Close
செப்டம்பர் 20, 2024 1:34 காலை

புதுக்கோட்டையில் ஜூலை 16, 17-இல் தொல்லியல் கழகத்தின் சர்வதேச மாநாடு: சுற்றறிக்கை வெளியிட்டார் ஆட்சியர்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள சர்வதேச தொல்லியல் மாநாடு தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்ட ஆட்சியர் கவிதா ராமு. உடன் தொல்லியல் ஆய்வுக்கழக நிர்வாகிகள்

புதுக்கோட்டையில் ஜூலை 16, 17ஆம் தேதிகளில் தமிழகத் தொல்லியல் கழகத்தின் சர்வதேச மாநாடு நடைபெற உள்ள நிலையில், மாநாடு தொடா்பான சுற்றறிக்கையை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.

கடந்த 1991ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழகத் தொல்லியல் கழகத்தில் சிறந்த தொல்லியல் ஆய்வாளா்களாகக் கருதப்படும் எஸ். சுப்பராயலு, ப. சண்முகம், சு. ராஜவேலு, க. ராஜன், சொ. சாந்தலிங்கம், அர. பூங்குன்றன், செந்தீ நடராஜன் உள்பட ஏறத்தாழ 1,200 பேரை உறுப்பினா்களாக உள்ளனா்.

தற்போது இந்த அமைப்பின் தலைவராக செந்தீ நடராசன், பொதுச் செயலராக சு. ராஜவேலு உள்ளிட்டோா் செயல்படுகின்றனா். ஆண்டுதோறும் இந்த அமைப்பின் மூலம் சா்வதேசக் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்த் தொல்லியல் கண்டுபிடிப்புகளை ஆவணப்படுத்தும் வகையில் ‘ஆவணம்’ இதழ் வெளியிடப்பட்டு வருகிறது. இதில், பதிவான புதிய கண்டுபிடிப்புகள் வரலாற்று ஆவணமாகத் திகழ்வது  குறிப்பிடத்தக்கது. இதுவரை 30 ‘ஆவணம்’ இதழ்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், தொல்லியல் கழகத்தின் 30 மற்றும் 31-ஆவது கருத்தரங்கு மற்றும் 31-ஆவது ‘ஆவணம்’ இதழ் வெளியீட்டு நிகழ்ச்சி சர்வதேச தொல்லியல் மாநாடாக புதுக்கோட்டையில் நடைபெறவுள்ளது.

புதுக்கோட்டை கற்பக விநாயகா மண்டபத்தில் ஜூலை 16, 17 தேதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டில், சா்வதேச அளவிலான ஆய்வாளா்கள், ஆா்வலா்களும் 300 போ் கலந்து கொள்ளவுள்ளனா். மாநில தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு உள்ளிட்டோரும் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொள்கின்றனா்.

புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனா் ஆ. மணிகண்டனை உள்ளூா் செயலராகக் கொண்ட வரவேற்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டின் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தொல்லிடங்களை நேரில் சென்று பாா்ப்பதற்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மாநாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு, தொல்லியல் ஆய்வுக் கழக நிா்வாகிகளை  தனது அலுவலகத்தில் நேரில் சந்தித்து பேசினாா். அப்போது, மாநாடு தொடா்பான மூன்றாவது சுற்றறிக்கையை அவா் வெளியிட்டாா்.

புதுக்கோட்டை மாவட்ட தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் தலைவா் கரு, ராஜேந்திரன் அந்த சுற்றறிக்கையை பெற்றுக் கொண்டாா். அப்போது மாநாட்டுக் குழுவினா் ஜி.எஸ். தனபதி, பேராசிரியா் சா. விஸ்வநாதன், சை. முகமது மஸ்தான் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இது தொடர்பாக புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனா் ஆ. மணிகண்டன்  தமிழ்மணி இணையதள செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை அடையாளம் காணப்படாத 200 க்கும் மேற்ப்பட்ட தொல்லிடங்கள் பழமையான கட்டுமானங்கள். சிற்பங்கள். உள்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள் உள்ளிற்றவற்றை அடையாளப்படுத்தியுள்ளது.  இதில் குறிப்பிடத்தக்கவகையில் புதிய கற்கால கற்கோட்ட விசலூர் சிற்பங்கள் உள்ளிட்டவை புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் மாவட்ட ஆட்சியர் மூலமாக ஒப்படைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

சிதைந்த நிலையில் இருந்த கண்ணனூர் நெடுங்கற்கள். பொற்பனை கோட்டை அகழ்வாய்வு உள்ளிட்ட தொல்லிடங்களை பாதுகாப்பதற்கு சட்டப்பூர்வ உத்தரவையும் அகழ்வாய்வு செய்வதற்கான உத்தரவையும் சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளை மூலமாக வழக்கறிஞர் கணபதி சுப்ரமணியம்  உதவியோடு பெறப்பெற்றது

மாவட்ட நிருவாகத்தின் துணையோடு தொல்லிடங்களை பாதுகாப்பதற்கும் உள்ளூர் அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், புதிய ஆய்வாளர்களை உருவாக்குவதற்கான பயிற்சிகள். கருத்தரங்குகள், கண்காட்சிகள் உள்ளிட்டவற்றை நடத்தி வருதல் போன்ற பணிகளை செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top