Close
நவம்பர் 22, 2024 12:42 காலை

இயற்கை இடர்பாடுகளிலிருந்து கால்நடைகளை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை அறிவிப்புகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில்  வடகிழக்கு பருவ மழையினால் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளிலிருந்து கால்நடைகளை பாதுகாப்பதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் எடுக்கப்படவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் இயற்கை இடர்பாடுகள் தொடர்பாக கால்நடை பராமரிப்புத் துறை சார்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வருமாறு: மழை நேரங்களில் மரத்தின் அடியிலோ, மின்கம்பங்களின் அடியிலோ, வெட்ட வெளியிலோ கால்நடைகளை கட்டிவைக்க வேண்டாம்.

தாழ்வான பகுதிகளில் உள்ள கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லவும். பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகம் மற்றும் மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை மேற்கொள்ளலாம்.

மேலும், கால்நடை மருத்துவர் செயலியை தங்களுடைய தொடுதிரை அலைபேசியில் ஆண்ராய்டு தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து தங்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவர் குறித்த விவரங்களை அறிந்து தங்கள் தேவைக்கேற்ப தொடர்பு கொள்ளலாம்.

கால்நடைகள் இறந்தவுடன் அதன் விவரத்தை அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவரிடம் தகவல் தெரிவித்து பிரேத பரிசோதனை செய்து அறிக்கையை வட்டாட்சியரிடம் தகவல் தெரிவிக்;கவும். மாவட்டத்தில் உள்ள இலவச கால்நடை அவசர ஊர்தியின் எண்: 1962-ஐ தொடர்பு கொண்டு இலவச சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில், ஒன்றியத்திற்கு 6 விரைவு மீட்புக்குழு வீதம் அமைக்கப்பட்டுள்ளது. விரைவு மீட்புக் குழுக்களில் உதவி இயக்குநர், கால்நடை மருத்துவர் தலைமையில் ஒரு குழுவிற்கு ஒரு கால்நடை உதவி மருத்துவர், ஒரு கால்நடை ஆய்வாளர் மற்றும் ஒரு கால்நடை பராமரிப்பு உதவியாளர் வீதம் 13 ஒன்றியத்திற்கும் 70 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுக்கள் இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் இடங்களுக்கு சென்று தடுப்பு நடவடிக்கை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட கட்டுப்பாட்டில் உள்ள 13 ஒன்றியத்திலுள்ள கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் 130 முதல் பொறுப்பாளர்கள் ஒன்றியம் வாரியாக நியமனம் செய்யப்பட்டு, பொதுமக்கள் அறியும் வண்ணம் கால்நடை மருந்தகங்களில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து கால்நடைகளுக்கு தடுப்பூசி போடவும் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கால்நடைகளில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் தடுப்பூசி பணிகள் மேற்கொள்ள ஏதுவாக உரிய தடுப்பூசி மருந்துகள் மற்றும் அவசர சிகிச்சைக்கான மருந்துகள் போதிய அளவில் இருப்பில் உள்ளது.

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களது அறிவுரையின்படி மழைக்காலங்களில் கால்நடைகளுக்கு தேவைப்படும் தீவனங்கள் உள்ள இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து அவற்றை அவசர காலத்தில் தேவைப்படும் இடங்களுக்கு உடனுக்குடன் கொண்டு செல்ல தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 31 கால்நடை தங்கும் இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏதும் ஏற்படாத வண்ணம் தேவையான உலர் தீவனம் மற்றும் பசுந்தீவனம் மாவட்ட கால்நடை பண்ணையில்; போதுமான அளவு இருப்பில் உள்ளது.

அவசர காலங்களில் தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்களின் விபரம், மண்டல இணை இயக்குநர் 9445001218, உதவி இயக்குநர் கால்நடை நோய்புலனாய்வு பிரிவு புதுக்கோட்டை 9445761990, உதவி இயக்குநர் புதுக்கோட்டை 9344069783, உதவி இயக்குநர் அறந்தாங்கி 9344069783, உதவி இயக்குநர் இலுப்பூர் 9445001213 ஆகும்.

