Close
நவம்பர் 22, 2024 1:59 காலை

புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவின் வெற்றியை பாராட்டிய ஆர்வலர்கள்..

புதுக்கோட்டை

புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவைப் பாராட்டிய ஆர்வலர்கள்

கைபேசியின் கூகுளில் அனைத்துச் செய்திகளையும் அறிந்து கொள்ளும் வசதியுள்ள காலக் கட்டத்தில் எந்தெந்தக் கோணத்தில் வழிப்புணர்வை ஏற்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு வாசிப்பாளர்களிடமும் மாணவர்களிடமும் விழிப்புணர்வை கடந்த இரண்டு மாதங்களாகச் செய்து பத்து நாட்கள் நாட்டின் அனைத்து அறிஞர் பெருமக்களையும் அமைச்சர் பெருந்தகைகளையும் பங்கு பெறச் செய்து

பத்து நாட்களடங்கிய புத்தகத்திருவிழாவை மிகச்சிறப்பாக நடத்தி இரண்டு கோடி புத்தக விற்பனை அளவை எட்ட வைத்த அறிவியல் இயக்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட தலைமைஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் இத்திருவிழாவில் தாங்களாகவே பங்கெடுத்துக்கொண்ட தன்னார்வலர்கள் அனைவருக்கும் உலகத்திருக்குறள் பேரவை, இளங்கோவடிகள் இலக்கிய மன்றம் மற்றும் ஞானாலயா நூலக வளர்ச்சிக்குழு சார்பாக தனது பணிந்த பாராட்டுதல்களைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கின்றது.
சத்தியராம் இராமுக் கண்ணு, புதுக்கோட்டை.

————————————————————————————————-

மக்கள் கொண்டாடிய புத்தகத்திருவிழா

புதுக்கோட்டை 5ம் புத்தகத்திருவிழா ஜூலை 29 தொடங்கி ஆகஸ்ட் 7 நேற்று முடிவடைந்தது. நீதிபதி சந்துரு, நெறியாளர் கோபிநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்ட கடைசி நிகழ்வு புத்தகத் திருவிழாவின் முத்தாய்ப்பாய் இருந்தது.

மாவட்ட நிருவாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கூட்டுமுயற்சி மற்றும் மாவட்ட மக்களின் பேராதரவு என மிகப்பெரிய திட்டமிடலோடும் பெரும் உழைப்போடும் ஊர்கூடித் தேர் இழுத்ததால் பெரும் வெற்றி பெற்றது 5ம் புத்தகத் திருவிழா. மாவட்ட ஆட்சியரின் கணக்குப்படி ஆகஸ்ட் 6 வரை மட்டும் 2 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்றுத் தீர்ந்திருக்கின்றன. பள்ளி கல்லூரி மாணவர்கள் மட்டும் 1 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டிருக்கின்றனர்.

மாவட்ட நிருவாகத்தில் ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்டோர் பம்பரமாய்ச் சுழன்ற வேளையில், புத்தக திருவிழா ஒருங்கிணைப்பாளர்களாக தேனீயாய் உழைத்த கவிஞர்கள் தங்கம்மூர்த்தி, முத்துநிலவன், மணவாளன், வீரமுத்து, முனைவர் ராஜ்குமார், கிருஷ்ண வரதராஜன், எஸ்.டி.பாலகிருஷ்ணன், விமலா, மு.கீதா மற்றும் பல தன்னார்வலர்களின் பெரும் பங்கு மாவட்ட மக்களால் என்றென்றும் நினைவுகூரத்தக்கது. பதிப்பாளர்களும், பத்திரிக்கையாளர்களும் பெரும் பாராட்டுக்குரியவர்கள்.

ஷீலாராணி சுங்கத் தலைமையில் ஓர் அறிவொளி 30 ஆண்டுகளுக்கு முன்னர் புதுக்கோட்டை மாவட்ட மண்ணில் ஏற்றப்பட்டு அணையா தீபமாய் அறிவு தீபமாய் இன்னும் எரிந்துகொண்டிருக்கிறது. புதுக்கோட்டை புத்தகத் திருவிழா என்னும் பெயரிலே ஆட்சியர் கவிதா ராமு முன்னெடுப்பிலே இதோ இன்னொரு அறிவொளி நம் புதுக்கோட்டை மண்ணில் மறுபடியும் ஏற்றப்பட்டுள்ளது.இந்த அறிவொளியும் நூறாண்டுகள் கடந்தும் அறிவுதீபமாய் பேரொளியாய் ஒளிரும்.மாவட்டம் பெருவளர்ச்சி பெறும்.

