புதுக்கோட்டை மாவட்ட அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் அரசு கல்லூரிகளுக்கு களப்பயணம் மேற்கொள்வது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களின் உயர்கல்வி பயில்வதற்கு ஆர்வமூட்டும் செயல்பாடாக, அரசு கல்லூரிகளுக்கு களப்பயணம் மேற்கொள்வது தொடர்பாக, மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில், அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் உயர்கல்வி பயிலும் எண்ணிக்கையினை அதிகரிக்கும் வகையில், தமிழக அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு சென்று, கல்லூரி வளாகம், கல்லூரிகளில் செயல்படும் பல்வேறு துறைகள், வகுப்பறைகள், நூலகங்கள் போன்ற வசதிகள் சார்ந்தும், கல்லூரியில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்தும் மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் வரும் 27.02.2023 -ஆம் தேதி அன்று அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கு நேரடியாக செல்லும் களப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்களப்பயணத்தில் 107 அரசு மேல் நிலைப் பள்ளிகளிலிருந்து பள்ளிக்கு 10 மாணவ, மாணவிகள் வீதம் 1,070 மாணவ, மாணவிகளும், 107 ஆசிரியர்களும் பங்கேற்க உள்ளனர். இந்த களப்பயணம், குடுமியான்மலை வேளாண் மற்றும் ஆராய்ச்சி மையம், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி, அறந்தாங்கி, ஆலங்குடி, திருமயம், கறம்பக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், மேலைச்சிவபுரி கணேசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் மேற்கொள்ள உள்ளனர். .
களப் பயணத்தின் போது கல்லூரி பேராசிரியர்கள், நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கல்லூரி குறித்தும், பாடப் பிரிவுகள் குறித்தும், அதன்மூலம் கிடைக்கப் பெறும் வேலைவாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைக்கும் வகையில் கல்லூரி முதல்வர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவும், மாணவ, மாணவியர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்யவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
எனவே இந்த களப் பயணத்தில் ஈடுபடவுள்ள மாணவ, மாணவிகள் அனைவரும் உயர் கல்வி குறித்து தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டு, உயர் கல்வி பயின்று அதன் மூலம் பெறப்படும் வேலை வாய்ப்புகள் குறித்து அறிந்து கொண்டு பயன் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், துணை ஆட்சியர் (பயிற்சி) ஜி.வி.ஜெயஸ்ரீ, இணை இயக்குநர் (கல்லூரி கல்வி) குணசேகரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன், வட்டார போக்குவரத்து அலுவலர் ப.ஜெய்சங்கர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.