Close
செப்டம்பர் 20, 2024 3:40 காலை

12-ஆம் வகுப்பு 93.76% – 10 -ஆம் வகுப்பு 90.07% தேர்ச்சி10, +2 தேர்வு முடிவுகள்: மாணவிகள் சாதனை 24–ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

அன்பில் மகேஸ் பொய்யாமொழி

கல்வி அமைச்சர்

12ம் வகுப்பு 93.76% – 10ம் வகுப்பு 90.07% தேர்ச்சி10, +2 தேர்வு முடிவுகள்: மாணவிகள் சாதனை.  24–ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுமென அறிவிப்பு.
மு.க.ஸ்டாலின் வாழ்த்து:
பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள், மேற்படிப்புகளில் கவனம் செலுத்தி உங்களது வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்ள வாழ்த்துகிறேன். தேர்ச்சிபெறாதவர்கள், மனம்தளர வேண்டாம். அடுத்தமுயற்சியில் தேர்வு பெறுங்கள். உங்களுக்கான வெற்றி காத்திருக்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்.
10 மற்றும் 12  ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  வெளியிட்டார்.  இதில் 10-ம் வகுப்பில் 90.07 சதவீதம் பேரும், 12-ம் வகுப்பில் 93.76 சதவீதம் பேரும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம்.

சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு கூட்ட அரங்கில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  வெளியிட்டார். மாணவர்கள் தங்கள் முடிவுகளை www.tnresults.nic.in,  www.dge1tn.nic.in, www.dge2.tn.nic.in,  www.dge.tn.gov.in  ஆகிய இணைய தளங்களில் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவகளை தெரிந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

இந்த முடிவுகள், யாரெல்லாம் செல்போனில் பதிவு செய்துள்ளார்களோ, அவர்களுக்கு முதலில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும், பின்னர் 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) மூலம் அனுப்பப்பட்டன.

இதுதவிர அந்தந்த பள்ளிகளிலும், இணையதளம் வாயிலா கவும் முடிவுகள் தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள் ளன. தேர்வு முடிவைப் பொறுத்தவரை வெற்றி தோல்வி மனபான்மை இருக்கக்கூடாது. உயர் கல்வி தொடர்பான சந்தேகங்கள், அச்ச உணர்வு உள்ளிட்டவைகளுக்கு மாணவர்கள் 14417 மற்றும் 1098 என்ற இலவச உதவி எண்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

12 -ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஜூன் 24 ந்தேதி முதல் பதிவிறக்கம் செய்து மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழ் வரும் வரை விண்ணப்பிக்க இதை பயன்படுத்திக் கொள்ளலாம். 12 -ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் கவலைப்பட வேணடாம்.

தன்னம்பிக்கைதான் முக்கியம். மீண்டும் முயற்சி செய்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற முடியும். அந்த நம்பிக்கையோடு அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும். தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு வரும் ஜூலை மாதமே அடுத்த தேர்வை உடனே நடத்தி இந்த கல்வி ஆண்டே மாணவர்கள் உயர் கல்விக்கு செல்ல தேவையான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் எடுப்போம். அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.

மாணவர்களைவிட மாணவிகள் 8.55% அதிகம்

10ம் வகுப்பில் தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 12 ஆயிரத்து 620 ஆகும். இதில் மாணவியரின் எண்ணிக்கை 4 லட்சத்து 52 ஆயிரத்து 499, மாணவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 60 ஆயிரத்து 120, மூன்றாம் பாலினத்தவர் ஒருவர். இதில் தேர்ச்சிப் பெற்றவர்கள் 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 பேர், 90.07 சதவீதம் பேர் தேர்ச்சிப் பெற்றவர்கள். இதில் மாணவிகள் 4 லட்சத்து 27 ஆயிரத்து 73 பேர், (94.38 சதவீதம்), மாணவர்கள் 3 லட்சத்து 94 ஆயிரத்து 920, (85.83 சதவீதம்) பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் 8.55% அதிகமாக தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

24 -ஆம் தேதி தற்காலிக  மதிபெண் சான்றிதழ்

இதேபோல 12-ஆம் வகுப்பில் தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 6 ஆயிரத்து 277 பேர், இதில் மாணவிகள் 4 லட்சத்து 21 ஆயிரத்து 622, மாணவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 84 ஆயிரத்து 655 ஆகும்.

தேர்ச்சிப் பெற்றவர்கள் 7 லட்சத்து 55 ஆயிரத்து 998, இது 93.76 சதவீத தேர்ச்சி ஆகும். இதில் மாணவிகள், 4 லட்சத்து 6 ஆயிரத்து 105, (96.32) சதவீதம், மாணவர்கள் 3 லட்சத்து 49 ஆயிரத்து 893, (90.96 சதவீதம்) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 5.36 சதவீதம் அதிகமாக தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

12ம் வகுப்புக்கு ஜூலை 25 முதல் துணை தேர்வுகள் தொடங்கும். 10ம் வகுப்புக்கான துணைத் தேர்வு ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி தொடங்கும் என்று  அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

12 -ஆம் வகுப்பில் பெரம்பலூர் முதலிடம்

தமிழகத்தில் கடந்த மே மாதம் 5 ந்தேதி முதல் 28 ந்தேதி வரை 12 ம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றது. இன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் 97.95% மாணவர்கள் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 97.27% மாணவர்கள் தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் 2-ஆவது இடத்திலும், 97.02% மாணவர்கள் தேர்ச்சி பெற்று ராமநாதபுரம் மாவட்டம் 3-ஆவது இடத்திலும் உள்ளது.

