Close
நவம்பர் 22, 2024 12:53 மணி

புதுக்கோட்டையில் “உடலை நலமாக்கும் யோகா” நூல் வெளியீட்டு விழா: எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற விழாவில் யோகக்கலை நூலை வெளியிடுகிறார் திமுக எம்பி அப்துல்லா. அதை பெறுகிறார் புதுகை எம்எல்ஏ முத்துராஜா.

மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரி உடல் கல்வி இயக்குநர் (ஓய்வு) முனைவர் நா. விஜயரகுநாதன் எழுதிய “உடலை நலமாக்கும் யோகா” எனும் அவjது ஏழாவது நூல் வெளியீட்டு விழா (19.06.2028) ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் புதுக்கோட்டை அலுவலர் மன்றத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு புதுக்கோட்டை நகர்மன்றத்தலைவர் திலகவதி செந்தில் தலைமை வகித்தார். அலுவலர் மன்றத் தலைவர் வி. ராமு, துணைத்தலைவர் ஏ. முத்துக்கருப்பன், செயலர் கே. அம்பிகாபதி,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மனிதனை சமநிலைக்கு கொண்டு செல்லக்கூடியது யோகா மட்டும்தான்:

புதுக்கோட்டை

நகராட்சித்தலைவர் திலகவதி செந்தில் தலைமையுரை யாற்றி பேசியதாவது: ஆண், பெண், சிறுவர், பெரியவர் என அனைவருக்கும் ஏற்றது யோகா. நானும் தினமும் யோகா செய்து வருகிறேன். எவரும் எளிதில் கற்றுக்கொள்ளக்கூடிய கலை யோகக்கலையாகும். யோகாசனம் உடல் நலத்துக்கு ஏற்றது. உடல் வளர்ச்சி அறிவு வளர்ச்சிக்கு ஏற்றது. ராஜயோகம், பக்தியோகம், கர்மயோகம், ஞானயோகம், தியான யோகம், ஆன்மயோகம் உள்ளிட்ட எழுபதுக்கும் மேற்பட்ட யோகக்கலைகள் உள்ளன. இவை மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும், நமது தேசத்தை செம்மைப்படுத்தவும் பெரிதும் உதவுகின்றன என்றார் திலகவதிசெந்தில்.

இந்தியா எனும் ஞான மரத்தின் கொடை யோகா:

புதுக்கோட்டை

சிறப்பு விருந்தினராக மாநிலங்களவை திமுக எம்பி எம்.எம். அப்துல்லா பங்கேற்று உடலை நலமாக்கும் யோகா எனும் நூலை வெளியிட்டு பேசியதாவது:
ஒருதுறையில் பயின்ற போதும் வேறு ஒரு துறைக்கு வருவது இயல்பான ஆர்வம்தான் காரணம். யோகம் என்றார் அதிருஷ்டம். இந்தியா ஞான பூமி. இங்கு பல்வேறு மதம் சார்ந்த வழிபாட்டு முறைகள் இருந்த போதும், அவை அனைத்தும் யோகாசனம், தியானம் சார்ந்தே இருக்கின்றன. மதம் என்ற கோட்பாடுகளில் ஆன்மீகம் என்பது என்ற பொதுவாகவே இருக்கிறது.

இந்தியாவில், இந்து, முஸ்லீம், கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி போன்ற பல்வேறு மதங்களின் வழிபாட்டு முறை யோகாவின் அடிப்படையிலேயே இருக்கின்றன. இந்த உலகம் அணுவில் தோன்றியது. நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களால் ஆனது. நபிகள் நாயகம் இந்தியாவுக்கு வந்ததாக வரலாறு இல்லை. ஆனால், இஸ்லாமியர்களின் தொழுகை இங்கு தோன்றிய யோகாவுடன் ஒத்துப் போவது வியப்புக்குரியது. ஞானத்தின் புரிதல் இருந்தால் அமைதி வரும். உலகம் அமைதியாக வாழ யோகா முக்கிய பங்கு வகிக்கிறது. இதை யாரும் தனக்கானது என சொந்தம் கொண்டாட முடியாது என்றார் அப்துல்லா.

