சென்னை திருவெற்றியூரில் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற செந்தில்குமார் (45) என்பவரை போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் வியாழக்கிழமை பத்திரமாக மீட்டனர்.
திருவொற்றியூர் பேருந்து நிலையம் அருகே பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் கோபுரம் உள்ளது. வியாழக்கிழமை அதிகாலை இந்த செல்போன் கோபுரத்தில் மர்ம நபர் ஒருவர் ஏறி உச்சிக்குச் சென்று அங்கிருந்து காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு அந்த மர்மநபரே போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார். அப்போது பிரிந்து சென்ற தனது மனைவியை உடனடியாக சேர்த்து வைக்க வேண்டும் . இல்லையெனில் செல்போன் கோபுரத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து திருவொற்றியூர் காவல் நிலைய ஆய்வாளர் காதர் மீரான், திருவொற்றியூர் தீயணைப்பு நிலைய அதிகாரி செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் அங்கு வந்து மர்ம நபரை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர் .
அப்போது அந்த நபரை தொடர்பு கொண்டு தகவல் விசாரித்த போது அவரது பெயர் செந்தில்குமார், கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பெயர் வடிவுக்கரசி. திருவொற்றியூர் மேற்கு பகுதி சிவசக்தி நகரை சேர்ந்தவர். இவர்களுக்கு இரண்டு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.
மன உளைச்சல் காரணமாக மனைவி ஒரு மாதத்திற்கு முன்பே செந்தில்குமாரை பிரிந்து சென்று விட்டதாக தெரியவந்தது. இதனையடுத்து செந்தில்குமாரிடம் சாதுரியமாக பேசிய போலீசார் பின்னர் அவரது மனைவியின் இருப்பிடம் அறிந்து அவரையும் அழைத்து வந்தனர். செந்தில்குமாரின் மனைவி வடிவுக்கரசியை அவரது கணவருடன் பேசுவதற்கு ஏற்பாடு செய்தனர் .
அப்போது தான் திரும்பி வந்துவிட்டதாகவும் உடனடியாக கீழே இறங்கி வருமாறு அவரை மன்றாடி கேட்டுக்கொண்டார் வடிவுக்கரசி. இதில் மனமாற்றம் அடைந்த செந்தில்குமார் மெதுவாக செல்போன் கோபுரத்தின் உச்சியில் இருந்து கீழே இறங்கத் தொடங்கினார்.
இறங்கும்போது அவருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படாத வகையில் மீட்பு படையினர் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். இருப்பினும் செந்தில்குமார் எவ்வித சிரமமும் இன்றி கீழே இறங்கினார். உடனடியாக அவரை மீட்ட போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற நபரை சாதுரியமாக பேசி எவ்வித சிரமமும் இன்றி மீட்ட போலீஸார் மற்றும் தீயணைப்பு படையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். இச்சம்பவத்தால் பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பான சூழல் நீடித்தது.ட்டது.