மருத்துவர்.ச.தெட்சிணாமூர்த்தி, தலைவர்,திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு,அறந்தாங்கி, புதுக்கோட்டை மாவட்டம்


ஒரு புத்தகம் என்ன செய்யும்? ஒரு தனிமனிதனை மாற்றும்… ஒரு புத்தகத் திருவிழா என்ன செய்யும்,? ஒரு சமூகத்தை மாற்றும் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா என்ன செய்தது? புதுக்கோட்டை மாவட்டத்தை புத்தகக் கோட்டையாக மாற்றி வாசிப்பு தென்றலை பட்டி தொட்டி எங்கும் பரவ செய்துள்ளது…! சாதி ,மதம், இனம், மொழி என்ற வேறுபாடுகளை வேர் அறுத்து… ஒற்றுமையை விதைத்துள்ளது… விருட்சம் மிக அருகில்.

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை தமிழகமே திரும்பிப் பார்க்கும் வகையில் செய்திருக்கும் சாதனை கலெக்டர். திருமிகு. கவிதா ராமு அவர்களின் முன்னெடுப்புகளை பிறந்த குழந்தையும் சொல்லும்… கலை தேவதை கையில் ஏந்தி இருக்கும் அழகு தீபமாய் மாவட்ட ஆட்சித் தலைவர் ஒளிர… சூரியனாய் காட்சி தருகிறது புதுக்கோட்டை-இன்று வெற்றிக்கோட்டையாக…!

ஒரு புத்தகத் திருவிழாவின் வெற்றி புத்தகங்களின் எண்ணிக்கையில் இல்லை..!வட்டமிட்டு வட்டமிட்டு வரிசையில் நின்று பார்த்து சென்ற வாசிப்பு பட்டாம்பூச்சி மனங்களில் இருக்கிறது…!
லட்சங்களை தாண்டுகிறது மனங்கள்… புத்தகம் விற்ற பணமோ பல கோடிகளை தொடுகிறது… தங்கப் பதக்கம் பெற்ற உற்சாகத்தில் ஊஞ்சலாடுகிறது தமிழ்நாடு அறிவியல் இயக்கம்…!

தங்கம், மூர்த்தி,முத்து, நிலவு, மணம், வீரம், துளிர்,வரம், கீதம், ராஜ் என புதுக்கோட்டை புத்தகத் திருவிழா என்னும் புத்தகத்தில் பக்கங்கள் காட்சி தருகின்றன… பக்கங்களும் நீள்கின்றன… ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ஒவ்வொரு விதமாய்… ஐந்தாவது முறை படிக்கிறேன்… வாகையாய் வாசம் வீசுகிறது…!

புத்தக திருவிழா குழுவினரின் சிந்திய வியர்வைகளை சேகரித்து வைத்திருந்தால் தற்போது அதை வைத்து வெற்றி கோட்டையை எழுப்பி இருக்கலாம்…! என் அருகில் இருந்த பரிசு பெற வந்த எழுத்தாளர் ஒருவர் சொன்னார் “இந்த புதுக்கோட்டையில் மட்டும் தான் உழைத்தவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்திருக்கிறார்கள்” என்று…! ஒரு பானை சோற்றுக்கு இது மட்டுமே ஒரு சோறாய்!

நான் மேடையில் குறிப்பிட்டது போல புத்தகத் திருவிழாக்களை நடத்தும் மாவட்டங்களுக்கு மத்தியில் புத்தகத் திருவிழாவை ஊர் திருவிழாவாக கொண்டாடி கொண்டாடி கலைத்திருக்கிறது இன்று புதுக்கோட்டை…! ஊர் கூடி தேர் இழுப்போம்…

இன்று புதுக்கோட்டையே கூடி புத்தகத் திருவிழாவை வெற்றிப்பாதையில் செல்ல வைத்திருக்கிறது…! என்னுடன் பணியாற்றும் மருத்துவர்கள் சொல்கிறார்கள் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா “வேற லெவல் போல”என்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட செய்திகளை பார்த்து சொல்கிறார்கள்… எத்தனை ஆளுமைகள்… எத்தனை பங்கேற்பாளர்கள்…

பத்து நாட்கள் பறந்து சென்றாலும் இன்றும் நம் மனங்கள் 100 ஸ்டால்களையும் சுற்றி சுற்றி ஏறி இறங்கி வருகிறது… நாம் மறக்க நினைத்தாலும் மறக்க முடியாத மறைக்க முடியாத ஆனந்த சுவடுகளாய் தடம் பதித்து விடுகிறது 5 வது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா…!