யோகா என்பது மன அமைதி, உடல் நலத்துக்கு கை கொடுக்கும்:

புதுக்கோட்டை

நூலி முதல் பிரதியை பெற்றுக்கொண்ட புதுக்கோட்டை எம்எல்ஏ டாக்டர்முத்துராஜா பேசியதாவது: நூலாசிரியர் விளையாட்டு தொடர்பாக 2 நூல்களும், யோகாசனம் தொடர்பாக 5 நூல்களும் எழுதியுள்ளார் என்பது புதுக்கோட்டை மாவட்டத்துக்கு பெருமை. பல நோய்களுக்கு அமைதியின்மைதான் முக்கிய காரணம். மன அழுத்தம், ரத்தக்கொதிப்பு ஆகியவற்றை குறைக்கும் வலிமையுடையது யோகா. சால்வை அணிவிப்பதைத் தவிர்த்து நூல்களை வழங்க வேண்டுமென தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி அனைவரும் இந்த நூலை வாங்கி பிறருக்கு வழங்க முன்வர வேண்டும். மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் சுமார் 10 நூல்களையாவது படிக்க வேண்டும். ஒரு நூலகம் திறந்தால் ஒரு சிறைச்சாலை மூடப்படும் என்ற நல்மொழி உள்ளது. புத்தகம் பலரது வாழ்க்கையை மாற்றியிருக்கிறது என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் சான்றுகள் உள்ளன. எனவே மாணவர்கள் புத்தகம் படிக்கும் பழக்கத்தை கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும் என்றார் முத்துராஜா.

கிராம மக்களிடம் யோகாவை கொண்டு சேர்க்க வேண்டும்:

புதுக்கோட்டை

கலைஞர் தமிழ்ச்சங்க நிர்வாகி த. சந்திரசேகரன் பேசியதாவது: யோகா மக்களுக்கு தெரியாத விஷயம் அல்ல. நாட்டில் 76 சதவீத மக்கள் வாழும் கிராமங்களுக்கு யோகா கலையை கொண்டு சேர்க்க வேண்டும். அவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்க வேண்டும்.

இந்திய மற்றும் தமிழகத்தின் மிகப்பெரிய ஆளுமைகள் எல்லாம் யோகா பயிற்சி செய்தவர்கள்தான் என்பதை இந்நூலைப் படித்து தெரிந்து கொண்டேன். எழுதுவது பெரிய விஷயம் அல்ல. அதைப்பின்பற்றி நடப்பதுதான் அரிது. ஆனால் இந்நூல் ஆசிரியர் தான் எழுதியதை பின்பற்றி நடப்பது பாராட்டுக்குரியது.

வாழ்க்கை நெறி முறைகள் குறித்து சித்தர்கள், திருமூலர் போன்றவர்கள் கூறியதை மிகவும் எளிமையாக புரியும் வகையில் மேற்கோள் காட்டியிருப்பது பெருமைக்குரியது என்றார் சந்திரசேகரன்.

மாணவர்கள் தவறான பாதை செல்வதை தடுத்து நல்வழிப்படுத்துவது யோகா:

புதுக்கோட்டை

மூத்த வழக்குரைஞர் என்.சி. ராதாகிருஷ்ணன் பேசியதாவது: அக்காலத்தில் பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள் நடத்தப்படும். அதன் மூலம் மாணவர்கள் நல்லவைகளைக் கற்றுக்கொள்ள முடிந்தது, தீமைகளை தெரிந்து கொண்டனர். மாணவர்களின் மனவலிமை அதிகரிப்பதுடன் பிரச்னைகளை எதிர்கொள்ளும் திறனை பெறமுடிந்தது.
உடல் நலம் தவறான சிந்தனைகளை விட்டொழித்தனர். ஆனால், தற்போது மாணவர்களிடம் ஒழுக்கம் குறைந்துவிட்டது. பெற்றோர்களும் மதிப்பெண் எடுத்தால் போதும் என்று செல்லம் கொடுத்து கெடுத்து வருகின்றனர். எனவே பள்ளி பாடத்திட்டத்தில் யோகாவை சேர்த்து மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். அப்போதுதான சிறுவயது முதலே மன வலிமை உடையவர்களாகவும் உடல் வளமிக்கவர்களாகவும் திகழ முடியும் என்றார் ராதாகிருஷ்ணன்.

