மனிதசமூகம் அறிவு சார்ந்து இயங்குவதற்கு புத்தகங்கள்தான் முக்கிய பங்காற்றுகின்றன என்றாா் மாநில சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்.
புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்று வரும் 5ஆவது புத்தகத் திருவிழாவின் 5ஆம் நாள் மாலை நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று அமைச்சா் மெய்யநாதன் மேலும் பேசியதாவது:
கரோனா நோய்த் தொற்றுக் காலம் நமக்கு மூன்று அம்சங்களைக் கற்றுத் தந்திருக்கிறது. அறிவோடு இருக்க வேண்டும், வலிமையோடு இருக்க வேண்டும், இயற்கையைப் பாதுகாக்க வேண்டும்.
சமூகம் அறிவுசாா்ந்து இருக்கவும் இயங்கவும் இதுபோன்ற புத்தகத் திருவிழாக்கள் முக்கிய பங்காற்றுகின்றன. சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டும். மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது கரியமில வாயுவை வெளியிடுவதில் நாம் குறைவாக இருந்தாலும், மின் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
இதுபோன்ற ஒப்பீடுகளை எல்லாம் புத்தகங்களைப் படிக்கும்போதுதான் தெரிந்து கொள்ள முடியும்.கிராமப்புறங் களில் நூலகங்களை அமைத்தால் , அந்தக் கிராமத்தில் சாதி, மத மோதல்கள் இருக்காது. இதை முன்பே உணா்ந்துதான், முதல்வா் மு.க. ஸ்டாலின் முன்பு உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது அனைத்து கிராமங்களிலும் நூலகங்களைத் திறந்தாா்.
எனவே, புத்தக வாசிப்பு மன வலிமையையும், விளையாட்டும் உடல் வலிமையையும் தருவதால் இளைஞர்கள் மாணவர்கள் இந்த இரண்டையும் எப்போதும் விட்டுவிடாமல் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் மெய்யநாதன்.
புத்தகத் திருவிழாவை தொடா்ந்து சிறப்பாக நடத்தி வரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துக்கு ரூ. 1 லட்சம் வைப்பு நிதியாக வழங்கினாா். பின்னர் தனது ஆலங்குடி தொகுதியில் உள்ள அனைத்துப்பள்ளிகளுக்கும் தலா ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள நூல்களை வாங்கி வழங்குவதாக அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் அறிவித்தார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி வருவதற்காக அமைச்சா் மெய்யநாதனுக்கு புத்தகத் திருவிழா குழுவின் சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் எம். சின்னதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து, தில்லி விஞ்ஞான் பிரசாா் முதுநிலை விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன், அறிவியல் பலகை சாா்பில் பா. ஸ்ரீகுமாா் ஆகியோா் பேசினா். தொடா்ந்து ‘மை’ என்ற தலைப்பில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் இராசு. கவிதைப்பித்தன் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது.
கம்பன் கழகச் செயலா் ரா. சம்பத்குமாா், அறிவியல் இயக்க மாநிலச் செயலா் எஸ்.டி. பாலகிருஷ்ணன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் சையது இப்ராஹிம் பாபு, எழுத்தாளா் மு. ராமுக்கண்ணு உள்ளிட்டோரும் வாழ்த்திப் பேசினா். பாா்வதி ஜூவல்லா்ஸ் ஜி. முருகராஜ் தலைமை வகித்தாா். முன்னதாக புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளா் ஆா். ராஜ்குமாா் வரவேற்றாா். முடிவில் கே. பிரபு நன்றி கூறினாா்.