Close
நவம்பர் 22, 2024 12:14 மணி

பணிச்சுமை இல்லாத சூழலை உருவாக்க பாடுபடுவேன் : EY நிறுவன தலைவர்..!

EY நிறுவன தலைவர் ராஜிவ் மேமணி

சர்வதேச அளவில் தணிக்கை நிறுவனங்களில் முன்னணியாகத் திகழும் நிறுவனங்களில் ஒன்றாக எர்னஸ்ட் அண்ட் யங் (Ernst & Young- EY) நிறுவனம் விளங்குகிறது.

இந்த நிறுவனத்தில் 26 வயதான அன்னா செபாஸ்டியன் பெராயில், தணிக்கையாளராக (ஆடிட்டர்) பணியாற்றி வந்தார். இந்த நிறுவனத்தில் கடந்த மார்ச் மாதம்தான் அன்னா செபாஸ்டியன்,பணியில் சேர்ந்தார். நான்கு மாதங்களே மட்டுமே ஆகி இருக்கும் நிலையில் ஜூலை 20-ம் தேதி அன்று மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார்.

பணிச்சுமை உண்டாக்கிய மன அழுத்தம் மற்றும் உடல் சோர்வு போன்ற பிரச்னைகளால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் உயிரிழந்த அன்னாவின் தாய், அனிதா அகஸ்டீன், தனது மகளின் மரணத்துக்கு நிறுவனத்தின் பணிச்சுமையால் ஏற்பட்ட மன அழுத்தமே ஒரே காரணம் என குற்றம்சாட்டி, எர்னஸ்ட் அண்ட் யங் நிறுவன தலைவர் ராஜீவ் மேமானிக்கு கடிதம் எழுதிருந்தார்.

தனது மகளின் இறுதிச்சடங்கில் கூட EY நிறுவனத்தில் இருந்து யாரும் பங்கேற்கவில்லை என்றும் அவர் மன வலியோடு குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் அதற்கு EY நிறுவனத் தலைவர் ராஜீவ் மேமானி விளக்கம் அளித்துள்ளார்.

அதில், ‘இது போன்ற துயரமான நேரத்தில் நாங்கள் செய்ய வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்துள்ளோம். ஒரு தந்தையாக, அனிதா அகஸ்டினின் துயரத்தை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. அவர்களின் வாழ்க்கையில் வெற்றிடத்தை நிரப்ப முடியாது என்றாலும், குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாமல் தவறிவிட்டதற்காக நான் உண்மையிலேயே வருந்துகிறேன்.

இது நமது கலாசாரத்துக்கு முற்றிலும் புறம்பானது. இதற்கு முன் இவ்வாறு நடந்ததில்லை; இவ்வாறு இனி ஒருபோதும் நடக்காது. EY நிறுவனத்தில் ஆரோக்கியமான பணிச்சூழலை ஏற்படுத்தும் வரை நான் ஓயமாட்டேன்.’ என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

அன்னா செபாஸ்டியனின் மரணத்தில் அவரது தாயார் தெரிவித்துள்ள புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று மத்திய தொழிலாளர் துறை இணையமைச்சர் ஷோபா கரந்தாலஜே உறுதி அளித்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top