யோகா மனிதனை நெறிப்படுத்துகிற இடத்தில் இருக்கிறது:  ந. முருகேசபாண்டியன்:

புதுக்கோட்டை

நூலைப் பற்றி தனது கருத்துரையில் மேலும் பேசியதாவது:உலகமயமாக்கல் காலகட்டத்தில் எங்கும் நுகர் பொருள் பண்பாடு மேலாதிக்கம் செலுத்துகிறது. சமூக நெருக்கடி யினால் பலரும் மன அழுத்தத்தினால் தூக்கமில்லாமல் தவிக்கின்றனர்.

இன்னொரு புறம் சமூக வலைத் தளங்கள் ஒவ்வொருவரின் கருத்துகளையும் வடிவமைக் கின்றன. எல்லோரும் கையில் வைத்திருக்கும் அலைபேசிக்குள் வம்பும் கேளிக்கையுமாக மூழ்கியிருக்கின்றனர். இத்தகைய சூழலில் எங்கும் சுயநலம் பரவியிருக்கிற நிலையில் தனிமனிதரின் இடத்தை உறுதி செய்திட யோகாவும் தியானமும் பயன்படுகின்றன.

வெறுமனே உடல்பயிற்சி, மனப்பயிற்சி என்பதற்கு அப்பால் ஒவ்வொருவரையும் தனிமனித ரீதியில் நெறிப்படுத்திட யோகா அவசியமானது. இந்தியா ஞானபூமி, வேத பூமி, ஞானபூமி என்று வைதிக சநாதனவாதிகள் முன்னிறுத்துகிற வரிசையில் யோகா பூமியைச் சொல்ல முடியாது.

வேத காலத்திற்கு முன்னரே யோகா இந்தியாவில் வழக்கினில் இருந்தது. புத்தமதத்தை நிறுவிய புத்தரும் சமண மதத்தை நிறுவிய மகாவீரரும் யோகாவை முன்வைத்துள்ளனர். கார்ப்பரேட்டுகளின் ஆதாயத்திற்காகச் செயல்படுகிற இன்றைய அரசியல், பொருளாதாரச் சூழலில் ஒருவரின் அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்ள யோகா பயன்படும்.
யோகாவினால் நோய்கள் குணமாகும் என்று கார்ப்பரேட் சாமியார்கள் முன்வைப்பது சரியல்ல. தியானம் மூலம் மனம் நலமடையும் என்பது பொருத்தமன்று. நல்ல உடலும் மனமும் இருக்கிறவர்கள் யோகாவையும் தியானத்தையும் தினமும் செய்து வந்தால் இன்னும் நலமுடன் விளங்குவார்கள்.

பேராசிரியர் நா.விஜயரெகுநாதன் யோகாவினால் உடலை நலமாக்கிடும் வழிமுறைகள விளக்கியுள்ளார். யோகா என்ற சொல்லின் பின்னர் புதைந்திருக்கும் மாபெரும் உலகு புத்தகத்தின் பக்கங்களில் விரிந்துள்ளது. புதுக்கோட்டை நகருக்குச் சிறப்புச் செய்கிற நூலாசிரியருக்கு வாழ்த்துகள் என்றார் முருகேசபாண்டியன்.

பேராசிரியர் டி. சந்திரசேகர், பேராசிரியர்(ஓய்வு) பொ.அண்ணாமலை, பாண்டியன் (மின்வாரியம்-ஓய்வு) , நா. விஜயகுமார்(எல்ஐசி), பாரதிதாசன் பல்கலைக்கழக உடல்கல்வி இயக்குநர் முனைவர் ஏ.பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில், வாசகர் பேரவைச்செயலர் எஸ். விஸ்வநாதன், அறிவியல் இயக்க நிர்வாகி அ. அன்புமணவாளன், அறந்தாங்கி நகர்மன்ற உறுப்பினர் பழனிராஜன், முனைவர் தமிழ்வேந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு  உடலை நலமாக்கும் யோகா  புத்தகத்தை நகர் மன்றத்தலைவர் வழங்கினார்.
நிறைவாக நூலாசிரியர் முனைவர்.நா.விஜயரெகுநாதன் ஏற்புரையாற்றினார். டாக்டர் கே.ஏ. ரமேஷ் வரவேற்புரை யாற்றினார். விரிவுரையாளர் சி. செல்வராஜ் நன்றியுரை யாற்றினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top