நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் – தீன்தயாள் உபாத்யாய கிராமின் கௌசல் யோஜனா திட்டத்தின் கீழ் இளைஞர் திறன் திருவிழா மற்றும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில், கிராமப்புறங்களைச் சார்ந்த வேலைவாய்ப்பற்ற 18 வயது முதல் 35 வயதுள்ள இளைஞர்களுக்கு, தனியார் துறை மூலம் வேலைவாய்ப்பு அல்லது பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு திருவிழா மற்றும் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது.
நிகழ்சிக்கு, தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்க, திட்ட இயக்குனர் மு.நானிலதாசன் தலைமை வகித்தார். இதில், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு, சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு விழாவைத் தொடக்கி வைத்து பேசியதாவது:
படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு பயன்பெறுமாறும், இளைஞர்கள் நலனில் அக்கறை கொண்டு கழக அரசு நிறைவேற்றி வரும் பல்வேறு நலத்திட்டங்களை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் சீரிய முயற்சியில் இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்ட முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் இளைஞர்களின் வாழ்வு வளம் பெறும் என்றார்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் நெமிலி மற்றும் அரக்கோணம் வட்டங்களைச் சார்ந்த கிராமப்புறங்களில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
நிகழ்ச்சியில், நெமிலி ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் ச.தீனதயாளன், நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதமுத்து, சிவராமன், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்ட அலுவலர்கள், தனியார் கம்பெனிகளின் நிர்வாகிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த மகளிர், இளைஞர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.