மொழியை நாகரிகத்தை அழிக்க நினைத்தால் நூலகத்தை அழித்தால் போதும் என்றார் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சந்துரு.
புதுக்கோட்டையில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புத்தகத் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அவர் அதில் மேலும் பேசியதாவது:
நூலகத்தை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். பல்லாயிரக்கணக்கான அரிய நூல்களை கொண்ட யாழ்ப்பாணம் நூலகத்தை சிங்கள காடையர்கள் எரித்தார்கள். ஒரு மொழியைஅழிக்க நினைத்தால் நூலகத்தை அழித்தால் போதும் என்ற கொடூரத்தின் உச்சம் என உலகமே அதிர்ந்த நிகழ்வு அது.
திரைப்படம் மிகப்பெரிய கருத்து சாதனம். ஜெய் பீம் திரைப்படம் மக்களை தொடர்ந்து பேச வைத்திருக்கிறது. கன்னியாகுமரி இருந்து காஷ்மீர் வரை 62 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து 155 நகரங்களில் பேசி இருக்கிறேன். அந்தப் படத்தை பற்றி அல்ல அதில் சம்பந்தப்பட்ட மக்களைப் பற்றி பேசுகிறேன்.
அரசியல் பேசவில்லை, ஆனால் புத்தகத்தை பேசும்போது அரசியல் உட்கதையாக வந்துவிடும். இத்தாலியைச் சேர்ந்த மார்க்கோபோலோ என்பவர் இந்தியாவை சுற்றி பார்த்து அதை நூலாக பதிவு செய்துள்ளார். அது இன்றைக்கும் மிகப்பெரிய ஆவணமாக திகழ்கிறது . நம்மிடம் உள்ள பலவீனம் நாம் பார்ப்பதை பதிவு செய்வதில்லை.
ஒரு புத்தகம் படித்தால் நம் முன்னேற்றத்துக்கும் அறிவு விசாலப்படுத்திக் கொள்ள உதவும். எந்தப்புத்தகத்தை படித்தாலும் அதில் நல்லவற்றை எடுத்துக்கொண்டு தீயவற்றை விட்டு விடலாம்.
தன்னை சந்திக்க வருவோரிடம் பூச்செண்டு வேண்டாம் சால்வை வேண்டாம் புத்தகம் போதும் என்று முதல்வர் அறிவித்து புதிய நாகரிகத்தைஉருவாக்கி உள்ளார்.
அவர் புதுக்கோட்டைக்கு வந்த போது அவரிடம் மாவட்ட ஆட்சியர் அளித்தார் ஒரு புத்தகம்( அறியப்படாத கிறிஸ்தவம் ) வலை தளங்களில் விமர்சனத்திற்கு உள்ளானது.
புத்தகத்தை பார்த்து எரிச்சல் படுபவர்கள் , கருத்தை பார்த்து ஓடி ஒளிபவர்கள், எதைப் படிக்க வேண்டும் எதை உண்ண வேண்டும், எதை உடுத்த வேண்டும் என்று கூறுவது அரசியல் பாசிச தன்மை. செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வேறுபாடு தெரியாதவர்கள்.
மக்கள் நூல்களை தேடி நூலகத்துக்குச் செல்லவேண்டும். நூல்கள் மக்களின் நண்பன்.ஒரு காலத்தில் சிறைச்சாலையில் எதையும் படிப்பதற்கான அனுமதி கிடையாது.முதலில் நாளிதழ்களை கொடுத்தார்கள்.பிறகு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, ஒரு மனிதன் உள்ளே இருந்தாலும் வெளியே இருந்தாலும் படிக்கும் உரிமை வேண்டும் என்று கூறியவுடன் சிறைச்சாலை விதிகளை மாற்றினார்கள். அதன் பிறகு சிறைசாலையில் நூலகம் ஏற்படுத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் விரும்பத்தகாத சில சம்பவங்களை பார்க்க முடிந்தது. அதில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை ஆசியாவின் மிகப்பெரிய நூலகத்தை அழிக்க பார்த்தார்கள். ஆனால் இதற்காக ஒரே ஒருவர் மட்டும் வழக்கு தொடுத்தார். அதன் மூலம்தான் அந்த நூலகம் காப்பாற்றப்பட்டது. கருத்து பெட்டகத்தை அழிக்க நினைப்பதும் பாசிசம் தான்
நூலகம் தகவல் புரட்சி தொழில் புரட்சி ஆகியவற்றை அறிந்து கொள்ளும் சரியான தளம். தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த நூலக இயக்கத்தை கையில் எடுத்திருப்பது பாராட்டக் கூடியது. சென்னை போல மதுரையிலும் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்படுகிறது. அந்த நூலகம் திறந்தவுடன் நான் 40 வருடமாக சேமித்து வைத்திருந்த புத்தகங்களை கொடுக்க வுள்ளேன்.