தீபாவளி முடிந்தவுடன் சிறார்கள் பேசிக் கொள்வார்கள் அடுத்த தீபாவளிக்கு இதெல்லாம் செய்யலாம் என்று… அதுபோல பேசி… பேசி… தீர்த்துக் கொள்வோம் நமது மகிழ்ச்சியை..ஆறாவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை நோக்கி…

டாக்டர் வீ. சி.சுபாஷ் காந்தி, திருச்சி


எழுதியவனே சமுதாயத்தினுள்
எந்நிலையிலும் இறங்க வேண்டியதில்லை.
எழுச்சியுடன் சொன்னவன் மாஜினி
ஆனால் இங்கே எழுதியவனே.சமுதாயத்தை சந்திக்கின்றான்
சந்தோஷமாக உறவாடுகின்றான்
புத்தக.விற்பனை இரண்டரைக் கோடி.
என்பதல்ல முக்கியம்.
ஆனால் வாசிக்கும் பழக்கம்
சென்றடைந்திருக்கிற
இடம் தெருக் கோடி.
புத்தக வாசனை முதலில்
மூக்கைத் தொட்டது.பின்
முக்குக்கள்ளே முகாமிட்டு விட்டது.
பாராட்டுகள். வாழ்த்துகள்.

. கவிஞர் ஆர்எம்வீ. கதிரேசன், புதுக்கோட்டை

————————————————————————————————-

புது ஒளி வெள்ளம் பாய்ச்சிய
புதுக்கோட்டை புத்தகத் திருவிழா!

புதுக்கோட்டையின் ஐந்தாவது புத்தகத் திருவிழா..! ஜூலை -29 இல் தொடங்கி ஆகஸ்ட்-7 வரை பத்து நாள்கள். புதுகை மானிட குலத்தின் சத்தான தினங்கள்..! நேற்றுடன் (ஆகஸ்ட்-7) நெகிழ்வாய் நிறைவடைந்தது.

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்திய அறிவுத் திருவிழா..! மிகப்பெரிய திட்டமிடலும்,சரியான வடிவமைப்பும் செய்யப்பட்ட அறிவுசார் திருவிழா. ஒரு பெருவிழாவை திருவிழாபோல் எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு விழா..! புதுக்கோட்டை நகர் மன்றத்தின் புத்தகத் திருவிழாவின் நுழைவாயிலை ஒரு கோட்டை வடிவத்தில் அமைத்து அறிவுக்கோட்டைக்கு அழைப்பு விடுத்திருந்தனர். புத்தகத் திருவிழா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு பேரணிகளும், பள்ளிகளில் விளக்கக் கூட்டங்களும் நடைபெற்றன.

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்தார். தொடக்க நாள் முதல் நிறைவு நாள் மாவட்டத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மக்கள் குவியத் தொடங்கினர்.

10 நாள்களும் ஒவ்வொரு நாளும் புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைக்கோடிவரை உள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் திறமைகளை, கலைகளை,படைப்புகளை விழா மேடையில் அரங்கேற்றம் செய்து அவர்களாலும் முடியும் என்று நிரூபிக்க வைத்து அவர்களை உற்சாகப்படுத்தியது அருமை. அந்த மாணவச் செல்வங்களின் திறமைகளை எல்லாம் மெருகேற்றி அவர்களுக்கு தக்க பயிற்சியளித்து, அவர்களை கட்டுக்கோப்புடன் அழைத்து வந்து கூட்டிச் சென்ற அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களும் போற்றுதலுக்குரியவர்கள்.

