புதுக்கோட்டை காதி அங்காடியில் தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தொடக்கி
வைத்தார்.
புதுக்கோட்டை சீதாபதி பிள்ளையார் கோவில் அருகில் உள்ள கதர் அங்காடியில், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு காந்தியடிகளின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, தீபாவளி கதர் சிறப்பு விற்பனையினை தொடக்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:இந்திய திருநாட்டின் விடுதலைக்காகவும், தன்னிகரற்ற முன்னேற்றத்திற்காகவும், தன் வாழ்க்கையினையே முழுமையாக அர்ப்பணித்த அண்ணல் காந்தியடிகளின் நினைவுகளை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 -ஆம் நாள் அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதனை முன்னிட்டு, புதுக்கோட்டை சீதாபதி பிள்ளையார் கோவில் அருகில் உள்ள கதர் அங்காடியில், 2022 -ஆம் ஆண்டிற் கான தீபாவளி சிறப்பு விற்பனை இன்றையதினம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 2022-23 ஆம் ஆண்டிற்கு ரூ.125 இலட்சம் கதர் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.94.71 இலட்சம் மதிப்பிற்கு கதர் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நிகழாண்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடியினை அரசு அளித்துள்ளது. இதன்படி கதர் 30 சதவீதமும், பட்டு 30 சதவீதமும் மற்றும் பாலியஸ்டர் 30 சதவீதமும் தள்ளுபடியில் விற்பனை செய்யப்படவுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி ஆகிய பகுதிகளில் காதிகிராப்ட் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள், அரசு மருத்துவமனைகள், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் ஆகியவற்றில் தீபாவளி சிறப்பு விற்பனையை முன்னிட்டு 3 தற்காலிக விற்பனை நிலையங்கள் அமைத்து கதர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் அனைவரும் கிராமப்புற ஏழை பெண்களின் மேம்பாட்டு நலனைக் கருதியும், சிறு தொழில் வல்லுனர்களை ஊக்குவித்து ஆதரவு தரும் வகையிலும், மாநில அரசும் கதர் கிராமத் தொழில்கள் ஆணைக்குழுவும் வழங்கியுள்ள மாபெரும் தள்ளுபடி சலுகையைப் பயன்படுத்தி கதர் இரகங்களை அதிக அளவில் வாங்கி ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
எனவே அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கதர் துணி இரகங்களை அதிக அளவில் வாங்கி இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன்மூலம் அண்ணல் காந்தியடிகளின் கனவுகளை நனவாக்கும் வகையில் நலிவடைந்த கிராமாப்புற கைவினைஞர்கள் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கு ஆதரவை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், உதவி இயக்குநர் (கதர் கிராமத் தொழில்கள்) சந்திரசேகரன், வட்டாட்சியர் விஜயலெட்சுமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.