Close
நவம்பர் 10, 2024 5:42 காலை

குழந்தைகளுக்கு வயதுக்கு ஏற்ப பாலியல் கல்வி கட்டாயம்

பாலியல் கல்வி

பாலியல் கல்விதான் தீர்வு

குழந்தைகளுக்கு வயதுக்கு ஏற்ப பாலியல் கல்வி கட்டாயம் என ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி விமலா கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: பாலியல் வன்கொடுமையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், குழந்தைகளை வன்முறையிலிருந்து பாதுகாக்கின்றதா அல்லது குழந்தைகளை வன்முறைக்கு உட்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்துகிறதா என்ற கேள்வியை ஏற்படுத்துகிறது.

ஏனென்றால், பிறந்த நிமிடம் முதல் 18 வயதுக்கு உட்பட்ட எல்லோரையுமே குழந்தை என்று சட்டம் சொல்கிறது. வன்முறை என்பதற்கான வரைமுறையும் சரியாக இல்லை.

18 வயதுக்கு உட்பட்ட குழந்தை என்றால் விருப்பமின்றி திணிக்கப்படும் உறவு, விருப்பத்தோடு ஆனால் விளைவுகள் தெரியாமல் நடந்த பாலுறவு, முற்றிலும் விருப்பத்தோடு செய்யப்படுகின்ற உறவு ஆகிய எல்லாவற்றையும் சட்டம் ஒரே நிலையில் வைத்துப் பார்க்கிறது. வளர் இளம் வயது, துள்ளல்-மகிழ்ச்சி-வேகம் மற்றும் பதற்றம் ஆகியவற்றின் தொகுப்பாக உள்ளது.

மனதளவிலும், உடல் அளவிலும் ஏற்படுகின்ற மாற்றங்கள், போன்கள் அலை அலையாய் தந்து கொண்டிருக்கின்ற பாலியலை ஒட்டிய படங்கள் மற்றும் செய்திகள், அதனால் உருவாகும் எண்ணங்கள், சிந்தனைகள் ஆகியவை அந்தப் பருவத்தின் தேடலை குறிப்பாக பாலியல் தேடலை அதிகரிக்கிறது.

நட்பு வட்டம், பெற்றோர், ஆசிரியர்கள் ஆகியோரின் நல்ல ஆரோக்கியமான கட்டுப்பாடுகளும், அறிவுரைகளும், வழிகாட்டுதல்களும் பெறுபவர்கள் எந்த பிரச்சினைகளில் இருந்தும் எளிதாக வெளியில் வந்து விடுகிறார்கள். மற்றவர்கள் ஈடு செய்ய இயலாத இழப்பை சந்திக்கிறார்கள்.

வளர்இளம் பருவத்தில் உடல் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு பாலியல் உணர்வால் உந்தப்பட்டு பாலுறவில் ஈடுபடும் 16 வயதிலிருந்து 18 வயதுக்கு உட்பட்ட ஆண் மற்றும் பெண்ணின் நிலைமை என்ன?. உடலுறவின் காரணமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்ணின் நிலை என்ன? அந்த ஆண் சிறையில், பெண் பாதுகாப்பு இல்லத்தில். குழந்தையோ, ஏதேனும் ஒரு நிறுவனத்தில் ஒப்படைக்கப்பட்டால் (தத்துக் கொடுக்க உரிமை பெற்ற ஒரு இல்லத்தில்) தத்து குழந்தையாய் எங்கோ வளரும் நிலை.

