புதுக்கோட்டையில் 5-ஆவது புத்தகத் திருவிழா வருகின்ற ஜூலை 29 -ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 7 -ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இந்த ஆண்டும் புத்தகத் திருவிழாவை நடத்த திட்டமிட்டனர். இதற்கான வரவேற்பு குழுக் கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்க அரங்கத்தில் நடைபெற்றது.
இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி கலந்து கொண்டு 5-வது புத்தகத் திருவிழா ஜூலை 29-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 7-ம் தேதி வரை நடைபெற உள்ள புத்தக திருவிழாவுக்கான விழிப்புணர்வு போஸ்டரையும் வெளியிட்டு பேசினார்.
புத்தகத்தின் அவசியம் குறித்து புதுக்கோட்டை கோட்டாட்சியர் (பொ) எஸ்.கருணாகரன் பேசினார். புத்தகத் திருவிழா குறித்து கவிஞர் நா.முத்துநிலவன் அறிமுக உரையாற்றினார். விழாவிற்கான குழுக்களை அறிமுகப்படுத்தி அறிவியல் இயக்க பொதுக்குழு உறுப்பினர் அ.மணவாளன், பங்கேற்க உள்ள பதிப்பகங்கள் குறித்து மாநில செயலாளர் எஸ்.டி. பாலகிருஷ்ணன், விழாவின் பங்கேற்பாளர்கள் குறித்து முனைவர் ஆர்.ராஜ்குமார், பள்ளி மாணவர்களின் கலை, அறிவியல் நிகழ்வுகள் குறித்து மாவட்டச் செயலாளர் மு.முத்துக்குமார் ஆகியோர் பேசினர்.
நிகழச்சிகள் விவரம்:
புத்தகத் திருவிழா ஒவ்வொரு நாளும் காலை 10.30 மணிக்கு துவங்கி இரவு 9 மணி வரை நடைபெறும். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்கள் புத்தக விற்பனை அரங்குகளை பார்வையிடல், விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், நடமாடும் கோளரங்கம் நிகழ்வு, மந்திரமா? தந்திரமா?, காகித மடிப்புக்கலை, கணித புதிர்கள், கணித விளையாட்டுகள், நாணய கண்காட்சி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும்.
மாலை 6 முதல் இரவு 7 மணி வரை பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், இரவு 7 மணிக்கு பிறகு நடைபெறும் பொதுநிகழ்வில் அரசுத்துறை உயர் அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், சிறப்பு பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் உரையாற்றுவார்கள்.
மாவட்டம் முழுக்க உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் ஒரே நாளில் “புதுக்கோட்டை வாசிக்கிறது” என்ற நிகழ்வின் வாயிலாக 1.50 லட்சம் மாணவர்கள் பங்கேற்று வாசிப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. புத்தகத்திருவிழாவை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்லும் வகையில் சைக்கிள் பேரணி, இருசக்கர வாகனப் பேரணி, கல்லூரிகளில் கருத்தரங்குகள், பத்திரிகையாளர் சந்திப்பு, போஸ்டர் வெளியீடு, ஆட்டோ பிரசாரம், மாணவர்களுக்கான கலை இலக்கிய போட்டிகள், மற்றும் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்துவது. புத்தகத் திருவிழா குறித்த விழிப்புணர்வை மாவட்டத்தின் கடைகோடி கிராமங்கள் வரை கொண்டு செல்வதோடு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை அதிக எண்ணிக்கையில் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்றும், புத்தக விற்பனையை ஒரு கோடி ரூபாய்க்கு மேல் அதிகரிக்கச் செய்வது.
ஆட்சியர் தலைமையில்…
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு புத்தகத் திருவிழாவின் தலைவராகவும், ஒருங்கிணைப்பாளர்களாக கவிஞர்.தங்கம்மூர்த்தி, கவிஞர் நா.முத்துநிலவன், அறிவியல் இயக்க மாநில பொதுக்குழு உறுப்பினர் அ.மணவாளன், முனைவர் ஆர்.ராஜ்குமார், அறிவியல் இயக்க மாநில செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் ம.வீரமுத்து, மாவட்டச் செயலாளர் மு.முத்துகுமார், மாவட்ட பொருளாளர் விமலா வள்ளல் ஆகியோர் உள்பட பல்வேறு குழுக்களுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் எம்.வீரமுத்து வரவேற்றார். இணைச் செயலாளர் ரெ.பிச்சைமுத்து நன்றி கூறினார்.