Close
நவம்பர் 22, 2024 7:15 காலை

துப்பாக்கி குண்டுக்கு பலியான சிறுவனின் தாயாருக்கு அரசுப்பணி: தமிழக அரசுக்கு நன்றி

புதுக்கோட்டை

வேலை வழங்கியதற்காக தமிழக அரசுக்கு ஆட்சியர் கவிதா ராமுவை நேரில் சந்தித்து நன்றி கூறிய சிறுவனின் குடும்பத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை ஊராட்சியில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சித் தளத்திலிருந்து வெளியான குண்டு அடிபட்டு இறந்த சிறுவனின் தாயாருக்கு சத்துணவுத் திட்டத்தில் வேலை வழங்கிய தமிழக அரசுக்கு மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து சிறுவனின் குடும்பத்தினர் தங்களது நன்றியை  தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை ஊராட்சிக்கு உட்பட்ட கொத்தமங்கலப்பட்டியைச் சேர்ந்த கலைச்செல்வன் பழனியம்மாள் தம்பதியரின் மகன் புகழேந்தி(11). சிறுவன் கடந்த கடந்த டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி நார்த்தாமலையில் உள்ள  தனது பாட்டி வீட்டில் இருந்தார். அப்பேது அருகில் பசுமலைப்பட்டியில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சித் தளத்தில் இருந்து வெளியான குண்டு சிறுவன் புகழேந்தியின் தலையில் பாய்ந்தது. படுகாயமடைந்த சிறுவன் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தான். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி  கடந்த 3.01.2022 அன்று சிறுவன் உயிரிழந்தார்.

எம்.சின்னதுரை எம்எல்ஏ கோரிக்கை:
பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு  உரிய இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வேலை வழங்க வேண்டும். மேற்படி துப்பாக்கி சுடும் பயிற்சித் தளத்தை நிரந்தமாக மூட வேண்டும் என கந்தர்வகோட்டை தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

மாவட்ட அமைச்சர்களின் கவனத்திற்கும் கொண்டு சென்றார். இதுகுறித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளையிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், மேற்படி துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தை நிரந்தமாக மூடுவதற்கு நீதிமன்றத்தில் அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டு. பயிற்சித்தளம் மூடப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு சார்பிலும், அமைச்சர்கள் சார்பிலும் ரூ.15 லட்சம் வரை நிவாரணம் வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு வேலை என்பது கேள்விக் குறியாக இருந்தது.

இந்நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை யின் தொடர்ச்சியான முயற்சியை அடுத்து, சிறுவன் புகழேந்தியின் தாயாருக்கு  சத்துணவுத் திட்டத்தில் சமையல் உதவியாளர் வேலை வழங்கப்பட்டது. இதற்கான ஆணையை புதுக்கோட்டைக்கு  ஜூன் 8 ஆம் தேதி  வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தனக்கு அரசு வேலை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் புதன்கிழமையன்று புகழேந்தியின் தயார் பழனியம்மாள், தந்தை கலைச்செல்வன் ஆகியோர் எம்எல்ஏ எம்.சின்னதுரையுடன்  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவை, நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பினர் சு.மதியகழன், நார்த்தாமலை ஊராட்சி மன்றத் தலைவர் வேலு மற்றும் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top