குழந்தை குப்பை தொட்டியில் போடப்பட்டால், பிச்சை எடுக்கும் நிலையோ ஊனமுறும் நிலையோ அல்லது கல்லறை செல்லும் நிலையோ ஏற்படக்கூடும். அத்தகைய பெண்கள் மருத்துவ பரிசோதனைக்கு வரும்போது பாலியல் வன்கொடுமையை கண்டிப்பாக டாக்டர்கள், போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும் என்ற சட்டம் இருப்பதால், தகுதி பெற்ற டாக்டரிடம் செல்லாமல், கருக்கலைப்பில் ஈடுபடுவதால் அத்தகைய பெண்கள் இறந்து போகவும் நேரிடுகிறது. பாதுகாப்பற்ற உடலுறவிற்கு உள்ளாகும் பெண்களுக்கு எய்ட்ஸ் போன்ற நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

ஒரு குழந்தையை கருவில் இருக்கும் போது எப்படி உருவாக்க வேண்டும்? பிறந்தபின் எப்படி வளர்க்க வேண்டும்? என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் பிறந்து விட்டதே என்பதற்காக எப்படியாவது வளர்ப்பது என்பது, நல்லதோர் வீணையை நலம் கெட புழுதியில் எறியும் செயல்தான்.

எதிர்கால தலைமுறை எதையும் சாதிக்கும் தலைமுறையாக வளராது என்பது சமுதாயத்திற்கு ஏற்படும் பெரும் பாதிப்பு. வளர் இளம் பருவ காதல், பள்ளி-கல்லூரிகளுக்கும் பெற்றோர்களுக்கும் தீராத தலைவலியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தொடர் கதையாகவே இருக்கிறது.

இதிலிருந்து வளர் இளம் பருவத்தினர் விடுதலை பெற வேண்டும் என்றால் வயதுக்கு ஏற்ற வயதுக்குப் பொருத்தமான பாலியல் கல்வியை அவர்களுக்கு வழங்க வேண்டும்.

குடும்பம், சமூகம், ஊடகம் ஆகியவை பருவம் அடைதல் என்பதற்கான பொருளை அறிவியல் சார்ந்த காரணங்களோடு சொல்லித்தர வேண்டும். பாலியல் ஆர்வக்கோளாறில் ஈடுபடுகின்ற சிறுவர்-சிறுமிகளின் செயல்கள் அவர்களது குடும்பத்தையும் அவர்கள் சார்ந்த கல்வி நிறுவனங்களையும், உறவினர்களையும் நண்பர்களையும் எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதையும் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

அவர்களது பிரச்சினை குறித்து தங்களுடன் விவாதிக்கும் அளவுக்கு பேராசிரியர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் தங்களை நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும்.

“காதலிலும் போரிலும் எல்லாமே சரிதான்” என்று அலங்காரமாக எளிதில் சொல்லிவிடலாம். ஆனால் தேவையற்ற மற்றும் திணிக்கப்பட்ட பாலியல் உறவு, கல்வி கற்கின்ற அடிப்படை உரிமையை காணாமல் போகச் செய்து விடுகிறது.

அதுமட்டுமல்லாமல் கல்வி மூலம் பெறுகின்ற அறிவு, பண்பாடு, வேலைவாய்ப்பு. பொருளாதார சுதந்திரம், தனித்துவமாக இயங்கும் வாய்ப்பு, அறிவும் திறமையும் வாய்ந்த அடுத்த தலைமுறையை உருவாக்குகின்ற சக்தி ஆகியவற்றை இழக்கிறார்கள் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

பாலியல் கல்வி என்பது இனப்பெருக்கம் அல்லது பாலியல், பிரச்சினைகளை எவ்வாறு தவிர்ப்பது என்பது பற்றி கற்பிப்பது மட்டுமல்ல. ஆரோக்கியமான மகிழ்ச்சியான பாதுகாப்பான உடலுறவு மற்றும் இனப்பெருக்க வாழ்க்கைக்கு இளைஞர்களை தயாரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

ஆரோக்கியமான சுய அறிவு மற்றும் நல்லிணக்கம், ஆரோக்கியமான உரையாடல் மற்றும் புரிதல், ஆரோக்கியமான மனநிலை மற்றும் வாழ்க்கை முறைகளை உருவாக்க பாலியல் கல்வி அவசியம் என்று உளவியல் நிபுணர்கள் சொல்லியிருக்கிறார்கள் இவ்வாறு அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top