Close
நவம்பர் 22, 2024 10:17 காலை

புத்தகம் அறிமுகம்… ஜெயித்துக்கொண்டே இருப்பேன்

புத்தகம் அறிமுகம்

குத்துச்சண்டை வீரர் முகமதலி

1936 பெர்லின் ஒலிம்பிக்ஸ். ஹிட்லர் ஜெர்மனியின் தலைவர். ஆரியர்கள்தான் உலகை ஆளத் தகுதியுள்ளவர்கள் என்ற கொள்கையுடையவர். ஒலிம்பிக் வரலாற்றில் முதல்முறையாக அந்த ஒலிம்பிக் போட்டிகளில் ஒருவர் 4 தங்கப் பதங்களை (100 மீ, 200 மீ, 4×100 தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல்) வெல்கிறார். அவர் அமெரிக்க கறுப்பு இனத்தைச் சேர்ந்த ஜெசி ஓவன்.

( அதற்குப்பிறகு 1984ல் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸ் -ல் தான் மற்றொருவர் அவரும் அமெரிக்க கருப்பு இனத்தவர்தான்-கார்ல் லீவிஸ் – இதேபோல 4 தங்கப்பதக்கம் வென்றார் ). ஜெசி ஓவனுக்கு ஹிட்லர் பதக்கத்தை அணிவிக்கவில்லை. வெளியில் மட்டுமில்லை, அமெரிக்காவிலும் இன்றும் கூட கருப்பு இனத்தவர்களுக்கு இதே நிலைதான்.

உலகக் குத்துச் சண்டை வீரர் முகமலியின் கதையும் இப்படித்தான். ‘காளியஸ் கிளே ‘என்ற அமெரிக்க கருப்பு இனத்தவர், தன் இனத்தவர்களுக்கு நேர்கிற கொடுமைகளைக் கண்டு மதம் மாறுகிறார்.அவருக்கு குத்துச்சண்டை வீரனாக வேண்டுமென்பதே ஒரே லட்சியம். மதம் மாறுகிற-மாறின தன்மைக்கும் சண்டை வீரனாக மகத்தானவனாக வேண்டும் என்கிற தீவிர நம்பிக்கைக்கும் இடையே நிகழும் மோதல் கள்தான் இந்த சரிதம்.

முகமது அலி சொல்ல ரிச்சர்ட் டர்ஹம் என்பவர் எழுதிய The Greatest என்ற தலைப்பிலான முகமது அலி சுயசரிதையின் தமிழ்ச் சுருக்கமே இது.

ரா.கி.ரங்கராஜன் புகழ்பெற்ற எழுத்தாளர். குமுதம் இதழில் நீண்டகாலம் பணியாற்றியவர். சிறுகதையாசியர், நாவலாசிரியர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர் என்ற பண்முகம் கொண்டவர்.

முகமது அலி வெறும் குத்துச்சண்டை வீரர் மட்டுமல்ல, அநீதியை எதிர்த்து போராடும் போராளியும் கூட.”முகமது அலி வெறும் குத்துச்சண்டை வீரர் மட்டுமல்ல; அவர் ஒரு தத்துவம். அவர் ஜெயித்துக் கொண்டேயிருந்தார், இருக்கிறார் என்றால் உடல் வலுவும் சாமர்த்தியங்களும் மட்டும் காரணம் அல்ல.

அவர் சில கொள்கைகளையும் லட்சியங்களையும் அவர்வாழ்க்கைக்கு ஆதாரமாக வைத்திருக்கிறார்” என்று இந்த சுயசரிதையை எழுதிய ரிச்சர்ட் டர்ஹம் குறிப்பிடுகிறார்.
பலரை குத்துக்குள்ளாக்கிய அவரது வலிமையான கைகள், நரம்புச் சிதைவு நோயால் நடுங்கும் கைகளாகிப்போனது துயரம். அந்த நடுங்கும் கைகளோடு ஒரு முறை ஒலிம்பிக் ஜோதியை ஏற்றினார். சென்னை அல்லயன்ஸ் வெளியீடு.

==பேராசிரியர் விஸ்வநாதன், வாசகர் பேரவை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top