Close
செப்டம்பர் 19, 2024 11:23 மணி

புத்தகம் அறிவோம்… கவிச்சக்கரவர்த்தி சுப்ரமண்ய பாரதி சரிதம்..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

ஆக்கூர் அனந்தாச்சாரி எழுதிய “கவிச்சக்கரவர்த்தி சுப்ரமண்ய பாரதி சரிதம்” என்ற இந்த நூல் 1936ல், தற்போதைய தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் இருந்த கிட்டப்பா மலர்ப் பிரசுராலயத்தால் வெளியிடப்பட்டது.

தற்போது, 2020 ல் பாரதியார் பல்கலைக்கழகம், பாரதி புகழ் பரப்ப உருவாக்கியுள்ள ‘காணிநிலம்’, மகாகவி பாரதியார் உயராய்வு மையத்தின் வழி மறுபதிப்பு கண்டுள்ளது. இந்த நூலின் பிரதி சிற்பி பாலசுப்பிரமணியன் அவர்களிடமிருந்து பெறப்பட்டு பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இந்த நூல் பாரதியின் வரலாற்றை சுறுக்கமாக அழகாக, பேச்சுவழக்கில் எழுதப்பட்டுள்ளது. இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியவர்கள் இருவர். ஒருவர் உ.வே.சா., மற்றவர் பாரதியின் உற்ற நண்பர் பரலி சு.நெல்லையப்பர்.
“பாரதியாரின் வாழ்க்கை வரலாறுகளை ஸாமான்ய ஜனங்களும் நன்கு அறியுமாறு இப்புத்தகம் அமைந்திருக் கிறது.”என்று உ.வே.சா இந்த நூலைப்பற்றிக் குறிப்பிடுகிறார்.

“பாரதியார் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர் ஆக்கூர் அனந்தாச்சாரி. எனவே பாரதியை முழுதுணர்ந்த தன்மையைப் பதிவு செய்வதில் ஆக்கூரார் பெரிதும் முயன்றுள்ளார்.

இந்த நூல் வழியாகத் தமிழ் இலக்கிய உலகிற்குத் தன் பங்களிப்பை அழகுற தந்துள்ளார்” என்று பதிப்புக்குழுவினர் எழுதுகின்றனர்.செங்கோட்டை பகுதியில் வாழ்ந்த ஆசிரியர், இந்த நூலுக்குத் தேவையான தகவல்களை பாரதியின் மனைவி செல்லம்மாள் உட்பட பாரதியுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பலரிடமிருந்து தகவல்களைத் திரட்டி இந்நூலை யாத்துள்ளார்.

பாரதியின் பிறப்பு தொடங்கி, பெற்றோர்கள், கல்வி திருமணம், செல்லம்மாள், அரசியல் வாழ்க்கை, பாண்டிச்சேரி வாழ்க்கை, கவிதைகளின் சிறப்பு, அவரின் வறுமை, பத்திரிக்கைத் தொழில், பாடல்களின் சிறப்பு, என்று அனைத்தையும் அழகுற பதிவு செய்துள்ளார். அவருடைய தோற்றப்பொலிவு பற்றியும் செம்மையாகப் பதிவிட்டுள்ளார்.

புத்தகத்திலிருந்து சில…துளிகள்..”பாரதியார் ஒற்றை நாடி. நடுத்தர உயரம். தலையில் பிரிமனை போல் வால்விட்ட தலைப்பாகை. அகலமான நெற்றி.காலணா அளவிற்கு பொட்டு. ஒட்டிய கண்ணங்கள். விசாலமான கண்கள். துடிதுடிக்கும் மீசை. பேசத் துடிக்கும் நாக்கு. பொத்தானற்ற ஷர்ட். அதன்மேல் கிழிந்த அல்பகா கோட்டு. அதில் ‘சேப்டி பின்’ சொருகப்பட்டிருக்கும்.

ஜோபியில் சதா நோட்டுப் புத்தகமும் பென்சிலும். அவர் நிதானமாக நடப்பதேயில்லை. ஓட்டமும் நடையும்தான் எப்போதும்…”பக்.49. “பாரதியாரை அவரது சகோதரர்’ அண்ணா பிராமணருக்குரிய எக்ஞோபவிதம் (பூணூல்) அணிவதில்லை’ என்று ஒரு தடவைக் கேட்டார்.’நான் பூணூல் தரித்துக் கொண்டு விட்டால் என்னை ஒரேயடியாகப் பிராமண வகுப்பைச் சேர்ந்தவனென முத்திரை போட்டு விடுவார்கள்.

நான் எவ்வளவுக் கெவ்வளவு பிரமணனோ அவ்வளவுக் கவ்வளவு கிருஸ்தவன், மகம்மதியன், யூதன் என்பதை அறிவாய். அன்பே எனது கொள்கை. அன்பே எனது மதம். அன்பை அடிப்படையாகக் கொண்டிருக்கும் எம்மதமும் சம்மதமே ‘என்றார். பக்.61.. காணி நிலம், பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர். 641046.

# பேராசிரியர் விஸ்வநாதன்-வாசகர் பேரவை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top