Close
செப்டம்பர் 19, 2024 11:24 மணி

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி… முதலமைச்சருக்கு பாராட்டு விழா..

புதுக்கோட்டை

முதல்வருக்கு புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள பாராட்டு விழா தொடர்பான ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ரகுபதி

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர அனுமதியைப் பெற்றுத் தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா புதுக்கோட்டையில் ஜூன் 5 -ஆம் தேதி நடைபெறுகிறது என்றார் அமைச்சர் கே.என். நேரு

நாட்டின் மூத்த வழக்குரைஞர்களை வைத்து உச்ச நீதிமன்றத் தில் தமிழ்நாடு அரசின் சார்பில் வாதாடி நிரந்தர அனுமதியைப் பெற்றுத் தந்தது முதல்வர் ஸ்டாலினுக்கு
புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டுப் பேரவை சார்பில் வரும் ஜூன் 5 -ஆம் தேதி நடைபெறவுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழாவையொட்டி, திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்  பங்கேற்ற கே.என்.  மேலும் பேசியது:

இப்போது யார் யாரோ ஜல்லிக்கட்டு நாயகர்கள் என்கிறார் கள். உண்மையில் நாட்டின் மூத்த வழக்குரைஞர்களை வைத்து, தமிழ்நாடு அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதாடி ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர அனுமதியைப் பெற்றுத் தந்தது முதல்வர் ஸ்டாலின்தான்.

புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள இந்த பாராட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடந்திட வேண்டும். தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும் விழாவாக நடத்திட, ஜல்லிக்கட்டுப் பேரவையினருடன் சேர்ந்து திமுக நிர்வாகிகள் களப்பணியாற்ற வேண்டும் என்றார் நேரு.

கூட்டத்தில் மாநில பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி பேசியதாவது: 2008 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தவுடன், அன்றைய நாளிலேயே சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை அப்போதைய முதல்வர் கருணாநிதி மேற்கொண்டார்.

சில நாட்களிலேயே, ஏற்கெனவே தடை செய்த நீதிபதிகள் அமர்விலேயே, மீண்டும் தடையை விலக்கி ஆணை பிறப்பிக்கப்பட்டது. அன்றைக்கு கருணாநிதி தொடங்கி வைத்த வெற்றியை, இப்போது உச்சநீதிமன்றத்தில் அவரது மகன் ஸ்டாலின் உறுதி செய்து முடித்திக்கிறார் என்றார் மூர்த்தி.

மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது: உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல்சாசன அமர்வில் வழக்கு வந்தபோதில் இருந்தே ஒவ்வொரு நாளும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள், மூத்த வழக்குரைஞர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தீர்ப்பு வந்தபோது உண்மையில் நாங்களெல்லாம் ஆனந்தக் கண்ணீர் வடித்தோம் என்றார் அனிதா ராதாகிருஷ்ணன்.

மாநிலக் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் பேசியதாவது:

மஞ்சுவிரட்டு, வடமாடு மற்றும் ஜல்லிக்கட்டு என்று மூன்று வகையான போட்டிகள் உள்ளன. இதில் மஞ்சுவிரட்டுதான் காலம் காலமாக தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டாக இருந்து வந்தது என்றார்.

கூட்டத்துக்கு தலைமை வகித்த மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி பேசும்போது, வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தப் பாராட்டு விழா புதுக்கோட்டையில் நடைபெறப் போவது மகிழ்ச்சியைத் தருகிறது என்றார்.

மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் பேசும்போது, தமிழின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அமைந்துள்ள நிலையில், உலகிலுள்ள தமிழர்கள் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் பாராட்டு விழா அமையும் எனக் குறிப்பிட்டார்.

கூட்டத்தில் ஜல்லிக்கட்டு பேரவையின் தலைவர் பி. ராஜசேகரன்  உள்ளிட்ட மாநிலம் முழுவதும் இருந்து வந்திருந்த ஜல்லிக்கட்டுப் பேரவையினர், ஆர்வலர்கள் பேசினர். வடக்கு மாவட்ட திமுக செயலர் கே.கே. செல்லப்பாண்டியன், எம்பி எம்எம் அப்துல்லா, எம்எல்ஏ வை. முத்துராஜா, முன்னாள் எம்எல்ஏ பெரியண்ணன் அரசு, நகர திமுக செயலர் ஆ. செந்தில் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். முடிவில், ஜல்லிக்கட்டு பேரவையின் சார்பில் சின்னையா நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top