புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக விவசாய பணிகளும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. புதுக்கோட்டை பரவலாக மழை தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக தமிழகம், புதுச்சேரி கடற்கரையை இன்று மாலைக்குள் (சனிக்கிழமை) நகர்ந்து வரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக பெரும்பாலான இடங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் புதுக்கோட்டையில் நேற்று அதிகாலை முதல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழையானது தொடர்ந்து பரவலாக பெய்தது. இதேபோல் மாவட்டம் முழுவதும் மழை பெய்தது. கடலோர பகுதிகளான மணமேல்குடி, கட்டுமாவடி, கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் விடுமுறை என்று ஆட்சியர் கவிதாராமு அறிவித்தார். புதுக்கோட்டையில் பெய்த மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிப்படைந்தது. மழை தூறிக்கொண்டே இருந்ததால் மழையில் நனையாமல் இருக்க பலர் ரெயின் கோட் அணிந்தபடியும், குடைகளை பிடித்தப்படியும் இரு சக்கர வாகனங்களில் சென்றதை காணமுடிந்தது. சிலர் மழையில் நனைந்தபடியே சென்றனர்.
கடைவீதிகளிலும் கூட்டம் குறைவாக காணப்பட்டது. மழையின் காரணமாக சாலையோரங்களில் ரெயின் கோட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. இதேபோல் குடைகள் விற்பனையும் களை கட்டியது.
கறம்பக்குடி தாலுகா பகுதியில் வியாழக்கிழமை இரவு தொடங்கிய மழை வெள்ளிக்கிழமை காலை 9 மணிவரை தொடர்ந்து பெய்தது. தொடர்ந்து சாரலுடன் அடைமழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கறம்பக்குடி பகுதியில் பெரும்பாலான இடங்களில் சம்பா நடவு பணிகள் தொடங்கி இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும் குறுவை அறுவடை பணி நடைபெறும் பகுதியில் மழையால் விவசாயிகள் சிரமம் அடைந்தனர். கறம்பக்குடி, மழையூர், ரெகுநாதபுரம் பகுதிகளில் பெய்த தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழந்தது.
கறம்பக்குடி பேரூராட்சி 8-வது வார்டு குளக்காரன் தெருவில் தேங்கிய மழைநீர் பொக்லைன் எந்திரம் மூலம் வடிகால் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது. இதேபோல் மழைநீர் வடிகால் அடைப்பால் ஆங்காங்கே தேங்கிய மழை நீரை பேரூராட்சி ஊழியர்கள் அடைப்பை எடுத்து வெளியேற்றினர். அன்னவாசல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று அதிகாலையில் தொடங்கிய மழை இரவு வரை விட்டு விட்டு பெய்தது.
அவ்வப்போது பலத்த காற்று வீசியது. இந்த மழையால் பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகளும், கடைவீதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. தொடர்ந்து மழையுடன் காற்று வீசியதால் சாலையோரங்களில் இருந்த பதாகைகள் சாய்ந்தன. குண்டும், குழியுமான சாலைகள் வடகாடு பரமநகர் மற்றும் மல்லிகை புஞ்சை பகுதிகளில் ஏற்கெனவே குண்டும், குழியுமான சாலைகள் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக மழைநீர் தேங்கியுள்ளது.
இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் சிரமத்துடன் சென்று வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாய பணிகள் பாதிப்பு கீரமங்கலம், கொத்தமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வியாழக்கிழமை இரவு பெய்ய தொடங்கிய மழை வெள்ளிக்கிழமை மதியம் வரை நீடித்தது. இதனால் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் இருந்து காய்கறிகள் மற்றும் பூக்களை பறிக்க முடியாமல் போனது.
மேலும் கீரமங்கலம் பகுதியில் நடவுப் பணிக்காக வயல்கள் தயார் செய்யப்பட்டு நாற்றுகள் வயல் முழுவதும் விரவிய நிலையில் தொடர் மழையால் நடவு பணிகளும் பாதிக்கப்பட்டன. மின்கம்பங்கள் சேதம் கீரமங்கலம் வடக்கு பகுதியில் வியாழக்கிழமை இரவு மழை பெய்த போது ஒரு தென்னை மரம் மின் கம்பிகளில் சாய்ந்தது. இதில் 2 மின் கம்பங்கள் சேதமடைந்தன.
இதுகுறித்து தகவலறிந்த கீரமங்கலம் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புதிய மின்கம்பங்களை நட்டு மின் இணைப்பை கொடுத்தனர். இதேபோல் பல்வேறு இடங்களில் மழையின் போது மின்கம்பிகளில் விழுந்து கிடந்த மரங்கள், தென்னை மட்டைகளை அகற்றி மின்விநியோகத்தை சீரமைத்தனர். புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை சுமார் 10 மணி வரை நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. சாலையோரங்களில் கழிவு நீரோடு மழை நீரும் கலந்து பெருக்கெடுத்து ஓடியது. இந்த இரண்டு நாள் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது