Close
செப்டம்பர் 20, 2024 3:35 காலை

சிவகங்கை மாவட்டத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்: 350 பேருக்கு அமைச்சர் பெரியகருப்பன் வழங்கல்

சிவகங்கை

சிவகங்கையில் நடைபெற்ற விழாவில் நலத்திட்ட உதவி வழங்குகிறார், அமைச்சர் பெரியகருப்பன்

\சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் திருமண நிதியுதவியுடன் கூடிய தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ்350 பயனாளிகளுக்கு, ரூ.1.57 கோடி மதிப்பீட்டில் திருமண நிதியுதவிகளையும்,ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் நடைபெற்ற, திருமண நிதியுதவியுடன் கூடிய தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில், நடந்த நிகழ்வில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பங்கேற்று பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியும், தாலிக்கு தங்கத்தினையும் வழங்கி னார்.

பின்னர் அமைச்சர் பேசியதாவது: முதலமைச்சர், பெண்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர், பேரறிஞர் அண்ணா , இந்திய அளவில் சமூக நீதியை நிலைநாட்டுகின்ற வகையில் ,தங்களது பங்களிப்பை முழுமையாக அளித்து செயல்பட்டனர்.

அவ்வழியில், தமிழகத்தில் சிறப்பான நல்லாட்சியினை வழங்கிக் கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழக அரசு சமூக நீதியை பாதுகாக்கின்ற அரசாக திகழ்ந்து வருகிறது. யாருக்கும் யார் அடிமைப்பட்டவர்கள் அல்ல என்ற சமத்துவத்தின் அடிப்படையும், ஆணுக்கு பெண் சமம் என்ற அடிப்படையும்தான் சமூக நீதியாகும். சமமான உரிமையை பெற வேண்டும் என்றால் அதற்கு அடிப்படையானது கல்வியே ஆகும். அதனடிப்படையில், சமூக மாற்றத்தையும், சமநிலையும் அனைவரும் பெற வேண்டும் என்பதற்காக தொலைநோக்கு சிந்தனையுடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

மேலும், மாணாக்கர்கள் தரமான கல்வியே பெற வேண்டும் என்ற அடிப்படையில் மாணாக்கர்களுக்கான கல்வி உபகரணங்கள், காலை உணவு திட்டம் உள்ளிட்ட திட்டங்களும் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது பள்ளியில் பயின்று வரும் மாணாக்கர்களில் மாணவர்களை விட மாணவியர்கள் தான் அதிகமாக காணப்படுகிறார்கள். அதிக அளவில் வேலை வாய்ப்பினையும் பெற்று வருகிறார்கள். அதன்படி, தமிழகம் 52.7% கல்வி அறிவு பெற்ற சிறந்த மாநிலமாக விளங்கி வருகிறது.

அதில் குறிப்பாக, பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு, தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்து, தற்போது புதுமைப்பெண் என்ற திட்டத்தை அறிவித்து, அத்திட்டமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பெண்கள் உயர்கல்வியை பெற வேண்டும் என்ற அடிப்படையில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர், மேற்கொண்ட பெரும் முயற்சியில்தான் தற்போது பெண் கல்வி ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் ஒன்றான திருமண நிதி உதவியுடன் கூடிய தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் அடிப்படையில், பள்ளிக்கல்வியை பெண்கள் முடித்திருந்தால் 8 கிராம் தங்கத்துடன் ரூ.25,000 நிதி உதவியும் மற்றும் கல்லூரி படிப்பை முடித்திருந்தால் 8 கிராம் தங்கத்துடன் ரூ.50,000 நிதி உதவியும் என அறிவிக்கப்பட்டு, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு நிதி உதவி திட்டத்தின் கீழ் 2011-ஆம் ஆண்டு முதல் 4 கிராம் தங்கம் எனவும், 2018-ஆம் ஆண்டு மே மாதம் முதல் 8 கிராம் தங்கம் எனவும் தமிழக அரசால் வழங்கப்பட்டு, அதன்மூலம் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தின் மூலம் குழந்தை திருமணங்களும் தடுக்கப்படுவதற்கு இவை அடிப்படையாக அமைகிறது.

அதன்படி, நேற்றையதினம் ஈ.வே.ரா.மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் 246 பட்டதாரிகளுக்கும், 51 பட்டதாரி அல்லாதோர்களுக்கும் மற்றும் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் 20 பட்டதாரிகளுக்கும், 13 பட்டதாரி அல்லாதோர்களுக்கும் மற்றும் அன்னை தெரசா அம்மையார் நினைவு ஆதரவற்றோர் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் 13 பட்டதாரிகளுக்கும், 07 பட்டதாரி அல்லாதோர்களுக்கும் என மேற்கண்ட திட்டங்களின் கீழ் 279 பட்டதாரிகளுக்கும், 71 பட்டதாரி அல்லாத பெண்களுக்கும் என, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சார்ந்த மொத்தம் 350 பெண்களுக்கு இத்திட்டத்தின் கீழ் பயன்கள் வழங்கப்பட்டது.

அதில், பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு ரூ.50,000 வீதமும், பள்ளிப்படிப்பை முடித்த பெண்களுக்கு ரூ.25,000 வீதமும், அவர்களது வங்கிக்கணக்கிற்கு மின்னஞ்சல் மூலம் 2022-2023-ஆம் ஆண்டிற்கு செலுத்தப்பட்டுள்ளது. மேலும், மொத்தம் 350 பெண்களுக்கு எட்டு கிராம் தங்கத்தின் மதிப்பு தலா ரூ.43,411 வீதம் ரூ.1,51,93,850 மதிப்பீட்டில் திருமாங்கல்யத்திற்கு தங்கமும் மற்றும் நிதி உதவியாக 279 பெண்களுக்கு தலா ரூ50,000வீதம் ரூ.1,39,50,000 மதிப்பீட்டிலும், 71 பெண்களுக்கு தலா ரூ.25,000 வீதம் ரூ.17,75,000 மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.1,57,25,000 மதிப்பீட்டில் நிதி உதவியும் வழங்கப்படுகிறது.

இதுபோன்று, பெண்களின் வாழ்க்கை தர முன்னேற்றத்திற்கு அடிப்படையாக பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு, பிற மாநிலங்களுக்கு முன் மாதிரியான மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன், மாவட்ட சமூகநல அலுவலர் அன்புகுளோரியா, ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்கள் மஞ்சுளா பாலசந்தர் (சிவகங்கை), லதா அண்ணாத்துரை (மானாமதுரை), சிவகங்கை நகர்மன்றத்தலைவர் சி.எம்.துரைஆனந்த், நகர்மன்றத் துணைத் தலைவர் கார்கண்ணன், மாவட்;ட ஊராட்சி உறுப்பினர்கள் செந்தில்குமார் மற்றும் ஆரோக்கிய சாந்தாராணி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top