தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவையின் ஆலோசனைக் கூட்டத்தை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா தாக்கம் உயர்ந்து வருகிறது. இந்தியாவில் இன்று 3 ஆயிரத்து 95 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று அதிகமாக உள்ளது. தமிழகத்தில் குறைவாக இருந்தாலும் தொடக்க நிலையிலேயே கட்டுப்படுத்திட தீவிர கவனம் செலுத்தும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார்.
தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் தான் உள்ளது. இதனால் சில நடைமுறைகளை மீண்டும் பின்பற்ற வேண்டியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு விமான நிலையங்களில் 2 சதவீதம் ரேண்டம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் தினமும் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது.
பொதுவாக எந்த நோய் தொற்றாக இருந்தாலும் பெரும்பாலும் மருத்துவமனைகளில் இருந்தே பரவும். இதன் அடிப்படையில் தான் நாளை முதல் அரசு மருத்துவமனைகளில் உள்நோயா ளிகள், புறநோயாளிகள், மருத்துவர்கள், மருத்துவப் பணியா ளர்கள் மற்றும் மருத்துவமனைக்கு வரும் அனைவரும் 100% கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இதனால் பதற்றம் அடைய வேண்டிய அளவிற்கு பாதிப்பு உள்ளது என்று அர்த்தம் கிடையாது. நம்மை தற்காத்துக் கொள்வது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.