Close
செப்டம்பர் 20, 2024 1:41 காலை

கன்னியாகுமரியில் திடீர் கடல் சீற்றம்: 15 அடி உயரத்துக்கு எழுந்த கடல் அலை.

கன்னியாருமரி

கன்னியாகுமரியில் ஏற்பட்ட கடல் சீற்றம்

பவுர்ணமி கழிந்த சில நாட்களில் கன்னியாகுமரியில் நேற்று இரவுமுதல் “திடீர்” என்று கடல் சீற்றமாக காணப்பட்டது. சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு கடல் அலை எழுந்தது.

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி ஏற்பட்ட சுனாமி என்னும் ஆழிப்பேரலைக்கு பிறகு கன்னியாகுமரி கடலில் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

அமாவாசை மற்றும் பவுர்ணமி போன்ற முக்கியமான நாட்களில் கன்னியாகுமரி கடலில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு, கடல் உள்வாங்குவது, கடல் நீர் மட்டம் தாழ்வது, கடல் நீர் மட்டம் உயர்வது, கடல் நிறம் மாறுவது, கடல் அலையே இல்லாமல் அமைதியாக குளம்போல் காட்சி அளிப்பது, கடல் நிறம் மாறுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

இந்த நிலையில் பவுர்ணமி கழிந்த சில நாட்களில் கன்னியாகுமரியில் நேற்று இரவுமுதல் திடீரென்று கடல் சீற்றமாக காணப்பட்டது. சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு கடல் அலை எழுந்தது. நடுக்கடலில் இருந்து பொங்கி எழுந்து வந்த இந்த ராட்சத அலைகள் கரையை நோக்கி ஆக்ரோ‌ஷமாக வந்து கரையில் உள்ள பாறைகளில் முட்டி மோதி சிதறிய காட்சி அனைவரையும்  அச்சமுற வைத்தது.

இதைப் பார்த்து கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி கால் நனைக்க அச்சப்பட்டனர். இந்த ராட்சத அலைகளால் சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சுற்றுலா போலீசார் சுற்றுலா பயணிகளை கடலில் இறங்கி குளிக்க தடை விதித்தனர்.

ஏற்கனவே கடலில் ஆனந்தகுளியல் போட்டுக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை சுற்றுலா போலீசார் எச்சரித்து வெளியேற்றினார். இதேபோல கோவளம், சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், வாவத்துறை, கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம், சொத்தவிளை, வட்டக்கோட்டை பீச், ராஜாக்க மங்கலம் துறை போன்ற இடங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது.

இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் மீன்பிடித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. குறைந்த அளவு வள்ளம் மற்றும் கட்டுமரங்களில் மட்டுமே மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று விட்டு அவசர அவசரமாக கரைக்கு திரும்பினர். அதுவும் மீன்கள் அதிகளவில் கிடைக்காமல் கரை திரும்பினர். இதனால் மீன் சந்தைகளில் மீன்வரத்து குறைவாக காணப்பட்டது. அதேசமயம் மீன்களின் விலையும் கடுமையாக உயர்ந்து இருந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top