புதுக்கோட்டை அலுவலர் மன்றத்தில் குடியரசு நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையேயான வினாடி வினாப்போட்டி நடைபெற்றது.
புதுக்கோட்டை அலுவலர் மன்றத்தில் 74 -ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. மாநிலங்களவை திமுக உறுப்பினர் எம்.எம்., அப்துல்லா முன்னிலையில் நடைபெற்ற விழாவில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா தேசியக்கொடியை ஏற்றினார் .
பின்னர் நடைபெற்ற மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான வினாடி வினாப்போட்டியை மாமன்னர் கல்லூரிப் பேராசிரியர் முனைவர்.கணேசன் மற்றும் ஆடிட்டர் சூரியநாராயணன் ஆகியோர் போட்டியை நடத்தினர். மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளிலிருந்து மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
இதில், முதல் பரிசு வென்ற கந்தர்வகோட்டை வித்யா விகாஸ் பள்ளி மாணவர்களுக்கு ரூ. 2000 மும், புதுக்கோட்டை ராணியார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிக்கு இரண்டாம் பரிசு ரூ. 1,500 -ம், மண விடுதி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிக்கு மூன்றாம் பரிசு ரூ. 1000 மும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
போட்டியில் பங்கு கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மன்ற பொறுப்பாளர்கள் சுப்பிரமணியன் , பேராசிரியர் நடனம் மற்றும் பாண்டியன் முன்னிலையில் பரிசுகளை .அலுவலர் மன்ற பொறுப்பாளர்கள் முத்துக்கருப்பன், அம்பிகாபதி, த. சந்திரசேகரன் மற்றும் கணேசன் வழங்கினர்.