Close
செப்டம்பர் 20, 2024 3:59 காலை

பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சி

புதுக்கோட்டை

ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பை தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் கவிதாராமு

புதுக்கோட்டை மாவட்டம் பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில், பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின்கீழ், ஆசிரியர்களுக் கான ஒருநாள் பயிற்சி வகுப்பினை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  இன்று (20.10.2022) குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

பின்னர்  மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: தமிழகத்தில் திறமையான தொழில் முனைவோர்களை உருவாக்க, தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமும், பள்ளிக் கல்வித்துறையும் இணைந்து பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  தமிழ்நாடு முதலமைச்சர்  சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் துறை சார்பில், இத்திட்டத்தினை 16.09.2022 -ல் மதுரையில் தொடக்கி வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்களிடையே புத்தாக்க சிந்தனையை ஊக்குவித்து, அவற்றை புதிய கண்டுபிடிப்பு களாக மாற்றி வர்த்தக ரீதியாக தயாரித்து, அவர்களை தொழில் வித்தகர்களாக மாற்ற உறுதி கொண்டுள்ளது. இத்திட்டத்தில் யுனிசெப் நிறுவனமானது மாணவர்களுக்கு பயிற்சி வழங்கும் அறிவு சார் நிறுவனமாக இணைந்து செயல்பட்டு வருகிறது

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12  -ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டி ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்கள் மூலம் மாணவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளித்து சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. மேலும் இத்திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் 40 புதிய மாணவ கண்டுபிடிப்பாளர்களுக்கு ரூ.25,000 முதல் ஒரு லட்சம் வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

இத்திட்டத்தின் முதல் கட்டமாக தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் துறையின் கீழ் இயங்கும், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் பணிபுரியும் கள ஒருங்கிணைப்பாளர் களுக்கும், பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் மாவட்ட சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் கடந்த செப்டம்பர் 21, 22  , 23 ஆகிய மூன்று நாட்கள் சிறப்பு பயிலரங்கம் சென்னையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை
மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவுடன் குழு படம் எடுத்துக் கொண்ட ஆசிரியர்கள்

இத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, தமிழக முழுவதும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் பயிற்சி ஆசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு திட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி சம்பந்தப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இத்திட்டத்தினை கொண்டு சேர்ப்பது பற்றிய பயிற்சி  தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

எனவே மாணவர்கள் இத்திட்டத்தினை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்தார்.பின்னர் பயிற்சிக்கு வந்திருந்த வழிகாட்டி ஆசிரியர்கள் 125 பேருடனும் ஆட்சியர் குழுப்புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

 

இந்நிகழ்வில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், முதன்மைக் கல்வி அலுவலக மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில், பள்ளித் துணை ஆய்வாளர் குருமாரிமுத்து மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top