அதேபோல் பல்வேறு துறைகளின் முன்னணி ஆளுமைகளான ஒடிசா மாநில முதல்வரின் சிறப்பு ஆலோசகர் ஆர்.பாலகிருஷ்ணன், எழுத்தாளர் நாறும்பூநாதன், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பன்மொழி திரைக் கலைஞர் ரோகிணி, தனியார் தொலைக்காட்சியின் நெறியாளர் கார்த்திகேயன் தலைமையிலான விவாத அரங்கம், சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்,

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராசு.கவிதைப்பித்தன் தலைமையிலான கவியரங்கம்,கவிஞர் தங்கம் மூர்த்தில் தலைமையில் சுழலும் கவியரங்கம், வாணியம்பாடி பேராசிரியர் மு.பதுல்காதர், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக மெய்யியல் துறைத்தலைவர் நல்லசிவம், கவிஞர் ஆதவன் தீட்சண்யா, அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா,

சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருது பெற்ற கவிஞர் மு.முருகேஷூக்கு பாராட்டு விழா, நர்த்தகி நட்ராஜ் வழங்கிய நாட்டியம், மாநில திட்டக்குழுத் தலைவர் ஜெயரஞ்சன், முன்னாள் நீதியரசர் சந்துரு,தனியார் தொலைக்காட்சி நெறியாளர் கோபிநாத் ஆகியோரின் அறிவார்ந்த உரைகள் என இப்படி ஒவ்வொரு நாளும் நாளும் சிறப்புச் சொற்பொழிவுக்கும் பஞ்சமில்லை.

அதேபோல் புதுக்கோட்டையின் சமூக அக்கறை உள்ளவர்களை, கல்வியாளர்களை, மருத்துவர்களை, தொழிலதிபர்களை இப்படி பன்மைத் தன்மை கொண்டவர்களை அழைத்து அவர்களை கவுரவப்படுத்தி, அவர்களை வாழ்த்துரை வழங்க வைத்து சிறப்புச் செய்தும் குறிப்பிடத்தக்கது.

இதில் தமிழகத்தின் நூற்றுக்கும் அதிகமான முன்னணி பதிப்பகங்கள் பலவும் உற்சாகத்துடன் கலந்து கொண்டன. தேடி வந்த புத்தக விரும்பிகளை பதிப்பாளர்கள் பக்குவமாய் விவரங்கள் கூறி விற்பனை செய்தமை பாராட்டுக்குரியது.

புதுக்கோட்டை மாவட்ட அரசு நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், மக்கள் தொடர்பு அலுவலர், திட்ட இயக்குநர் இப்படி ஒரு பெரும்படையே இந்தப் புத்தகத் திருவிழாவின் வெற்றிக்கு சுழன்று சுழன்று வேலை செய்தனர்.

 கலைகளின் ஆர்வலரான புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்  கவிதா ராமு அவர்களின் தனிப்பட்ட அக்கறையும், புத்தகங்கள்மீது அவர் வைத்திருக்கும் பிரியமும், நாட்டியத்தின்மீது அவர் வைத்திருக்கும் நாட்டமும், எளிய மனிதர்களுடன் உறவாடும் அவரின் தோழமையும், எத்தனை பேர் வந்து கேட்டாலும் சளைக்காமல் செல்பி எடுக்க அனுமதி கொடுக்கும் அவரின் கனிவும்.

பெரும்பாலும் நேரடியாகவே வருகை புரிந்து குழுவினருக்கு உற்சாகமளித்தும் இப்படி அரசின் பிரதிநிதியாய் மட்டுமில்லாமல் புத்தகத் திருவிழாவின்மீது கொண்ட முழு மனப்பூர்வ ஈடுபாட்டுடன் அசத்தலான பணியைச் செய்தனர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரும் அவர் தலைமையிலான அரசு அதிகாரிகளும்.

அடுத்து இந்தப் புத்தகத் திருவிழாவை சிறக்க வைத்த ஓய்வில்லா உழைப்பைத் தந்த வெற்றிக் குழுவினர் புதுக்கோட்டை மாவட்டத்தின் தமிழ்நாடு அறிவியல் இயக்க உறுப்பினர்கள்தான். அந்த இயக்கத்தின் மாவட்டத் தலைவர் முதல் தன்னார்வலர்கள் வரை அவர்கள் உட்காரமால் கடந்த மூன்று மாதங்களாக ஓடியாடி செய்த பணி எதனுடனும் ஒப்பீடு செய்ய முடியாதது.