தேசிய கால்நடை இயக்கம் திட்டத்தின்கீழ் மானியத்துடன் கூடிய கால்நடை காப்பீட்டுத் திட்டம்:

தேசிய கால்நடை இயக்கம் திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்டத்தில் 2022-23ஆம் ஆண்டில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 2500 கால்நடைகளுக்கு மானியத்துடன் காப்பீடு மேற்கொள்ள இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் காப்பீடு மேற்கொள்ள 2 சதவிகித பிரீமியத் தொகையில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள கால்நடை வளர்ப்போருக்கு 70 சதவீதம் மானியமும், வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு 50 சதவீதம் மானியமும் வழங்கப்படும்.

இதற்காக யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பசு மற்றும் எருமை வயது இரண்டரை முதல் எட்டு வரையிலும், வெள்ளாடு மற்றும் செம்மறியாடுகளுக்கு ஒன்று முதல் மூன்று வயது வரையிலும், பன்றிகளுக்கு ஒன்று முதல் ஐந்து வயது வரையிலும் இத்திட்டத்தில் காப்பீடு செய்யப்படும். அதிகபட்சமாக ரூ.35,000ஃ- க்கு மேல் காப்பீடு செய்யப்படும் கால்நடைகளுக்கு அதிகப்படியான மதிப்பிற்கான காப்பீட்டு கட்டணத்தை கால்நடை உரிமையாளரே செலுத்த வேண்டும். ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக 5 கால்நடைகளுக்கு இத்திட்டத்தில் காப்பீடு செய்யலாம். ஆர்வமுள்ள கால்நடை வளர்ப்போர், அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தை அணுகி பயன்பெறலாம்.

கால்நடை பராமரிப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின்கீழ் திட்டத்தில் பயன்பெற தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம்:

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பிரதம மந்திரியின் ஆத்மா நிர்பார் பாரத் அபியான் தொகுப்பின் கீழ், ரூ.15000 கோடி நிதி உதவியுடன் கால்நடை பராமரிப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி உருவாக்கப்பட்டு, மத்திய அரசின் கால்நடை பராமரிப்புத் தறை மற்றும் பால்வளத் துறையில் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டம் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், தனியார் நிறுவனங்கள், தொழில் முனைவோர், பிரிவு 8-இன் கீழ் நிறுவனங்கள் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஆகியவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பால் பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டல், உள்கட்டமைப்பு, இறைச்சி பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டல், உள்கட்டமைப்பு, கால்நடை தீவன உற்பத்தியாளர்கள், தொழில்நுட்ப அடிப்படையிலான இனப்பெருக்கப்பண்ணைகள், கால்நடை மருத்துவ தடுப்பூசி மற்றும் மருந்து தயாரிக்கும் அமைப்புகள் மற்றும் கால்நடை கழிவுகள், மேலாண்மைத் திட்டங்கள் மூலம் முதலீடுகளை ஊக்குவிப்பதே நோக்கமாக கொண்டுள்ளது.

மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ள தொழில் துவங்குவதற்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அதன்படி சிறு, குறு பயனாளிகளுக்கு மத்திய அரசின் பங்கு 90%, பயனாளியின் பங்கு 10 % மற்றும் நடுத்தரப் பயனாளிகளுக்கு மத்திய அரசின் பங்கு 85 %, பயனாளியின் பங்கு 15 % மற்றும் பெரிய அளவில் தொழில் முனைவோருக்கு மத்திய அரசின்       பங்கு75 %,  பயனாளியின் பங்கு 25 % ஆகும்.

இத்திட்டத்தில் தொழில் முனைவோராகவும், அதற்கு 3% வட்டி மானியமாகவும் மற்றும் கடன் உத்தரவாதத்தையும் வழங்குகிறது. அதன்படி கால்நடை பராமரிப்புத் துறையின் உள்கட்டமைப்பு நிதியின்கீழ் விண்ணப்பிக்க விருப்பமுள்ள பயனாளிகள் udyamimitra.in இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். மேலும், இத்திட்டம் தொடர்பான தகவல்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு அருகில் உள்ள கால்நடை நிலையங்களை அணுகியும் விபரங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர்  கவிதா ராமு  தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top