Close
செப்டம்பர் 19, 2024 11:21 மணி

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநில மாநாடு: மக்கள் கலை விழா

கலை இலக்கிய பெருமன்றம்

சாத்தூரில் நடந்த கலை இலக்கிய பெருமன்ற மாநாட்டில் பங்கேற்ற பார்வையாளர்கள்

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநில மாநாட்டு இரண்டாம் அமர்வில் மக்கள் கலை விழா நடைபெற்றது.

சாத்தூரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 12-ஆவது மாநில மாநாட்டின் இரண்டாம் அமர்வு பிற்பகலில் நடைபெற்றது.

மாநிலத் தலைவர் சி. சொக்கலிங்கம் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் கண்மணி ராசா வரவேற்றார். தலைமைக் குழு உறுப்பினர் சிற்பி பாலசுப்பிரமணியன் தொடக்கவுரை நிகழ்த்தினார்.

இலங்கை எழுத்தாளர் கலாநிதி ந. இரவீந்திரன் மையக் கருத்துரை நிகழ்த்தினார். அனைத்திந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனத்தின் தலைவர் எழுத்தாளர் பொன்னீலன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலர் ஆதவன் தீட்சண்யா, அனைத்திந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத் தலைவர் ஜி.ஆர். ரவீந்திரநாத், தமிழக ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், இந்திய கலாசார நட்புறவுக் கழகத்தின் பொதுச்செயலாளர் எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முடிவில் மாநிலத்துணைத் தலைவர் டி.எஸ். நடராஜன் நன்றி கூறினார். மாநிலப் பொதுச் செயலாளர் இரா. காமராசு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

மக்கள் கலை விழா

தொடர்ந்து மாலை 6 மணிக்கு நடைபெற்ற மக்கள் கலை விழாவுக்கு சாத்தூர் நகர்மன்றத் தலைவர் எஸ். குருசாமி தலைமை வகித்தார். வரவேற்புக்குழுவின் சார்பில் வ. நவநீதகிருஷ்ணன் வரவேற்றார். பாரதியாரின் படத்தை கிருங்கை சேதுபதி, வ.உ. சிதம்பரனாரின் படத்தை ரெங்கையா முருகன், தனுஷ்கோடி ராமசாமியின் படத்தை கவிஞர் ரவீந்திரபாரதி ஆகியோர் திறந்து வைத்தனர்.

பத்மஸ்ரீ விருது பெற்ற கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன், மக்கள் கவிஞர் பரிணாமன், வழக்குரைஞர் ப.பா. மோகன் ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. வந்தனம் கலைக்குழு, கோவை மாற்றுக்களம், அதிர்வு தமிழிசையகம், திருச்சி பாரதி கலைக்குழு, பெரம்பலூர் ஜீவா அம்பேத்கர்நாட்டுப்புறக் கலைக்குழு உள்ளிட்டோரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மக்கள் பாடகர்கள் அறந்தை பாவா, ஆதிராமன், ஆரல் விக்டர், ராஜாமுகம்மது உள்ளிட்டோர் பாடல்களைப் பாடினர்.

சு.வேணுகோபால், நாணற்காடன் ஆகியோர் கதை சொன்னார்கள். கலைமாமணி தஞ்சை சின்னப்பொண்ணு கலந்து கொண்டு பாடல் பாடினார். திருக்குறள் முத்துகுமாரசாமி நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top