ஒரு விருது என்ன செய்து விடும் என்பதற்கு சாட்சியாக பரியேறும்பெருமாள் திரைப்பட நடிகரும் தெருக்கூத்துக் கலைஞருமான நெல்லை தங்கராசு வீடு கம்பீரமாக எழுந்து நின்று கொண்டிருக்கிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில துணைச்செயலர் இரா. நாறும்பூநாதன் வெளியிட்ட தகவல்:
‘பரியேறும்பெருமாள்’ திரைப்படத்தில் தெருக்கூத்துக் கலைஞனாக வாழ்ந்த நெல்லை தங்கராசு, அம்பேத்கர் பிறந்தநாளில் புது வீட்டில் பால்காய்ச்சி குடியேறியுள்ளார். ஒரு விருது என்ன செய்து விடும் என்பதற்கு சாட்சியாகும் இந்த நிகழ்வு. கடந்த ஆண்டு பிப்ரவரி ஐந்தாம் தேதி இரவு 8 மணிக்கு, தமுஎகச நாட்டுப்புறக் கலைச்சுடர் விருது 2020 அவருக்கு வழங்க இருக்கும் செய்தியை சொல்வதற்காக, அவரைத்தேடிச் சென்றேன்.
செய்தியைச் சொன்னதும் மகிழ்ச்சியடைந்தார். ஆனால் அவரது வீடுதான் இருள்மண்டிக் கிடந்தது. 40 ஆண்டுகளாக கால்களில் சலங்கை கட்டி, பெண்வேஷமிட்டு ஆடிய மகத்தானதொரு தெருக்கூத்துக் கலைஞன் ஓலைக் குடிசையில், மின்வசதியின்றி வாழ்வது வேதனை அளித்தது.
அன்று இரவே, நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு அவர்களுக்கு ஒரே ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினேன், தெருக்கூத்துக் கலைஞன் தங்கராசுவின் வீட்டைச் சரி செய்து தர இயலுமா என்று. அவரது வீட்டு முகவரி அனுப்புங்க என்றார். அடுத்த 12 மணிநேரத்தில், சப் கலெக்டர், தாசில்தார், ரெவின்யு இன்ஸ்பெக்டர், கிராம அதிகாரி, தலையாரி உள்ளிட்ட அனைவரும் அவரது குடிசை வீட்டு முன் ஆஜர். காரியங்கள் மளமளவென நடந்தன. குடிசை மாற்று வாரியம் மூலம், புதிய வீடு கட்டும் உத்தரவு. நமது நண்பர்கள் பலரின் ஒத்துழைப்போடு மின் மோட்டார் இணைப்பு ஆழ்குழாய் கிணறு என வீடு நிறைவு பெற்றது.
உதவிய நண்பர்கள் பட்டியல் மிகப் பெரியது. வீட்டின் ஒவ்வொரு செங்கலுமே நன்றியோடு அவர்கள் பெயரைச் சொல்லும். தமுஎகச பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா இடையில் ஒருமுறை வந்து, வீடு கட்டும் பணிகளைப் பார்த்துச் சென்றார். மின் இணைப்பு பெற மின்சார வாரிய உதவிப் பொறி யாளர் முத்துராமலிங்கம் செய்த உதவிமிக முக்கியமானது. வட்டாட்சியர்கள் செல்வன், ரஹமதுல்லா, மயன் ரமேஷ்ராஜா, முத்தமிழ் பாபு ஆகியோரின் உதவியை தங்கராசுவால் மறக்கவே முடியாது.
வண்ணார்பேட்டை, இளங்கோ நகர் குட்டந்துறையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடந்த விழாவில், அவரை உலகிற்கு அறிமுகப்படுத்திய திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் கலந்து கொண்டு புதுவீட்டைத் திறந்து வைத்து வாழ்த்தினார்.
இந்நிகழ்வில், தமுஎகச மாவட்ட செயலர் வா. ராஜேஷ், பாளையங்கோட்டை கிளைச்செயலர் பழனிசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒரு விருது என்ன செய்து விடும் என்பதற்கு, தங்கராசுவின் வீடே சாட்சி…