தீபாவளி இனாம் கேட்டு வருபவர்கள் கொடுக்கும் தொல்லையால் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் எரிச்சலின் உச்சத்துக்கே செல்லும் நிலை உருவாகியுள்ளது.
எந்தக்கட்சி ஆட்சியில் இருந்தாலும் அக்கட்சியின் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகள் வரை தங்களது கட்சி நிர்வாகிகள் முதல் தீபாவளிக்காசு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இந்நிலையில், தீபாவளிக்காசு யார் யாருக்கெல்லாம் கொடுக்க வேண்டும் என்பதில் திட்டமிடலோ வரையறையோ செய்ய முடியாது. அதனால், சாதாரண தொண்டன் முதல் கீழ்மட்ட நிர்வாகிகள வரை அனைவரையும் கவனித்தாக வேண்டும்.
இந்நிலையில், தற்போது திமுக ஆட்சியில் அமைச்சர்களா கவும் எம்எல்ஏ -க்களாகவும் இருப்பவர்கள் தீபாவளிக்காக செலவழித்தாக வேண்டியது கட்டாயம். இதில் ஒவ்வொரு அமைச்சருக்கும் சுமார் ரூ.20 லட்சம் முதல் 60 லட்சம் வரை செலவு பிடிக்கலாம் எனக்கூறப்படுகிறது. எம்எல்ஏக்களும் கணிசமான தொகை செலவு செய்ய வேண்டும்.
இதை சமாளிப்பதில் ஏற்கெனவே அமைச்சராகவும், தொழிலதிபராகவும் இருந்து வருபவர்களுக்கு பிரச்சனை எதுவுமில்லை. ஆனால், புதியதாக பதவிக்கு வந்த அமைச்சர்களாக இருந்தாலும் சரி… எம்எல்ஏ -க்களாக இருந்தாலும் சரி… பெரும்பாலானோர் இந்த தீபாவளியை கடந்து செல்வதில் நெருப்பாற்றில் நீந்துவதைப் போன்ற நிலையில்தான் இருக்கின்றனர். இதில் பலரும் தொடர்பு எல்லைக்கு அப்பாலும்… செல்போன் அணைப்பிலும் இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றால் மிகையில்லை.
இச்சூழலில், புதுக்கோட்டை மாவட்ட அமைச்சர் ஒருவரின் வீட்டில் காலையில் நடந்த காட்சி… நேற்று சட்டப்பேரவை கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர் வருகைக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தனர் கட்சியினரும் நிர்வாகிகளும். வீட்டிலிருந்து அமைச்சர் வெளியில் செல்வதற்காக மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தத போது, பலாச்சுளையை மொய்க்கும் ஈக்களைப் போல மொய்த்தனர். பலர் மனுக் கொடுத்தனர். சிலர் சால்வை அணிவித்து தீபாவளி வாழ்த்துக்கூறினர். அனைவரையும் சமாளித்து வெளியே கார் ஏறச்சென்ற போது, சிறு பத்திரிகைகளின் செய்தியாளர்கள் சிலர் பார்வையில்படும்படி அமைச்சரை எதிர்கொண்டனர்.
அப்போது, திருமயம் தொகுதிவாசி ஒருவர் அமைச்சர் கண்ணில் பட்டுவிட்டார். அவரிடம் தொகுதி ஆட்கள் இங்கே எதற்கு வருகிறீர்கள் என எரிச்சல் கலந்த தொனியில் கூறினார். அவருக்கும் முகம் வாடிப்போனது.
அப்புறம், நிருபர்களைப் பார்த்து உங்களை யார் வரச்சொன்னது என கடுகடுவெனக்கூறிவிட்டு வேகமாகக் காரில் ஏறிச் சென்றுவிட்டார். இது புதுக்கோட்டை மாவட்டத்தி லுள்ள ஓர் அமைச்சரின் நிலைமை. மத்திய, மாநில அரசுகளில் அமைச்சராக இருந்தவர், இருப்பவர். பெரும் தனவந்தராகவும் உள்ள இவரே இப்படி நடந்து கொள்கிறார் என்றால். மற்ற மாவட்டங்களில் மற்ற தொகுதிகளில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி சொல்லவே தேவையில்லை.
அதிமுக ஆட்சியில் இது போன்ற நிலைமையைப் பார்த்ததே இல்லை என முணுமுணுத்தபடி அங்கிருந்து விலகிச் சென்றனர் சிறு பத்திரிகைகளின் நிருபர்களும், அப்பாவி தொண்டர்களும்.