அதற்கு அடுத்தப்படியாக கோவை மாவட்டத்தில் 96.91 சதவீத மாணவர்களும், மதுரை மாவட்டத்தில் 96.89 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.

மொத்தமுள்ள 7499 மேல்நிலைப்பள்ளிகளில், 100% தேர்ச்சிப் பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 2,628 ஆகும். இதில் அரசு பள்ளிகளின் எண்ணிக்கை 246 ஆகும்.

தேர்ச்சி விகிதத்தில் அரசுப் பள்ளிகள் 89.06 சதவிகிதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.87%, தனியார் சுயநிதி பள்ளிகள் 99.15%-ஆம் பெற்றுள்ளது.

அறிவியல் பாடப் பிரிவுகளில் 95.51 சதவீதமும், வணிகவியலில் 92.51%, கலைப்பிரிவுகள் 85.13%, தொழிற்பாடப் பிரிவுகள் 84.26% தேர்ச்சி பெற்றுள்னர்.

இயற்பியல் பாடப்பிரிவில் 634 பேர் 100 சதவிகித மதிப்பெண் எடுத்துள்ளனர். இதேபோல வேதியியல் 1500 பேரும், உயிரியல் 1541 பேரும், கணிதம் 1858 பேரும், தாவரவியல் 47 பேரும், விலங்கியல் 22 பேரும், கணினி அறிவியல் 3827 பேரும், வணிகவியல் 4634 பேரும், கணக்கு பதிவியல் 4540 பேரும், பொருளியியல் 1146 பேரும், கணினிப் பயன்பாடுகள் 2818 பேரும், வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் 1151 பேரும் 100 சதவிகித மதிப்பெண் எடுத்துள்ளனர்.

தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணவர்களின் எண்ணிக்கை 3095 ஆகும். இதில் 2824 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 74 சிறைவாசிகள் தேர்வு எழுதிய நிலையில் 71 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு வருகை புரியாத மாணவர்களின் எண்ணிக்கை 31,034 ஆகும்.

12 ம் வகுப்பு தேர்வு மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது. இதில் 591 மதிப்பெண்களுக்கு மேல் 656 பேரும், 581லிருந்து 590 வரை 3,826 பேரும், 571லிருந்து 580 வரை 6674 பேரும், 551 லிருந்து 570 வரை 18 ஆயிரத்து 977 பேரும் எடுத்துள்ளனர்.

10-ஆம் வகுப்பு தமிழில் ஒரு மாணவர் 100 மார்க்

10-ஆம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடத்தில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே 100 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.10 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 714 ஆகும். இதில் 4 ஆயிரத்து 6 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் 886 அரசு பள்ளிகள் ஆகும்.

தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் அரசுப் பள்ளிகள் 85.25%ம், அரசு உதவிப் பெறும் பள்ளிகள் 89.01%ம் தனியார் சுயநிதி பள்ளிகள் 98.31%ம் தேர்ச்சி அடைந்துள்ளது.

தமிழ் பாடத்தில் ஒரே ஒருவர் மட்டுமே 100 சதவிகிதம் மதிப்பெண் எடுத்துள்ளார். ஆங்கிலத்தில் 45 பேரும், கணிதம் பாடத்தில் 2186 பேரும், அறிவியல் 3841 பேரும், சமூக அறிவியல் 1009 பேரும் 100% மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

தேர்வெழுதிய 242 சிறைவாசிகளில் 133 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.22% தேர்ச்சி பெற்று கன்னியாகுமரி மாவட்டம் முதலிடத்திலும், 97.15% தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் 2-ஆவது இடத்திலும், 95.96% தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் 3-ஆவது இடத்திலும் உள்ளது.

2022ம் ஆண்டு 10-ஆம் வகுப்பு தேர்வை 42,519 மாணவர்கள் எழுதவில்லை என்றும், இது 2019-ஆம் ஆண்டை விட 22 ஆயிரம் அதிகம் என்றும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

கடைசி இடத்தில் வேலூர்

வேலூர் மாவட்டத்தில் 15,341 மாணவ மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் 13,299 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 86.69 சதவீதமாக உள்ளது.

இதேபோன்று 17, 963 மாணவ மாணவிகள் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். இதில் 14,347 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் . தேர்ச்சி விகிதம் 79.87 சதவீதமாக உள்ளது. தமிழக அளவில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

மீண்டும் முயற்சி செய்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற முடியும். அந்த நம்பிக்கையோடு அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும். தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு வரும் ஜூலை மாதமே அடுத்த தேர்வை உடனே நடத்தி இந்த கல்வி ஆண்டே மாணவர்கள் உயர் கல்விக்கு செல்ல தேவையான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் எடுப்போம். அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்றார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top