Close
நவம்பர் 25, 2024 4:17 காலை

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவிற்கான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை புத்தகத்திருவிழா தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடந்த ஆலோசனைக்கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவிற்கான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

புதுக்கோட்டையில் 5  -ஆவது புத்தகத் திருவிழா நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  தலைமை யில்  (15.06.2022) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7 -ஆம் தேதி வரை புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் 5 -ஆவது புத்தகத் திருவிழா நடத்தப்படவுள்ளது.  இப்புத்தகத் திருவிழாவில் தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற புத்தகப் பதிப்பகங்கள் தங்களுடைய புத்தகங்களை விற்பனை மற்றும் காட்சிப் படுத்துவதற்காக 70 முதல் 80 அரங்குகள் அமைக்கப்படவுள்ளது.

மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக புத்தகத் திருவிழா குறித்து போதுமான அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். புத்தகத் திருவிழாவிற்கு அதிகளவில் வருகைதரும் பொதுமக்களின் வசதிக்காக போதுமான அளவில் கழிப்பிடம் மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.

மேலும் விழாவிற்கு வருகை தரும் பொதுமக்களிடையே புத்தக வாசிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன், அறிஞர்களின் சொற்பொழிவும் நடைபெறவுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் ஒரே நாளில் புத்தக வாசிப்பு திருவிழா நடத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எனவே அனைத்துத்துறை அலுவலர்களும், புதுக்கோட்டை புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்களும் சிறப்பான முறையில் செயல்பட்டு புத்தகத் திருவிழாவை வெற்றிகரமாக நடத்தி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர்கள் பெ.வே.சரவணன் (தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு), ஆர்.ரம்யாதேவி (காவேரி-வைகை-குண்டாறு), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.மணிவண்ணன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொ) கருணாகரன், அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகி கள், புதுக்கோட்டை புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் தங்கம்மூர்த்தி, முத்துநிலவன், மணவாளன், ராஜ்குமார், பாலகிருஷ்ணன், வீரமுத்து, முத்துக்குமார், விமலாவள்ளல், கீதா உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top