இலக்கியங்கள் எப்போதும் பாவப்பட்டவர்களின் பக்கமே நிற்கின்றன என்றார் எழுத்தாளர் பவா. செல்லதுரை.
18-ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில் உரையாற்றிய பவா. செல்லதுரை மேலும் பேசியதாவது: உலகில் எழுதப்பட்ட எல்லா இலக்கியங்களும், எல்லா புத்தகங்களும் மனித அனுபவத்தைத்தான் பேசுகின்றன. மனிதனின் கீழ்மை, மேன்மை, அர்ப்பணிப்பு, துரோகம் போன்ற பண்புகளைத் தான் திரும்பத் திரும்பப் பேசுகின்றன. இலக்கியத்தின் அடிப்படை மூலக்கூறுகளாக மனிதர்களே இருக்கின்றனர்.
மனிதர்களில் பார்க்கக் கூடாதவர்கள், தொடக் கூடாதவர்கள், வீட்டுக்குள் வரக் கூடாதவர்கள், என நமது மனம் மனிதர்களைப் பிரித்துப் பார்க்கக் கற்றுக் கொள்கிறது. நமது அந்தஸ்து ஒரு இன்ச் கூடும்போது மற்றவர்களை ஒரு மீட்டர் கீழே இறக்கிப் பார்க்க மனது கற்றுக் கொள்கிறது.
உலக இலக்கியம் முதல் உள்ளூர் இலக்கியம் வரை எல்லா எழுத்தாளர்களும் பாவப்பட்ட, ஒதுக்கி வைக்கப்பட்ட வேசிகள், திருடர்கள், பிக் பாக்கெட்காரர்கள், ஆட்டோ, ரிக்சா ஓட்டுநர்கள் என பாதிக்கப்பட்டவர்கள் பக்கமே நிற்கிறார்கள். எந்த இலக்கியமும் கல்வி தந்தைகள், மினிஸ்டர் ஓய்ட் வேட்டி கட்டிய மேல் மக்கள் பற்றி பேசுவதில்லை. மேலே இருப்பவர் கள், கீழே இருப்பவர்களைப் பார்க்க வேண்டும் என்றுதான் இலக்கியம் சொல்கிறது.
மனிதர்கள் தற்போது துயரங்களை விரும்பி உண்ணும் விலங்காக மாறி விட்டனர்.மிகப்பெரும்மகிழ்ச்சி வரும் போது, கூடவே, இந்த மகிழ்ச்சி தங்காது என்ற அச்சமும் சேர்ந்தே வருகிறது. அதை காட்டிக் கொள்ளாமல் மிக நாகரிகமாக நடிக்க ஆரம்பிக்கிறோம்.
நூறு சதவிகிதம் மேன்மையான மனிதன் இல்லவே இல்லை. ஒரு இடத்தில் மேன்மை அதிகரிக்கும், மற்றொரு இடத்தில் கீழ்மை வரும். இந்த மேல், கீழ் பண்புகளை மேடு, பள்ளங்களை இட்டு நிரப்புவதுதான் மனித வாழ்க்கை.எல்லா நடைமுறை அனுபவங்களையும் கற்ற பிள்ளைதான் இந்த சமுதாயத்தில் உயர்ந்து வர முடியும்.
இப்போது பள்ளி, வகுப்பறைகளில் பேசிய விசயங்களைப் பறிகொடுத்து விட்டு, எதையோ பணம் கொடுத்துத் தேடிக் கொண்டிருக்கிறோம். இந்த உலகில் உடுத்தும் நாகரிக ஆடை நடத்தையில் எதுவும் இல்லை. இலக்கியம் படித்த மனிதன், புத்தகம் ஏந்திய கை ஒரு போதும் குற்றம் செய்ய சம்மதிக்காது.
குரலற்றவர்களின் குரலாக, ஏழை எளியவர்களின் குரலாக, பாவப்பட்டவர்களின் பக்கமே இலக்கியம் எப்போதும் நிற்கும் என்றார் எழுத்தாளர் பவா.செல்லதுரை.