Close
நவம்பர் 22, 2024 11:22 காலை

புத்தகங்கள் என்பது வெறும் தாளும் மையும் மட்டுமல்ல… அதற்குள் எழுதியவனின் ஆன்மா இருக்கிறது: எழுத்தாளர் நாறும்பூநாதன்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவில் பேசுகிறார், எழுத்தாளர் நெல்லை நாறும்பூநாதன்

புத்தகங்கள் என்பது வெறும் தாளும் மையும் மட்டுமல்ல. அதற்குள் எழுதியவனின் ஆன்மா இருக்கிறது என்றார் எழுத்தாளர் நெல்லை நாறும்பூநாதன்.

புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவில் எழுத்தாளர் நெல்லை நாறும்பூநாதன்  மேலும்  பேசியதாவது:

தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்தும் இந்த புத்தக திருவிழாவில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். புத்தகங்கள் கொண்டாடப்பட வேண்டும்.

புத்தகங்கள் என்பது வெறும் தாளும் மையும் மட்டுமல்ல. அதற்குள் எழுதியவனின் ஆன்மா இருக்கிறது. ஒரு மரத்தின் வேருக்கும் விழுதுக்கும் உள்ள தொடர்பு போன்றது, புத்தகங்களுக்கும் வாசிப்பவனுக்கும் உள்ள தொடர்பு.
“யாதும் ஊரே யாவரும் கேளீர் ” என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளோடு, நமது சிந்துவெளி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் , தனது சொற்பொழிவை முடித்தார். அதில் இருந்தே துவங்கலாம்.

180 ஆண்டுகளுக்கு முன்பு, பாளையங்கோட்டைக்கு வந்த சமய போதகர் ஜான் டக்கர், தனது சகோதரி சாராள் டக்கருக்கு எழுதிய கடிதத்தில்,இங்கு பெண்கள் கல்வி பயில்வதில்லை என்று குறிப்பிடுகிறார்.
இந்தியாவில், தமிழ்நாட்டில், நெல்லை சீமையில் உள்ள பெண்கள் கல்வி பயில, மாற்று திறனாளியான சாராள் டக்கரும், அவளது தோழிகளும் 822 பவுன் தங்கத்தை சேகரித்து அனுப்புகிறார்கள். அப்படி உருவான பெண்கள் பள்ளி சாராள் டக்கர் பள்ளி, சாராள் டக்கர் கல்லூரி.இன்று பத்து லட்சத்திற்கும் மேலான மாணவிகள் பயின்ற அந்த கல்வி நிறுவனம் சாராளின் பெயரை சொல்லிக் கொண்டிருக்கிறது.

1890 ல்  ஆனி ஆஸ்க்வித் என்ற வெளிநாட்டு பெண்மணியால், கண் பார்வையற்றோர் பள்ளி இங்கு தொடங்கப்பட்டது. அது இந்தியாவில் இரண்டாவது பள்ளியாகும். 1895 -ல் பிளாரென்ஸ் சுவைன்சன் என்ற ஐரோப்பிய பெண்மணி ஒருவரால், காது கேளாதோர், வாய் பேச இயலாதோர் பள்ளி, இங்கு துவக்கப்பட்டது. அது இந்தியாவில் தொடங்கப்பட்ட மூன்றாவது பள்ளிஎன்ற பெருமை கொண்டது.

மனநலம் குன்றியோருக்கு இங்கு பள்ளி உண்டு.இப்படி எல்லாவித மனிதர்களுக்கும் இங்கு பள்ளி இருப்பதால் தான், தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என்ற பெருமையை பாளையங்கோட்டை நகரம் பெறுகிறது.யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பதை படிக்காமலேயே இவர்கள் இத்தகைய பணிகளை செய்தார்கள்.

அவர்களைப் பற்றிய செய்திகளும், கத்தோலிக்க கிறிஸ்தவம் எப்படி தமிழ்நாட்டில் பரவியது என்பதை களப்பணி மூலம் ஆய்வு செய்தும் எழுதப்பட்ட நூல் தான் அறியப்படாத கிறிஸ்தவம் என்ற நூல். இந்த புத்தக திருவிழாவிலும் அந்த நூல் விற்பனையில் இருக்கிறது.நமது பண்பாடு சார்ந்து பேரா.தொ.பரமசிவன் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். அவை படிக்க ரொம்ப சுவாரசியமானவை.

