தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அரசு இசைக் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு வனத்துறை , மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சி கவின்மிகு தஞ்சை இயக்கம், தன்னார்வ சேவை அமைப்புகள் சார்பில் இசைவனம் என்னும் இசைக் கருவிகள் தயாரிக்கும் மரங்கள் வளர்க்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடக்கி வைத்தார்.
பின்னர் ஆட்சியர் பேசியதாவது: இசையுலக வரலாற்றில் இசைக்கருவி தயாரிப்பிற்கு பயன்படும் மரங்களை ஒருங்கே, ஒரு இசைக் கல்லூரி வளாகத்தில் பராமரிக்க திட்டமிடப்பட் டிருக்கும் நிகழ்வு இதுவே முதன்மையாகும்.
மரம் மண்ணின் வரம். இந்தமரங்கள் இசைக்கருவிகளாக உருமாறி நம் செவிக்கு தேனினும் இனிய பாடல்களாக ஒலிக்கின்றன .இசைக்கருவிகள் தயாரிப்பிற்கு நம் தஞ்சை உலகளாவிய பெருமைபெற்றது. நம் தஞ்சாவூர் வீணைமற்றும் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் அதன் தரத்திற்கான புவிசார் குறியீடுபெற்றவை.
மேலும் இசைக்கருவிகள் தயாரிப்பதற்காக ஒவ்வொரு மரமும் தனித் தன்மை பெற்றது, அந்த வகையில் பலாமரத்தின் மூலம் வீணை,மிருதங்கம் மற்றும் தவில் செய்யப்படும் அதைப் போல் ஆச்சாமரம் மூலம் நாதஸ்வரமும், மூங்கில் மரத்தில் புல்லாங்குழலும் ,மற்றும் திருவாச்சி, பூவரச, வாகை, வேம்புகுமிழ், தேக்கு போன்ற பல்வேறு மரங்கள் மூலம் பல்வேறு இசைக்கருவிகள் உருவாக்கப்படுகின்றன. அதற்கு வலு சேர்க்கும் வகையில் இந்தக் கல்லூரி வளாகத்தில் இசைவனம் அமைக்கப்படுகிறது என ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் தெரிவித்தார்.