Close
நவம்பர் 22, 2024 1:51 காலை

கூகுள் நிறுவனம் மூலம் செய்தி, புகைப்படத்தின் ‘உண்மைத்தன்மை உறுதி செய்தல் பயிலரங்கு ‘ (FACT CHECKING WORK SHOP) பயிலரங்கு புதுக்கோட்டையில் நடைபெற்றது

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற பயிலரங்கில் பேசுகிறார் கூகுள் நிறுவன பயிற்சியாளர் லட்சுமிசுப்பிரமணியன்

கூகுள் நியூஸ் இனிஷியேட்டிவ் இந்தியா, டேட்டா லீட்ஸ் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் ஆகியவை சார்பில் புதுக்கோட்டையில் ‘உண்மைத்தன்மை உறுதி செய்தல் பயிலரங்கு ‘ (FACT CHECKING WORK SHOP) பயிலரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.

இப்பயிலரங்கில், மூத்த ஊடகவியலாளரும் ஜிஎன்ஐ பயிற்சியாளருமான லட்சுமி சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசியதாவது:

இன்றைய சூழலில் தகவல் விரைவாக கிடைக்கிறதோ அதே நேரத்தில் தவறான தகவல்களும், பொய்யான தகவல்களும் விரைவாகப் பரவுகின்றன. சிலவற்றை உள்நோக்கத்தோடு பரப்புகின்றனர். இவற்றால் சமூகப்போக்கு தவறாக வழி நடத்தப்படுகிறது.

குறிப்பாக சமூக வலைதளங்களின் மூலமாக கிடைக்கும் படங்கள், புள்ளிவிவரங்கள் மற்றும் தகவல்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய். பத்திரிகையாளர்கள் உண்மைத் தன்மையை உறுதி செய்து செய்திகளை வெளியிடுவது அவசியம். அவ்வாறு உண்மைத் தன்மையை எப்படி  அறிந்து கொள்வதுதான்  Google Tool – ல் உள்ள சூட்சமம் . இதற்காக  கூகுள் நிறுவனம் பல்வேறு வழிகளை- மென்பொருளாக ஏற்படுத்தியிருக்கிறது.

சிறப்புக் கட்டுரைகளைத் தயார் செய்யும் போது, அரசிடமி ருந்து உண்மையான தகவல்களைப் பெறுவதற்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தை பயன்படுத்துவது நல்லது. தவறான தகவல்களை வெளியிட்டால் ஒரு நிறுவனத்தின் நம்பகத்தன்மைப் பாதிக்கப்படும். எனவே செய்திகள், புகைப்படம் ஆகியவைகளின் உண்மைத் தன்மையை கண்டறியும் தொழில் நுட்பங்களை கற்றுக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றார் லட்சுமிசுப்பிரமணியன்.

இந்தப் பயிலரங்கில் அரசு மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம், எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சியாளர் ஆர். ராஜ்குமார், வாசகர் பேரவையின் செயலர் பேரா. சா. விஸ்வநாதன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலர் எஸ்டி. பாலகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் ம. வீரமுத்து, தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் ஆ. மணிகண்டன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

இப்பயிலரங்கில் பத்திரிகையாளர்கள், இதழியல் துறை பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கத் தலைவர் சு. மதியழகன் தலைமை வகித்தார். செயலர் சா. ஜெயப்பிரகாஷ் வரவேற்றார். பொருளாளர் கே. சுரேஷ் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top