலம் அடைய இருக்கக்கூடிய வளர்ச்சி என்ன என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.எனவே இந்தச் சாதனையையும் நாம் அளவிட முடியாத சாதனை என்றுதான் சொல்ல வேண்டும்.

இன்று ஒரு லட்சமாவது இலவச மின் இணைப்புக்கான உத்தரவை நான் வழங்குகிறேன். இதனையும் சேர்த்து தமிழ்நாட்டில் வேளாண் தொழில் செய்வோரின் எண்ணிக்கை 21.80 லட்சத்திலிருந்து 22.80 லட்சமாக உயர்ந்திருக்கிறது.

வழங்கப்பட்ட ஒரு லட்சம் வேளாண் மின் இணைப்புகளினால் தமிழ்நாட்டின் வேளாண் நிலப்பரப்பு 2,13,107 ஏக்கர் அதிகரித்திருக்கிறது. சுமார் 6,30,340 குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டார்கள் மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டிருக் கின்றன.
இந்தத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தியதற்கு 803 கோடி ரூபாய் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top