நாட்டின் அவசரநிலை காலத்தில் கொடுமையான பத்திரிக்கை தணிக்கை சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது பத்திரிக்கைகள் கடுமையான சவாலை சந்தித்தன. பல கட்டுப்படுகள் விதிக்கப்பட்டன. உண்மை தகவலை மறைக்க முடியாது, மறைக்க முற்பட்டால் வதந்திகளே செய்திகளாக மாறும் என உணர்த்தப்பட்டது.
சமூக வலைதளங்கள் நடத்தி வரும் பன்னாட்டு நிறுவனங் களை தகவல் தொழில்நுட்பச் சட்டம் 64 –ஏ பிரிவு கொண்டு வந்து முடக்க நினைத்தார்கள். நீதிமன்றம் அதை ரத்து செய்தது. தகவல்களை புரிந்து கொள்ள தொடங்கினால் தங்கள் ஆட்சி செய்ய முடியாது என்ற அச்சம் தான் காரணம். பாட நூல்களுக்கு அப்பாற்பட்டு பல்வேறு நூல்களை படித்தால் தான் அறிவை வளர்த்துக் கொள்ள முடியும்.
கட்டாய கல்வி சட்டம் வந்த பிறகுதான் 6 முதல் 16 வயது வரை பள்ளிக்கு வரும் நிலை ஏற்பட்டது. பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இப்படிப்பட்ட சட்டம் இருக்கும் போது கர்நாடகா மாநிலத்தில் 20 ஆயிரம் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. அதற்கு காரணம் அவர்கள் அணிந்த ஆடை தான். இது போன்ற அநியாயங்களை தடுப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் பாராட்டுக்குரிய பாதுகாவலராக திகழ்கிறார். கருத்துரிமை யைஎந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுத்து விடக்கூடாது. புத்தகத் திருவிழாக்களுக்கு நிறைவு என்ற ஒன்று கிடையாது. தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன பதிப்பாளர்கள் வேண்டுகோளை ஏற்று நிரந்தர புத்தக கண்காட்சி அமைக்க இடம் தருகிறேன் என்று அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி என்றார் நீதிபதி சந்துரு.
புத்தகத்திருவிழா -ஒரு பார்வை என்ற தலைப்பில் கவிஞர் நா. முத்துநிலவன் பேசினார். சிறப்பு விருந்தினர்களாக எஸ். முத்துராமன், ஆ. சுரேஷ், டாக்டர்கள் வீ.சி. சுபாஷ்காந்தி, கார்த்திக்தெய்வநாயகம், சிவ. இளங்கோ, முகமதுபாதுஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கலை இலக்கிய விருதாளர்கள் பட்டியலை விருதுகள் குழுத்தலைவர் ராசி. பன்னீர்செல்வம் வாசித்தார். நகர்மன்றதுணைத்தலைவர் லியாகத்அலி, கவிஞர் தங்கம்மூர்த்தி, ஜி.எஸ். தனபதி, ச.வே. காமராசு, புதுகை பூவண்ணன், பீர்முகமது, காசாவயல் கண்ணன், சேதுராமன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
முன்னதாக புத்தக திருவிழாக்குழு கிருஷ்ணவரதராஜன் வரவேற்றார். நிறைவாக புத்தகத்திருவிழாக்குழு டி. விமலா நன்றி கூறினார்.