உதாரணத்திற்கு ” குளித்தல்” என்பதை உடலின் அசுத்தங்கள் நீக்குதல் என்ற பொருளில் பேசுகிறோம். உண்மையில், வெப்ப மண்டல நாடுகளில் உள்ள பெருவாரியான உழைக்கும் சாதியார், மாலை வேளையில் ஆற்றில் நீராடி, தங்கள் வெப்பம் மிகுந்த உடலை குளிர்விப்பார்கள். குளிர்வித்தல் என்பதே குளித்தல் ஆயிற்று.
குளித்தலை கொண்டாடிய சமூகம் தமிழ் சமூகம். உலக இலக்கியங்கள் எங்காவது நீராடுதலை கொண்டாடியிருக் கிறதா ?தமிழ் இலக்கியத்தில் மட்டுமே, ” நீராடற்பருவம் ” என்பதை ஒரு உறுப்பாக வைத்துள்ளனர். சிலப்பதிகாரத்தில், மாதவி , பல்வேறு மூலிகை, சந்தன திரவியங்களை கலந்த நீரில் நீராடினாள் என்று சொல்கிறது.

புதுக்கோட்டையில் ஏராளமான சமண படுகைகள் இருக்கின்றன. ” சோற்றை கொடையாய் கொடுகல்வியைக் கொடையாய்க் கொடு மருந்தைக் கொடையாய்க் கொடுஅண்டி வந்தவனுக்கு அடைக்கலம் கொடு ”
இவை நான்கும் தான் சமணத்தின் அடிப்படைக்கொள்கைகள்.
இதுதானே, யுனெஸ்கோ என்ற சர்வதேச அமைப்பின் கொள்கைகளாக இன்று விளங்குகிறது ?இதைத்தானே சமணம் அன்றே சொன்னது. சமண துறவிகள், மருத்துவ ஏடுகளை சுமந்துகொண்டு அலைந்தார்கள். குகைகளில் வாழ்ந்தார்கள்.
ஒருநாளைக்கு ஒருவேளை மட்டுமே உண்டு மீதி நேரம் பட்டினி கிடந்தார்கள். வைதீகம் வந்து அரசுகள் உருவானபிறகு தான், மருத்துவம் ஒரு தொழிலாக மாறுகிறது.
பாட்டி வைத்தியம் என்ற ஆணிவேரை அறுத்து எறிந்தால் மட்டுமே, பன்னாட்டு முதலாளிகள் தங்களின் பொருட்களை சந்தைப்படுத்த இயலும் என்பதை கண்டுகொண்டு, அந்த வேலைகளை இன்று கச்சிதமாய் செய்து வருகிறார்கள்.
பேரா.தொ.ப. அவர்களின் புத்தகங்களை வாசித்தால், நமது முன்னோர்களின் பட்டறிவை அறிந்து கொள்ள இயலும்..

இது கவிஞர் கந்தர்வன் உலவிய மண். புதுக்கோட்டை என்றாலே அவர் முகமே நினைவுக்கு வரும்.
” நாளும் கிழமையும்
நலிந்தோர்க்கு இல்லை,
ஞாயிற்றுக்கிழமையும்
பெண்களுக்கு இல்லை ”
என்று பெண்களுக்காக குரல் கொடுத்த மகத்தான கலைஞன் அவர்.

அவரைச்சுற்றி பக்க கன்றுகள் போல, கவிஞர்கள் முத்துநிலவன், தங்கம் மூர்த்தி, ஜனநேசன், ரமா ராமநாதன், மு.முருகேஷ், ஆர்.நீலா, கீதா ஆகியோர் இருந்தனர்.
இன்று இவர்கள் எல்லோரும் சேர்ந்து இந்த புத்தக திருவிழாவை சிறப்பாக நடத்துவது பெருமகிழ்ச்சியளிக்கிறது.
மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  இந்த புத்தகத்திருவிழா சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு தருவது மேலும் சிறப்பு.இங்கு வருகை தரும் அனைவரும் அவசியம் புத்தகங்கள் வாங்கி செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top