தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியருக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் நன்றி பாராட்டி மின் அஞ்சலில் பதில் அனுப்பியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், மேற்பனைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் சதிஷ்குமார் . இவர், தேர்தல் நடத்தும் முறைகளில் மாற்றம் வேண்டுமென வலியுறுத்தி அதற்கான வழிமுறைகளையும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு ஒரு கடிதம் வாயிலாக அனுப்பி இருந்தார்.
அதற்கு நன்றி பாராட்டி தேர்தல் ஆணையம் பதில் அனுப்பியுள்ளது. மின் அஞ்சல் வழி செய்தியில், இன்னும் தெளிவாகவும், விரிவாகவும் கோரிக்கையினை அனுப்பக் கோரி அவருக்கு மின் அஞ்சல் வழியே செய்தி அனுப்பியிருக்கின்றது.
இதனைக் குறித்து சதிஷ்குமாரிடம் கேட்டபோது, எல்லா மாற்றங்களும் யாரோ ஒரு தனிமனித முன்னெடுப்பால் மட்டுமே நடக்கிறது. நம்மால் முடியுமா?என்பதைவிட, ஒரு மாற்றம் நடப்பதற்கு என்ன தேவையோ அதனை நோக்கிய நகர்வுகளை முன்னெடுப்பதும் மகிழ்ச்சிதானே எனக் கூறுகிறார்.
இவர் தமிழ்நாட்டில் மதுவிலக்குக் கோரி அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார் என்பதும், கடந்த ஆட்சியிலும் சரி, தற்போதைய ஆட்சியிலும் சரி முதல்வருக்கு கடிதம் அனுப்பிக் கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது சாத்தியமா எனக் கேட்டால், சாத்தியமா என்பதைவிட, ஓர் ஆசிரியராக இந்த சமூகம் குறித்து அக்கறைப்பட வேண்டியது என் கடமை எனச் சொல்லி தலைநிமிர வைக்கின்றார் ஆசிரியரும் எழுத்தாளருமான சதிஷ்குமார்.