மொபைல் போன்களிலிருந்து கதிர்வீச்சு வெளியேறுவதாலும், அவற்றை பெரும்பாலும் காதுகளின் அருகே வைத்திருப்பதாலும் அவை மூளைப் புற்றுநோயை ஏற்படுத்தும் என்று நீண்ட காலமாகவே அச்சம் தெரிவிக்கப்பட்டு வந்தது. பிற கம்பியில்லா (வயா்லைஸ்) சாதனங்கள் குறித்தும் இதே கருத்து நிலவி வருகிறது.
அதை உறுதிப்படுத்துவது போல், உலக சுகாதார அமைப்பின் ஓா் அங்கமான சா்வேச புற்றுநோய் ஆய்வு அமைப்பு (ஐஏஆா்சி) கடந்த 2011-ஆம் வெளியிட்ட ஆய்வறிக்கையில புற்றுநோயை ஏற்படுத்தும் பொருள்களில் மொபைல் கதிர் வீச்சும் ஒன்றாக இருப்பதற்கான வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது மொபைல் போன்கள் குறித்த பீதியை இன்னும் அதிகரிப்பதாக இருந்தது.
இந்தச் சூழலில், இது தொடா்பான 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆய்வு முடிவுகளை அலசி ஆராய்ந்து உலக சுகாதார அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள மிக விரிவான ஆய்வறிக்கையில், மொபைல் போன்களையோ, பிற வயா்லஸ் சாதனங்களையோ எவ்வளவு ஆண்டுகள் பயன்படுத்தியிருந்தாலும் அதனால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் இந்த ஆய்வு அறிக்கை உலக நாடுகள் மத்தியில் பெரும் நிம்மதியையும், நம்பிக்கையினையும் ஏற்படுத்தி உள்ளது.