நம்முடைய சொந்த இல்ல விழாக்களை ஒரு நாள் நடத்துவதற்கே நாம் சலித்துப்போகிறோம். ஆனால் பத்து நாள் திருவிழா. அதுவும் பல லட்சக் கணக்கிலான கூட்டம். அதற்கு பல மாத உழைப்பு. இதை எல்லாம் எவ்வித சுய ஆதாயமும் இல்லாமல் வியர்வை சிந்தச் சிந்த உழைத்த தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் வணக்கத்திற்குரியவர்கள்.

ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு அணி. சரியான திட்டமிடல் வெற்றியைத் தரும் என்பதற்கு சாட்சியாய் இருப்பவர்கள் நம் புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர்.

புத்தகத்திருவிழாவுக்குள் உள்ளே வருபவர்களை வரவேற்க, வாகனங்களை வரிசைப்படுத்த, அரங்குகளுக்கு செல்பவர்களை ஒழுங்குபடுத்த, கலை ஆர்வமுடன் மேடையேற வந்த மாணவச் செல்வங்களை மகிழ்ச்சியுடன் அழைத்து அவர்களை பாராட்டிப் பரிசளிக்க,

நிகழ்வின் பார்வையாளர்கள் அமர்வதற்கு இருக்கை ஏற்பாடு செய்ய, விருந்தினர்களை கவுரவித்து, பரிசளிக்க அவர்கள் செய்திருந்த ஏற்பாடுகள் அபாரம். சொல்லப்போனால் இந்தப் புத்தகத் திருவிழாவின் வெற்றிக்கு காரணமானவர்கள் – உழைப்பை சிறிதும் சலிப்பில்லாமல் செய்த நம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர்.

இதற்காக உழைத்த அவர்கள் ஒவ்வொருவரின் பெயரும் காலக்கல்வெட்டில் என்றென்றும் நிலைத்து நிற்கும். சிலரின் பெயர்கள் விட்டுப்போகலாம் என்பதால்தான் நான் எவரின் பெயரையும் குறிப்பிடவில்லை. இங்கு வாங்கிய புத்தகம் ஒவ்வொன்றையும் புரட்டும்போதும் தமிழக அறிவியல் இயக்கத்தினரின் முகங்கள் நிச்சயம் நிழலாடும்.

நல்ல அணியை கட்டமைத்து தனது சொந்த வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, உடல் நலம்கூட பேணாமல், ஊர் ஊராக இந்தப் புத்தகத் திருவிழா போஸ்டர்களை அள்ளிக்கொண்டுபோய் மக்களிடம் சேர்த்து ஓரு பெரும் மக்கள் திரளை கொண்டுவரக் காரணமான களப்பணி ஆற்றி- புத்தகத் திருவிழா வெற்றிக்கு வித்திட்ட தமிழ்நாடு இயக்கத்தினரை புதுகை மக்களில் ஒருவனாய்-புத்தகங்களின் காதலனாய் எப்போதும் பாராட்டுவோம்.

அதேபோல் ஒவ்வொரு நாள் நிகழ்வுகளையும் சமூகத்தின் பார்வைக்கு கொண்டு சென்ற ஊடகங்களின் பங்களிப்பு மகத்தானது. தினசரி நாளிதழ்களின் வழக்கமான ‘டெட் லைன்’ நேரம் முடிந்துபோனாலும்கூட நம் புத்தகத் திருவிழாவின் முக்கியப் பேச்சாளர்களின் உரையை அன்றே செய்தியாக்கி மறுநாள் காலையிலேயே மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று அதிதீவிர முனைப்புக்காட்டிய நம் புதுக்கோட்டை நாளிதழ் செய்தியாளர்கள், தொலைக்காட்சி நிருபர்கள், இதற்கு ஒத்துழைப்பு நல்கிய ஆசிரியர் குழுவினர் அனைவரும் நன்றிக்குரியவர்கள்.

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா என்ற பெயரில் முகநூல் பக்கம் உருவாக்கி ஒவ்வொரு நிகழ்வுகளையும் உடனே வீடியோ பதிவேற்றம் செய்தமையும், ஒவ்வொரு நாள் நிகழ்வின் போஸ்டரையும் வாட்ஸப்பில் நிலைத் தகவலாய் வைத்து அதிக எண்ணிக்கை கொண்ட பார்வையாளர்களைப் பெற்றவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசளித்தும்,

சில முகநூல் பதிவர்கள் நேரலையில் ஒளிபரப்பு செய்தும், அந்தந்த நாள் நிகழ்வுகளைப் பற்றிய விமர்சனங்களை நள்ளிரவு கடந்தும் சில புத்தக ஆர்வலர்கள் மறக்காமல் பதிவேற்றம் செய்தும்..இப்படி எல்லாத் திசைகளிலிருந்தும் கிடைத்த இனிய ஒத்துழைப்பால் புத்தகத்திருவிழா கடந்த 10 நாள்களில் 3 லட்சம் பார்வையாளர்களையும் ரூ.இரண்டு கோடிக்கும் அதிகமான புத்தக விற்பனையையும் செய்து வெற்றியைத் தொட்டிருக்கிறது.

