Close
செப்டம்பர் 19, 2024 11:13 மணி

நகராட்சி அதிகாரிகள் அதிரடி… வீட்டு குடிநீர் இணைப்புகளில் பொருத்திய மின் மோட்டார்கள் பறிமுதல்

புதுக்கோட்டை

குடிநீர் இணைப்பில் நீர் உறிஞ்ச மின்மோட்டார்களை பறிமுதல் செய்த நகராட்சி அதிகாரிகளுடன் ஆணையர் நாகராஜன்

புதுக்கோட்டையில் நகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை மேற்கொண்ட திடீர் சோதனையில் வீட்டுக் குடிநீர்குழாய் இணைப்புகளில் நீரை உறிஞ்சப் பயன்படுத்திய மின் மோட்டார்களை பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை நகரின் குடிநீர்த்தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் கடந்த 1995 -ல் காவிரி கூட்டுக்குடி நீர்த்திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது. அதன் மூலம், புதுகை நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சுமார் 16,480 ஆயிரம் வீடுகளுக்கும், சுமார் 580 -க்கும் மேல்பட்ட பொது இடங்க ளிலும் குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

ஆண்டு தோறும் கோடை காலத்தில் குடிநீர்த் தேவை அதிகரிப்பது வழக்கம். ஆனால், மக்கள் தொகைக்கு ஏற்ப தினமும் 1.30 கோடி லிட்டர் குடிநீர் கிடைத்து வருகிறது. இதன் காரணமாக புதுகை நகர மக்களுக்கு  குடிநீர் கிடைத்து வருகிறது.

சில பகுதிகளில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் விட்டு எனத் தொடங்கி பல்வேறு பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு தலைகாட்ட தொடங்கியது. இதற்கு முக்கியக் காரணம் வீடுகளுக்கான இணைப்புகளைப் பெற்றுள்ள பலர் தங்களது தேவைகளுக்காக மின் மோட்டாரரைப் பொருத்தி நீரை உறிஞ்சத் தலைப்பட்டதால், இடைவெளிவிட்டு கிடைக்கும் குடிநீர் பலருக்கு கிடைக்காமல் போகிறது எனத் தெரியவந்தது.

இப்பிரச்னை குறித்து நகராட்சி நிர்வாகத்துக்கு நூற்றுக் கணக்கான புகார்கள் சென்றன. இதைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் குடிநீர் இணைப்புகளில் மோட்டார் பொருத்துவதைத் தவிர்க்க வேண்டு மெனவும், மீறினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன் அபராதம் விதிக்க நேரிடும் என பல முறை எச்சரிக்கை செய்ததுடன், பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

இது குறித்து நகராட்சி ஆணையர் நாகராஜன் கூறியது:

புதுக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட வீடுகளில் குடிநீர் வினியோகம் செய்யும் பொழுது தொடர்ந்து திருட்டுத்தனமாக மின் மோட்டார்களை வைத்து தண்ணீரில் உறிஞ்சி எடுப்பதாக புகார் வந்ததன் அடிப்படையில், நகராட்சிக் குள்பட்ட மியூசியம் பகுதிகளில் நகராட்சி பொறியாளர் சேகரன், உதவி பொறியாளர் கலியகுமார் ஆகியோர் நேரில் சென்று வீடுகளில் திருட்டுத்தனமாக வைத்து தண்ணீர் உறிஞ்சிய 15 -க்கும் மேற்பட்ட மின் மோட்டார்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று புதுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான நகராட்சிப் பகுதியில் உள்ள 12 கடைகளில் 7 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் வரி செலுத்தாததால் அந்தக் கடைகளை நகராட்சி வருவாய் அலுவலர் விஜயஸ்ரீ தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் பாசித் மற்றும் வைரமூர்த்தி ஆகியோர் கடைகளுக்கு சீல் வைத்தனர்.

நகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் இதே போல் வீடு வீடாக சோதனை நடத்தப்படும். ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட வீடுகளில் மீண்டும் மின் மோட்டார்களைப் பொருத்தி நீரை உறிஞ்சியது கண்டறியப்பட்டால் அந்த வீட்டுக்கான குடி நீர் இணைப்பு உடனடியாகத் துண்டிக்கப்படும். அபராதம் விதிக்கப்படும் என்றார் ஆணையர் நாகராஜன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top