Close
செப்டம்பர் 20, 2024 1:29 காலை

புதுக்கோட்டை நகராட்சியில் சாலைகளை சீரமைத்திட ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற நகர் மன்றக்கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள்

புதுக்கோட்டை நகராட்சியில் சாலைகளை சீரமைத்திட ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்வதற்கு நகர்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற , நகர்மன்றத் தலைவர் திலகவதிசெந்தில் தலைமை வகித்தார். துணைத் தலைவர் மு. லியாகத்அலி, ஆணையர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதுக்கோட்டை நகரில் பரவலாக 42 வார்டுகளிலும் தற்போது புதை சாக்கடை இணைப்பு வழங்கும் பணிகளும், குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளால் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாகக் காட்சியளிக்கிறது. இதனால், சாலைகளை சீரமைத்திட ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொதுக் கழிப்பறைகள்: நத்தம்பள்ளம், வண்டிப்பேட்டை, காமராஜபுரம் 10ஆம் வீதி, போஸ்நகர் 1 -ஆம் வீதி, அம்பாள்புரம், திருவப்பூர் மாரியம்மன் கோவில், ராஜகோபாலபுரம் வாரிப்பட்டி, நெல்லுமண்டித் தெரு, உசிலங்குளம், பேராங்குளம், திருவள்ளுவர் நகர், கூடல் நகர், மாலையீடு அம்பலக்காரத்தெரு.

மாலையீடு ரவுண்டானா, வட்டாப்பட்டி, பூங்காநகர், மாப்பிள்ளையார்குளம், மேலராஜவீதி, சாந்தாரம்மன் கோவில், திருக்கட்டளை சாலை, காந்தி நகரில் 1, 5 மற்றும் 7ஆம் வீதிகளிலுள்ள பொதுக்கழிப்பறைகள் மேம்படுத்துதல் என மொத்தம் 23 பணிகள் ரூ. 91 லட்சத்தில் மேற்கொள்ளப் படவுள்ளன.

நகராட்சிப் பள்ளி: அடப்பன்வயல், காந்திநகர், உசிலங்குளம், திருவப்பூர், ராஜகோபாலபுரம், கோவில்பட்டி, திருக்கோ கர்ணம், சந்தைப்பேட்டை, போஸ்நகர், மச்சுவாடி, பிள்ளைத் தண்ணீர்ப்பந்தல், மாலையீடு ஆகிய பகுதிகளிலுள்ள நகராட்சிப் பள்ளிகளில் கழிப்பறை மேம்படுத்துதல்.

இவற்றுடன் காந்திநகர் பள்ளிக் கழிப்பறையில் இருந்து புதை சாக்கடையுடன் இணைத்தல், ராஜகோபாலபுரம் பள்ளியில் கூரைதளம், சுவர் வெடிப்புகள், தண்ணீர் கசிவு சீரமைத்தல், தைலாநகர் பள்ளியில் ஆழ்துளைக் கிணறு அமைத்தல், அடப்பன்வயல் பள்ளியில் ஆழ்துளைக் கிணறு அமைத்தல் என மொத்தம் 15 பணிகள் ரூ. 64 லட்சம் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளிகள் இறுதி செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கவுள்ளன.
குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள்:புதுக்கோட்டை நகராட்சியிலுள்ள காமராஜபுரம், அடப்பன்வயல், உசிலங்குளம், திருவப்பூர், தர்மராஜபிள்ளை பள்ளி, காந்திநகர், ராஜகோபாலபுரம், திருக்கோகர்ணம், அசோக்நகர் ஆகிய 9 நகராட்சி ஆரம்பப் பள்ளிகளில் ஏற்கெனவே உள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களின் பழுதுகளை நீக்கும் பணிக்கு ரூ. 3.39 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகளில் தற்போது முதல்வரின் காலை உணவுத் திட்டம் அமலாக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

12 உயர்மின் கோபுர விளக்குகள்: புதுக்கோட்டை நகராட்சியில் 2, 4, 5, 11, 15, 19, 24, 27, 28, 34, 36, 40 ஆகிய வார்டுகளில் மொத்தம் 12 இடங்களில் ரூ. 57 லட்சத்தில் உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்கவும் நகர்மன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. நகரின் பல பகுதிகளில் நிலவும் இருளைப் போக்கவும், பொதுமக்கள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை அடுத்து இந்த மின் விளக்குகள் அமைக்கப்படவுள்ளதாகவும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை நகராட்சியிலுள்ள பொதுக் கழிப்பறைகள் மற்றும் நகராட்சிப் பள்ளிகளிலுள்ள கழிப்பறைகளை மேம்படுத்துவதற்காக 38 பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு குறைந்த மதிப்பீட்டைக் கொடுத்த ஒப்பந்ததாரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். விரைவில் பணி தொடங்கவுள்ள இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 1.55 கோடியாகும்
புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் இவற்றுக்கான தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பன்றி, நாய்களுக்கு கட்டுப்பாடு:
புதுக்கோட்டை நகராட்சிப் பகுதியில் பன்றிப் பண்ணைகள் அமைக்க ஏற்கெனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், நகரின் பல பகுதிகளிலும் சுற்றிவரும் பன்றிகளைக் கட்டுப்படுத்த, குடியிருப்புப் பகுதியில் பன்றிகளுக்கு முழுமையான தடை விதிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த சண்முகாநகர் பகுதியிலுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே நாய்களுக்கான கருத்தடை மையம் ஒன்றை ரூ. 25 லட்சத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top