புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் நடைபெற்ற வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) குடிகள் மாநாட்டில்மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா88 பயனாளிகளுக்கு ரூ.17,73,000 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) குடிகள் மாநாட்டில், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, தலைமையுரையாற்றி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை (20.06.2023) வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும்; கிராம நிர்வாக அலுவலர்களால் பராமரிக்கப்பட்டு வரும் வருவாய் கிராமக் கணக்குகளை ஒவ்வொரு வருடமும் அந்தந்த பசலியின் (வருடம்) இறுதி மாதத்தில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் துணை ஆட்சியர்களால் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, நடப்பு பசலி 1432 வருடத்திற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராம கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் விராலிமலை வட்டாட்சியர் அலுவலகத்தில், விராலிமலை சரகத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி நிகழ்வில் கிராம கணக்குகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இதில் பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, வீடு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 88 மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இதனையொட்டி குடிமக்கள் பங்கு பெறும் குடிகள் மாநாட்டில், 12 பயனாளிகளுக்கு ரூ.1,44,000 மதிப்பீட்டில் முதியோர் உதவித்தொகையும், 5 பயனாளிகளுக்கு ரூ.60,000 மதிப்பீட்டில் விதவை உதவித்தொகையும், 13 பயனாளிக ளுக்கு ரூ.2,34,000 மதிப்பீட்டில் மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகையும்,
3 பயனாளிகளுக்கு ரூ.67,500 மதிப்பீட்டில் இயற்கை மரண உதவித்தொகையும், 1 பயனாளிக்கு ரூ.8,000 மதிப்பீட்டில் திருமண உதவித்தொகையும், 11 பயனாளிகளுக்கு ரூ.27,500 மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகையும்,
14 பயனாளிகளுக்கு ரூ.9,92,000 மதிப்பீட்டில் இலவச வீட்டு மனைப்பட்டாக்களும், 9 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலும், 20 பயனாளிகளுக்கு ரூ.2,40,000 மதிப்பீட்டில் குடும்ப அட்டை நகலும் என ஆகமொத்தம் 88 பயனாளிகளுக்கு ரூ.17,73,000 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
எனவே தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் இதுபோன்ற நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் உரிய முறையில் பெற்று பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்தார்.
இந்நிகழ்வில், வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, விராலிமலை ஒன்றியக்குழுத் தலைவர் காமு.மு.பி.மணி, அட்மா கமிட்டி தலைவர் இளங்குமரன், வட்டாட்சியர் சதீஸ்குமார், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.