Close
நவம்பர் 25, 2024 6:17 காலை

ஈரோடு மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் புகார் தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல்: எஸ்பி தகவல்

ஈரோடு

ஈரோடு எஸ்பி அலுவலகம்

பெண் காவல் ஆய்வாளர்  புகார் தொடர்பாக  உயர் அதிகாரி, தனிப்பிரிவு தலைமை காவலர் ஆகியோரிடம்  நடத்திய விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சசிமோகன் தகவல் தெரிவித்துள்ளார்.

ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிபவர் நீலாவதி. தனது குடும்பத்தினருடன் சூரம்பட்டி வலசு, காந்திஜி வீதியில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 14-ஆம் தேதி பணியில் இருந்த ஆய்வாளர் நீலாவதி திடீரென உயரதிகாரிகள் செல்போனிற்கு தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார்.

பின்னர் சோலாரில் உள்ள தோழி வீட்டுக்கு சென்ற நீலாவதி திடீரென மயங்கி விழுந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சையில் இருந்த நீலாவதி குணமடைந்து வீடு திரும்பினார்.

இந்நிலையில் நீலாவதி பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது அந்த ஆடியோவில் அவர் கூறி இருப்பதாவது:
உயரதிகாரிகள் திட்டியதால் மனவேதனை அடைந்து தற்கொலை செய்யப்போவதாக குறுஞ்செய்தி அனுப்பியது உண்மைதான். எனது இந்த முடிவுக்கு ஒரு போலீஸ் உயர் அதிகாரியும் மட்டும் தனிப்பிரிவு  தலைமை காவலர்  ஒருவரும் தான் காரணம். இவர்களின் செயலால்  ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தான் நான் தற்கொலைக்கு முயன்றதாகவும் அந்த ஆடியோவில் அவர் கூறியிருந்தார்.  இதையடுத்து மாவட்ட போலீஸ் காவல்கண்காணிப்பாளர் சசி மோகன் இதுகுறித்து விசாரிக்க டவுன் டி.எஸ்.பி ஆனந்த குமார் தலைமையில் விசாரணை குழு அமைத்தார்.

இதையடுத்து ஆனந்தகுமார் தலைமையில் விசாரணைக் குழுவினர் சம்பந்தப்பட்டவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார். இதைப்போல் ஆய்வாளர்  நீலாவதியிடமும்  விசாரணை நடத்தினார். இரண்டு தரப்பினரிடமும் விசாரணையை முடித்து அதன் அறிக்கையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனிடம் தாக்கல் செய்தார்.
இதுகுறித்து மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சசிமோகன் கூறும் போது, பெண் காவல்ஆய்வாளர் நீலாவதி தெரிவித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரி மற்றும் தனிப்பிரிவு காவலரிடமும்  தனித்தனியாக விசாரணை நடைபெற்றது.

இதைப்போல் பெண் காவல் ஆய்வாளர்  நீலாவதி மீது கூறப்பட்ட புகார்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிந்து அந்த அறிக்கை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் உயர் அதிகாரிகள் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பார்கள்.  அது  எந்தமாதிரியான நடவடிக்கை என்பது பின்னர் தெரிவிக்கப்படும் என்றார் அவர்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top