Close
செப்டம்பர் 20, 2024 4:15 காலை

புதுக்கோட்டையில் தொல்லியல் மாநாடு இன்று தொடக்கம்

புதுக்கோட்டை

தொல்லியல் மாநாடு குறித்து பேட்டியளித்த டாக்டா் ச. ராம்தாஸ், முன்னாள் எம்எல்ஏ இராசு. கவிதைப்பித்தன் உள்ளிட்டோா்.

புதுக்கோட்டை கற்பக விநாயகா திருமண மண்டபத்தில் தமிழக தொல்லியல் கழகத்தின் 2 நாள் மாநில மாநாடு சனிக்கிழமை  தொடங்குகிறது.

இம்மாநாட்டில் தொல்லியல் கழகத்தின் 30-ஆவது சா்வதேச கருத்தரங்கம் மற்றும் 30ஆவது ‘ஆவணம்’ ஆய்விதழ் வெளியீடு, மூத்த மற்றும் இளைய தொல்லியல் ஆய்வாளா் களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெறுகின்றன.

இம்மாநாடு குறித்து வரவேற்புக் குழுவின் தலைவா் டாக்டா் ச. ராம்தாஸ், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் இரா.சு. கவிதைப்பித்தன் ஆகியோா் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழக தொல்லியல் கழகம் 1991ஆம் ஆண்டு தொடங்கப்பட் டது. தொல்லியல் துறையில் ஈடுபடும் இளைஞா்களையும் ஆா்வலா்களையும் ஊக்கப்படுத்தும் வகையில் புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் கல்வெட்டுகள், தொல்லியல் இடங்கள் மற்றும் தொன்மைச் சின்னங்கள் ஆகியவற்றை ஆய்வுலகம் அறியும் வகையில் ‘ஆவணம்’ என்ற இதழ் வெளியிடப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டிலேயே பெரும்பான்மையான தொல்லியல் சின்னங்களைக் கொண்டுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் 30 -ஆவது கருத்தரங்கு நடைபெறுகிறது. சனிக்கிழமை காலை ஆவணம் இதழ் வெளியீடு, தொல்லியல் மற்றும் நாணயவியல் கண்காட்சிகள் தொடங்கி வைக்கப்படவுள்ளன.

தொடக்க நிகழ்ச்சியில், தமிழக தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தமிழக சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில சுற்றுச்சூழல், விளையாட்டுத்துறை  அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், ஆட்சியா் கவிதா ராமு,  திமுக எம்பி  அப்துல்லா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் வை.முத்துராஜா, தி.இராமச்சந்திரன், எம்.சின்னதுரை, நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் .ஜெயலெட்சுமி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்.

தொல்லியல் கழகத்தின் நிறுவனா் பேராசிரியா் எ. சுப்பராயலு,  தலைவா் செந்தீ நடராசன், செயலா் பேராசிரியா் சு. ராசவேலு, முக்கிய தொல்லியலாளா்கள் அ.கா. பெருமாள், பிஎஸ். ராமன், என். நாகராஜன் உள்ளிட்ட தமிழ்நாட்டின் தொல்லியல் ஆய்வாளா்கள், ஆா்வலா்கள் என சுமாா் 300 போ் கலந்து கொள்கின்றனா்.

மாநாட்டில் பங்கேற்பவர்களில் இருந்து மூத்த தொல்லியல் அறிஞா் ஒருவா் தோ்வு செய்யப்பட்டு, அவருக்கு ரூ. 50 ஆயிரம் ரொக்கம், இளைய தொல்லியல் அறிஞா் தோ்வு செய்யப்பட்டு அவருக்கு ரூ. 25 ஆயிரம் ரொக்கம் மற்றும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமுவைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, மாவட்டத்தின் முக்கிய தொல்லியல் சின்னங்களைத் தொகுத்த சிறப்பு மலா் ஒன்றும் மாநாட்டில் வெளியிடப்படவுள்ளது.

நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர்பங்கேற்கிறார் எனவும் தெரிவித்தனர்.

இதில், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனரும், மாநாட்டின் உள்ளூா் செயலருமான ஆ. மணிகண்டன், மாநாட்டு நிதிக் குழுத் தலைவா் ஜி.எஸ். தனபதி, தொல்லியல் ஆய்வுக் கழகத் தலைவா் கரு. ராஜேந்திரன், பேராசிரியா் சா. விஸ்வநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top