Close
செப்டம்பர் 20, 2024 1:36 காலை

விஷ சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

திருச்சிராப்பள்ளி

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

விஷ சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இந்த துறையை சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜியும் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்.  தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது என்று எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

திருச்சி, விழுப்புரம் மாவட்டம் ,மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்த 16 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு அதிகரித்து வருவதால், அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து, கள்ளச்சாராய விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், விஷ சாராய மரணம் குறித்து திருச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தது வேதனையளிக்கிறது. விஷ சாராயம் குடித்து சுமார் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது.

கள்ளச்சாராயம் பெருகிவிட்டதாக சட்டபேரவையிலேயே நான் பேசினேன். முன்பே நடவடிக்கை எடுத்திருந்தால் விஷ சாராய மரணங்களை அரசு தடுத்து நிறுத்தியிருக்கலாம்.   நாளை மரக்காணம் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூற உள்ளேன்.

விஷ சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் பதவியை மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். இந்த துறையை சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்.  தமிழகத்தில் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.

கஞ்சா போன்ற போதைப்பொருட்களை தடை செய்ய முடியவில்லை. கஞ்சா ஒழிப்பு 2.0, 3.0 என ஓ போட்டுக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் 24 மணி நேரமும் டாஸ்மாக் கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. 500 கடைகளை மூடுவதாக சொல்லி 100 கடைகளை திறக்கிறார்கள். விளையாட்டு மைதானம், திருமண மண்டபத்தில் கூட மதுபானத்தை செய்யலாம் என அரசு கூறியுள்ளது. கள்ளச்சாராய மரணங்களுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top