Close
நவம்பர் 21, 2024 9:10 காலை

சோழர்கள் பாணி கட்டிடக்கலையை உலகுக்கு பறைசாற்றும் கங்கைகொண்ட சோழபுரம்

அயலகத்தமிழர்கள்

கங்கைகொண்ட,சோழபுரம்

கதிரவன் தன் உக்கிரத்தை கொப்பளிப்பதற்கு முன், ரம்மியமான கால நிலையில் சிதம்பரத்தை நோக்கி பயணித்தோம். அரியலூரை நெருங்கும் போது கம்பீரமாய்
கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் காட்சியளித்தது. வாகனத்தை நிறுத்தி விட்டு, தமிழர்களின் கோவில் கட்டிட கலையை உலகுக்கு பறைசாற்றும் விதமாக விளங்குகிற இந்த கோவிலை பார்வையிட்டோம்.

தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழனுக்கும், திரிபுவன தேவிக்கும், மார்கழி திருவையாறு அன்று பிறந்தவர் ராஜேந்திர சோழன். இவரின் இயற்பெயர் மதுராந்தகன்.

ராஜ ராஜ சோழனின் புதல்வன் கங்கை கொண்டான் என்று பட்டம் பெற்ற ராஜேந்திர சோழன் தன் தந்தை இறந்த பிறகு தஞ்சையை விட்டு கங்கை கொண்ட சோழபுரத்தை உருவாக்கினார்.

தஞ்சாவூரில் தந்தை கட்டிய கோயில் ஆண்மையின் கம்பீரம் என்றால், கங்கை கொண்ட சோழபுரத்தில் மகன் கட்டியதோ பெண்மையின் பேரழகு. தஞ்சாவூர் கோயிலை போல அரியலூரில் இந்த கோயிலை கட்டினார். இந்த கோயிலின்
கும்பாபிஷேகத்திற்கு, இவருடன் தோற்ற மன்னர்களை கங்கையிலிருந்து நீரை தலையில் சுமந்து வர செய்து அபிஷேகம் செய்ததாக வரலாறு கூறுகின்றது.

இந்த கோயிலில் உள்ள லிங்கம் தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம். 13.5 அடி உயரம், 60 அடி சுற்றளவு கொண்டது. இங்குள்ள நந்தி சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டு தரையில் அமர்த்தப்பட்டுள்ளது.

இந்த சுண்ணாம்பு கல் நந்தியில் விழும் சூரிய ஒளி கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது பிரதி பலிப்பது மிகவும் சிறப்பானதாகும்.அதே போல் கோயிலின் கருவறையின் அடியில் சந்திரகாந்த கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் வெயில் காலத்தில் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும். குளிர் காலத்தில் குளிர்ச்சியை குறைத்து இதமான வெப்பத் தை தரும்.

வாய்வழியாக கேள்விப்பட்ட நாகலிங்க மரத்தை, முதன் முறையாக பூக்களுடன் பார்க்க நேர்த்தது இந்த நாளில் தான்.முதலாம் இராஜராஜசோழன் ஆட்சியில் கட்டப்பட்ட கங்கைகொண்டசோழபுரத்தில் உள்ள, மிகப்பெரிய கங்கைகொண்டசோழீச்சரர் கோயில், அரியலூர் பகுதியில் மிகச்சிறந்த ஒன்றாகும்.

கி.பி 1023 இல், கங்கை சமவெளியை வெற்றி கொண்ட பின்னர் முதலாம் இராஜேந்திர சோழனால், கங்கைகொண்ட சோழபுரம் எனும் நகரமும் கங்கை கொண்டசோழீச்சரம் எனும் சிவன் கோவிலும், சோழ கங்கம் எனும் ஏரியும் வெற்றியின் நினைவாக அமைக்கப்பட்டது

தமிழ்நாட்டை ஆட்சி செய்த மூவேந்தர்களில் ஒருவரான சோழர்கள் அவர்கள் ஆட்சி காலத்தில் கட்டிய கோயில்கள் சோழர்கள் பாணி கட்டிடக்கலையை உலகுக்கு பறைசாற்றும் விதமாக இன்றளவும் உள்ளது. சோழர்களின் கட்டிடக்கலைக்கு சாட்சியாக விளங்கும் பிரதானமாக இரண்டு கோயில்கள், ஒன்று தஞ்சை பெரிய கோயில், மற்றொன்று இந்த கங்கை கொண்ட சோழீஸ்வரம் கோயில். இரண்டு கோயில்களுமே பார்ப்பதற்கு ஒரே போன்ற தோற்றம் கொண்டவை.

அதேபோல் இரண்டு கோயில்களும் யுனஸ்கோ, நிறுவனத்தால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டு, சோழ மன்னர்களின் கட்டிடக் கலைக்குச் சிறப்பு சேர்கிறது.

இவ்வூரை நிறுவ சுண்ணாம்பினைத் தயாரித்த இடம் சுண்ணாம்புக்குழி என்றும், கோட்டை இருந்த பகுதி உட்கோட்டை என்றும், ஆயுதச்சாலைகள் இருந்த இடம் ஆயிரக்கலம் என்றும் இன்றும் வழங்குகின்றது. இவ்வூருக்காக கட்டுவித்த ஏரி சோழகங்கம் எனப்பட்டது.

சோழப் பேரரசை வென்ற சடையவர்மன் முதலாம் சுந்தர பாண்டியன், சோழர் தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்தை அழித்த போதிலும் இந்த கோயிலுக்கு எவ்வித ஊறும் விளைவிக்கவில்லை என்றும்; மாறாகத் தன் பெயரால் பெருமானுக்குப் பூசை நடத்தினார் என தெரிகின்றது. மன்னர்களில் சிலர் வீரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டே, கலைக்கும் தலைசாய்த்திருக்கின் றனர். வீரம் வேறு, கலை வேறு என பகுத்தறிந்து முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றனர்.மேன் மக்கள் மேன்மக்களே.

சோழர்களின் கட்டிடக்கலையின் அதிசயத்தை காணும் வாய்ப்பு இந்த விடுமுறையில் கிட்டியது பேரின்பம். இந்த இடத்தை விட்டு அகலும் போது, சோழப்பரம்பரைக்கு சொந்தக்காரன் என்கிற மிடுக்கு என்னுள் இன்னும் கொஞ்சம் துளிர்விட்டதை உள்ளூர உணரமுடிந்தது.

திருச்சியிலிருந்து (இங்கிலாந்து) சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top