புத்தகங்களை வாங்குவதற்கு ஒவ்வொரு நாளும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதுவும் நிறைவு நாளில் கூட்த்தை கட்டுபடுத்த முடியாத அளவிற்கு மக்கள் குடும்பம் குடும்பமாய் வந்து புத்தகங்களை வாங்கிச் சென்றது நல்ல அறிவுசார் சமூகத்தின் வளர்ச்சிக்கான அடையாளமாக இருந்தது.

இனி அடுத்தாண்டின் புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவிற்கு காத்திருப்போம்..அதுவரை கவிஞர் ஆதவன் தீட்சண்யா குறிப்பிட்தைப்போல வாங்கிய புத்தகங்களை அனைவரையும் படிக்க வைக்கும் பெரும் பணியைச் செய்வோம்..!

வாசித்தால் மட்டுமே புத்தகங்கள் ஆயுதம்…! இல்லையேல் அவை வெறும் காகிதம்…!!

பழ.அசோக்குமார்,  புதுக்கோட்டை


உழைப்பு ஒருங்கிணைப்பு கிடைத்த பாராட்டுகள் 07.08.2022, புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் அறந்தாங்கி ஒன்றியம், ,”இல்லம் தேடி கல்வித் திட்ட” தன்னார்வலர்கள் ஒரு ஒரு வாரம் இரவு பகலாக உழைத்து, சிறப்பான கற்பித்தல் TLM, Chart தயாரிப்புகள் , 25க்கு மேற்பட்ட மருத்துவ குணம் மிக்க தாவரங்களின் அறிவியல் பெயர்கள், அவற்றின் பயன்பாடுகள், உயிரோட்டமான ஐந்து வகை நிலங்கள், விதைப்பந்துகள் மதிப்புக்குரிய மாவட்ட ஆட்சித் தலைவர், அவர்களின் மூலம் அனைவருக்கும் வழங்கியது,

அறிவுப்பூர்வ அறிவியல் மாதிரிகள், முளைகட்டிய நவதானியங்கள் நாட்டு சக்கரை கலந்து பார்வையாளர்களுக்கு, உயர் அதிகாரிகளுக்கு, ஏன் முன்னாள் நீதியரசர் மதிப்பிற்குரிய சந்துரு 6th அதிகாரிகளுக்கும் கொடுத்து அனைவரின் பாராட்டுக்களை பெற்றது., பெருமைக்குரிய ஒன்றாகும்.
இதற்கு பெரிதும் பாடுபட்ட தன்னார்வலர்கள் வைரிவயல் திருமதி அம்பிகா ,நாயக்கர் பட்டி , செல்வி , ஆவணத்தா கோட்டை( கிழக்கு) திவ்யா,  ஐஸ்வர்யா, அமரசிம்மேந்திரபுரம் செல்லம்மாள், ஆகியோருக்கு அனைவரின் சார்பாகவும் வாழ்த்துகளையும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இந்நிகழ்விற்கு உறுதுணையாக இருந்த BRC கண்காணிப்பாளர் (பொறுப்பு), பட்டதாரி ஆசிரியர் ,கார்த்திக், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ,மதிப்பிற்குரிய வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட திட்ட அலுவலர் ,உதவி திட்ட அலுவலர், குறிப்பாக 2 ஸ்டால்கள் பெற்றுத் தந்து அனைத்து உதவிகளையும் செய்த மதிப்பிற்குரிய முதன்மை கல்வி அலுவலர் ,அவர்கள் மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சித் தலைவர், உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள், தமிழ்நாடு அறிவியல் இயக்க பொறுப்பாளர்கள், அனைவருக்கும் நன்றி…நன்றி..நன்றி..ஆசிரியர்கணேசன்,அறந்தாங்கி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top