Close
நவம்பர் 22, 2024 7:00 காலை

ஸ்டான்லி மருத்துவமனையில் 10 ஆயிரம் இதய நோயாளிகளுக்கு ஆஞ்சியோ சிகிச்சை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

புதுக்கோட்டை

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சயில் காலை இழந்த நோயாளி ஒருவருக்கு செயற்கை காலை வழங்கிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

சென்னை அரசு ஸ்டாலின் மருத்துவமனையில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் நிதி உதவியுடன் 10 ஆயிரம் இதய நோயாளிகளுக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  தெரிவித்தார்.

தேசிய ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை தினத்தையொட்டி  சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிறப்பு நிகழ்ச்சி ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் பி.பாலாஜி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இத்தினத்தின் இந்த ஆண்டுக்கான கருப்பொருளான ‘வாழ்க்கை தரத்தை உயர்த்தும் ஒட்டுறுப்பு மற்றும் மறு சீரமைப்பு அறுவை சிகிச்சை‘ குறித்து நிகழ்ச்சியில் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராகக்  கலந்து கொண்டார்.

அப்போது மருத்துவ மாணவர்கள் திறன் பயிற்சி பெறுவதற்கு வசதியாக ரூ.26 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள திறன் ஆய்வகம், ரூ. 25 லட்சம் செலவில் புணரமைக்கப்பட்டுள்ள குளிரூட்டும் வசதிகளுடன் கூடிய கூட்ட அரங்கம் உள்ளிட்ட வைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

இதயவியல், கல்லீரல், குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சை, சிறுநீரகவியல், எலும்பு மற்றும் முடநீக்கியல் உள்ளிட்ட துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவக் கண்காட்சியை பார்வையிட்ட அமைச்சர் இத்துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு சிகிச்சை முறைகள், சாதனைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் களிடம் கூறியது: 1971- ஆம் ஆண்டு வடசென்னை தினக்கூலி தொழிலாளர்களின் நலனுக்காக 20 படுக்கைகள் கொண்ட மருத்துவ வார்டினை ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைத் துறை தலைவராக இருந்த டாக்டர் வெங்கடசாமியால் தொடங்கப் பட்ட இந்தத் துறை கை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் அளவிற்கு சாதனை படைத்து பெரும் புகழை அடைந்துள்ளது. கை ஒட்டுறுப்பு சிகிச்சை பிரிவில் உயர் சிறப்பு முதுகலை படிப்பில் இரண்டு இடங்கள் அடுத்த ஆண்டு முதல் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

10 ஆயிரம் நோயாளிகளுக்கு ஆஞ்சியோகிராம்: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஸ்டாலின் மருத்துவமனையில் மட்டும் ரூ.10 கோடி செலவில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட இதய நோயாளிகளுக்கு ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்ட் உள்ளிட்ட சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு நோயாளிகள் அறுவைச் சிகிச்சை இல்லாமல் மாரடைப்பிலிருந்து காப்பற்றப்பட்டுள்ளனர். காப்பீட்டு திட்டத்தின் ரூ.10.50 லட்சம் செலவில் ஆறு நோயாளிகளுக்கு செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது. காப்பீட்டுத் திட்டம் மூலம் தமிழகத்தில் உள்ள 1700 மருத்துவமனைகளில் 1090 வகையான நோய்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி கைவிடப்பட்டு உணவுக் குழாய் கோளாறால் அவதிப்பட்டு வந்த நோயாளி ஒருவர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெற்றிகரமாக கொலோபிளாஸ்டி என்ற நூதன அறுவை சிகிச்சை மூலம் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு முற்றிலுமாக இயல்பு நிலைக்கு திரும்ப கொண்டு வரப்பட்டுள்ளார்.

சிறுநீரகவியல் துறை சார்பில் இதுவரை சுமார் 900 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ள்ளது. இது போன்று பல்வேறு சிறப்புச் சிகிச்சைகள் மூலம் அரசு மருத்துவமனைகள் சாதனைகள் படைத்து வருவது பாராட்டுக்குரியது. தமிழகத்தின் கடைகோடி கிராமங்க ளுக்கும் மலைப்பகுதி கிராமங்களுக்கும் நேரடியாகச் சென்று அவர்களின் நலன் காப்பது குறித்து கவனம் செலுத்தி வருகிறோம்.

தொடர் கண்காணிப்பில் செயற்கை கருவூட்டல் மையங்கள்: கருமுட்டை தானம் செய்வதில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்காக 38 மாவட்டங்களைச் சேர்ந்த மருத்தவ இணை இயக்குனர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

இதில் செயற்கை கருவூட்டல் மையங்களை தொடர்ந்து கண்காணிப்பது குறித்து போதிய வழிகாட்டுதல் பயிற்சி அளிக்கப்படும். சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டிய மருத்துவத் துறையை பணம் சம்பாதிக்கும் துறையாக மாற்றம் செய்ய முயன்று தவறிழைப்பவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளிநாட்டு மருத்துவ மாணவர்கள் நலன்: வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றுவிட்டு பயிற்சி மருத்துவராக பணியாற்று வதில் இருக்கும் சிரமங்களை களைவதற்காக விரைவில் தெளிவான வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்படும். பயிற்சி மருத்துவராக பதிவு செய்ய மருத்துவக் கல்வி இயக்ககத் திலேயே இனி பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சி பெற அரசு மருத்துக் கல்லூரிகளில் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை நீக்கப்பட்டுள்ளது.

இதேபோல தனியார் மருத்துவமனைகளிலும் கட்டணமின்றி பயிற்சி மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டும். வெளிநாட்டு மருத்துவ மாணவர்களின் பயிற்சிக்காக அனுமதிக்கப்பட் டுள்ள 7.5 சதவீதத்தை 20 சதவீதமாக உயர்த்தவும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பயிற்சிகளை மேற்கொள்ள அனுமதிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றார் அமைச்சர் சுப்பிரமணியன்.

இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன், ராயபுரம் எம்.எல்.ஏ. ஐட்ரீம் மூர்த்தி, சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் முனைவர் பி.செந்தில்குமார், சென்னை மாநகராட்சி நிலைக் குழு தலைவர் இளையஅருணா, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜா சபாபதி, கல்லூரி துணை முதல்வர் ஜமிலா, துறை தலைவர்கள் டாக்டர் பூபதி, டாக்டர் கண்ணன், டாக்டர் எட்வின் பெர்னாண்டோ, டாக்டர் ஜெஸ்வந்த், டாக்டர் ரமாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top